tamilnadu epaper

"ஆத்தா.. நான் பாஸாயிட்டேன்"

"ஆத்தா.. நான் பாஸாயிட்டேன்"

மனைவியும் மகளும் +2 ரிசல்ட் பார்க்க ப்ரவுசிங் சென்டருக்கு சென்றிருக்க, கடுமையான டென்ஷனோடு அமர்ந்திருந்தான் சேகர்.

 

 "கடவுளே என் மகள் கல்பனா பிளஸ் 2 பாஸாகி விடக் கூடாது பெயில் ஆயிடணும்"என்று வேண்டிக் கொண்டான். 

 

"பாஸானால் காலேஜ் சேர்க்கணும், அதுக்காக லட்சக்கணக்கில் கொட்டணும், எல்லாத்தையும் விற்கணும், பெயில் ஆயிட்டா அதான் சாக்குன்னு படிப்பை நிறுத்திட்டு கல்யாணத்தைப் பண்ணி அனுப்பிட வேண்டியதுதான்" உள்ளுக்குள் தீர்மானித்துக் கொண்டான்.

 

 "ஹையா.... நான் பாஸாயிட்டேன்"குதித்துக் கொண்டு வந்தாள் கல்பனா.

 

   "கடவுளே மார்க்கையாவது கம்மியா வர வெச்சு.... என்னைக் காப்பாத்து" அடுத்த வேண்டல்.

 

   ஆண்டவனும் அவன் ஆசையை நிறைவேற்றும் விதமாய் கல்பனாவிற்கு குறைந்த மார்க்கே அளித்து விட, மனைவியோ, "சேர்த்து வெச்சிருக்கற பணத்தைக் கொடுங்க!" என்று பரிந்துரைக்க, "முடியவே முடியாது" என்று தீர்மானமாய்ச் சொல்லிக் கொண்டு நழுவினான் சேகர்.

 

   அடுத்த நாள் காலை நண்பன் தியாகு வீட்டிற்குச் சென்றிருந்த சேகர் பக்கத்து வீட்டிலிருந்து ஒரு பெண்ணின் அலறல் கேட்க, தியாகுவிடம் விசாரித்தான்.

 

  "அதுவா?... பக்கத்து வீட்டில் ஒரு பொண்ணு....வயசு 25...அந்தப் பொண்ணுக்கு அஞ்சு வருஷமா மாப்பிள்ளை தேடறாங்க!... அமையவே இல்லை!... என்ன காரணம்ன்னா?"

 

  "வரதட்சணை பிரச்சனையா?.. இல்ல ஏதாச்சும் தோஷமா?"

 

 "படிப்பு தோஷம்"

 

  "புரியல!"

 

   "அந்தப் பொண்ணு பத்தாம் கிளாஸ் பெயில்... வர்ற மாப்பிள்ளையெல்லாம் குறைந்தபட்சம் டிகிரியாவது இருந்தால்தான் கட்டிக்க முடியும்னு சொல்றாங்க!... இதுவரைக்கும் அந்த பொண்ணை 50 பேருக்கு மேல் வந்து பார்த்துட்டுப் போயிட்டு... எல்லாருமே படிப்பில்லை என்கிற ஒரே காரணத்தை சொல்ல... அதுவே அந்த பெண்ணுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மையா ஆகி... ..கடைசியில பைத்தியமா ஆயிடுச்சு!... இப்ப ரூமுக்குள்ள போட்டுக் கட்டி வெச்சிருக்காங்க!... அந்தப் பொண்ணுதான் கத்திட்டுக் கிடக்குது" தியாகு சொல்ல,

 

  "என்ன ஆனாலும் சரி... என்னோட மொத்த சேமிப்பும் மொத்தமா கரைஞ்சாலும் சரி.... கல்பனாவை காலேஜ்ல சேர்க்காம விடமாட்டேன்" மனதில் அசைக்க முடியாதவொரு ஒரு உறுதி ஏற்பட்டது சேகருக்கு.

 

(முற்றும்)

 

முகில் தினகரன், கோவை.