tamilnadu epaper

"சேதி கேட்டோ?'

"சேதி கேட்டோ?'

சேதி சொல்பவர் : முகில் தினகரன்)

*************************************

  ரஷ்யாவில், கிரெம்ப்ளின் மாளிகைக்கு அருகில் ஒரு சலூன் கடை இருந்தது. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை நாளிலும் அங்கு முடி வெட்டிக் கொள்வதற்கும், முகச்சவரம் செய்து கொள்வதற்கும், நீண்ட க்யூ வரிசையில் மக்கள் நிற்பார்கள்.  

 

   ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று ரஷ்ய பிரதமர் வி.இ.லெனின், அந்த சலூன் கடைக்கு முடி வெட்டிக் கொள்ளச் சென்றார். அங்கிருந்த நீண்ட க்யூ வரிசையைப் பார்த்தவர், அதன் கடைசியில் போய் முறையாக நின்றார். நின்றவர் தன் கையிலிருந்த செய்தித்தாளைப் பிரித்துப் படிக்கலானார். அதனால் அவர் முகம் மறைக்கப்பட்டிருந்தது.  

 

 அவருக்கு முன் நின்றிருந்தவர் முதுகில் அந்த நாளிதழ் அடிக்கடி உரசியதால், எரிச்சலுற்ற அந்த நபர் கோபத்துடன் திரும்பி, லெனின் அவர்கள் படித்துக் கொண்டிருந்த நாளிதழை வேகமாக ஒதுக்கி, அவரைத் திட்டித் தீர்க்க வாயெடுத்தார். ஆனால் அங்கு பிரதமர் நின்று கொண்டிருப்பதைக் கண்டு திகைத்துப் போய் அமைதியானார். உடனே தனக்கு முன்னால் நிற்பவரிடம், இந்த விஷயத்தைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். ஆனால், லெனின் அவர்களோ, அதைக் கண்டு கொள்ளாமல் மறுபடியும் முகத்தை மறைத்துக் கொண்டு நாளிதழ் வாசிக்க ஆரம்பித்தார்.

 

 விஷயம் வரிசையில் நின்று கொண்டிருந்த அனைவருக்கும் தெரிய வர, மரியாதை நிமித்தமாக எல்லோரும் சத்தமில்லாமல் அவரவர் இடத்தை விட்டு அகன்று, பிரதமருக்குப் பின்னால் வந்து நின்று கொண்டனர்.

 

 நாளிதழைப் படித்து முடித்து விட்டு, அதை மடித்த லெனின் அவர்கள் தனக்கு முன்னால் யாருமே இல்லாதது கண்டு, திரும்பிப் பார்த்தார். எல்லோரும் தனக்குப் பின்னால் சென்று விட்டதைப் புரிந்து கொண்டவர், தானும் தன் இடத்திலிருந்து நகர்ந்து மறுபடியும் வரிசையின் கடைசியில் போய் நின்றார்.

 

 அப்போது, அவரை நெருங்கி வந்த ஒரு பெரியவர், “அய்யா...நீங்கள் இந்த நாட்டிற்கே பிரதமர்!...உங்களுக்காக ஏகப்பட்ட பணிகள் காத்துக் கிடக்கும்!..அதனால் நீங்க வரிசையில் நின்று உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாம்...முதலில் சென்று முடி வெட்டிக் கொள்ளுங்கள்...நாங்கள் பிறகு வெட்டிக் கொள்கிறோம்!” என்றார்.

 

 அதற்கு லெனின் அவர்கள், “இந்த நாட்டில் இருக்கும் அனைவருக்கும் ஏதாவது ஒரு பணி நிச்சயம் இருந்து கொண்டுதான் இருக்கும்!...பிரதம மந்திரிக்குத்தான் அநேக பணி...மற்றவர்களுக்கு பணியே இல்லை என்பது, ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல. உங்களுக்கும் ஒரு வேலை காத்துக் கொண்டிருக்கும்!...அதனால்...முதலில் வந்த நீங்களெல்லாம் முடி வெட்டிக் கொண்டு சென்றபின் நான் வெட்டிக் கொள்கிறேன்!..அதுதான் நியாயம்!” என்றார்.  

 

     அங்கிருந்தவர்கள் எவ்வளவோ வாதிட்டும், அதை ஏற்றுக் கொள்ளாமல், வரிசையில் தன்னுடைய முறை வரும் வரை காத்திருந்து அதன் பிறகே முடி வெட்டிக் கொண்டார் பிரதமர் வி.இ.லெனின் அவர்கள்.

 

 இவரைப் போல் ஒருவரை இன்று காண முடியுமா?

 

(சேதி தொடரும்!)