tamilnadu epaper

"ஏழையின் சிரிப்பில்!"

"ஏழையின் சிரிப்பில்!"

ராகுல் அந்த கம்மங்கூழை முகத்தைச் சுளித்துக் கொண்டு குடிப்பதைப் பார்த்துக் கவலையானாள் அவன் தாய் கல்பனா.

 

   "ஹும்... இவ்வளவு கஷ்டப்பட்டு இதைக் குடிக்கணுமா?... நான்தான் பழமுதிர் நிலையத்தில் ஆப்பிள் ஜூஸ் வாங்கித் தர்றேன்!னு சொன்னேனல்ல?" கிசு...கிசு குரலில் ராகுலை அதட்டினாள்.

 

     "இல்லைம்மா... கம்மங்கூழ் நல்லாத்தான் இருந்திச்சு!" அவன் சொல்லுவது பொய்யென்று அப்பட்டமாகத் தெரிந்தது அவன் கண்களில்.

 

    எரிச்சலுடன் அந்தக் கம்பங்கூழ் வண்டியை ஆராய்ந்தாள் கல்பனா.

 

   இடதுபுறம் ஒரு அழுக்கு பக்கெட். அதில் அழுக்கோ அழுக்குத் தண்ணீர். அதில்தான் அவ்வப்போது டம்ளர்கள் கழுவப்படுகின்றன.

 

   வலதுபுறம் ஒரு நாற்றம் பிடித்த துண்டு. அதில்தான் அவ்வப்போது கையை துடைத்துக் கொள்கிறான் கம்மங்கூழ் வண்டிக்காரன்.

 

   அவனது தோற்றத்திலும் சுத்தம் என்பது சுத்தமாய் மிஸ்ஸாகியிருந்தது.

 

    நொந்து போனாள் கல்பனா.

 

    இரவு,

 

    தன் பக்கத்தில் படுத்திருந்த ராகுலிடம் நிதானமாய் கேட்டாள், "அந்தக் கம்மங்கூழ் என்ன அவ்வளவு நல்லாவா இருந்துச்சு?"

 

    உதட்டை பிதுக்கினான்.

 

   "அப்புறம் ஏன் அவ்வளவு பிடிவாதமா... 'அதுதான் வேணும்"னு அடம்பிடிச்சு வாங்கிக் குடிச்சே?.

 

    "அம்மா அந்தக் கம்மங்கூழ் வண்டிக்காரனோட மகன் என்னோட வகுப்பில்தான் படிக்கிறான்!... ஒவ்வொரு தடவையும் லேட்டா... லேட்டாத்தான் பீஸ் கட்டுவான்!... சில சமயம் பீஸ் கட்டாததுனால அவனை வகுப்புக்கு வெளியே நிற்க வெச்சிடுவாங்க!... கேட்டா... "எங்க அப்பாவுக்கு நல்லாவே வியாபாரம் ஆகலை... அதனால் தான் பீஸ் கட்ட முடியல!"ன்னு சோகமாச் சொல்லுவான்!... அதான் நம்மால முடிஞ்ச ஒரு வியாபாரம் பண்ணினா அந்தக் காசு... அந்தப் பையனோட ஃபீஸ் கட்ட உதவும் என்பதால்தான் நான் கம்மங்கூழ் வாங்கிக் குடிச்சேன்!.. இது தப்பாம்மா?"

 

   "தப்பே இல்ல ராசா!" என்று சொல்லி அவனை மார்போடு அணைத்துக் கொண்டாள் கல்பனா.

 

(முற்றும்)

 

முகில் தினகரன், கோவை