பிள்ளைகளை ஸ்கூல் பஸ்ல ஏத்தி விட்டுட்டு வந்துடறேன்மா "
என்றபடி இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வெளியே போனாள் அபிதா.
எப்போதும் பீரோவில் பூட்டி வைத்திருக்கும் அவளுடைய டைரியை இன்று மறதியாக வெளியே வைத்துவிட்டு போய்விட்டாள் அபிதா.
டைரியில் என்ன இருக்கும் என்று ஆவல் மேலிட அதை எடுத்து படித்தாள் மாமியார்.
" இன்று காபியில் சர்க்கரை போதவில்லை என்பதற்காக கோபத்தில் ஜீனி டப்பாவை என் தலையில் கவிழ்த்தார் என் மாமியார் " .
இன்று என்னை " பிச்சைக்கார நாயே " என்று திட்டினார்.
ஒரு பண்டிகையின் போது, சாப்பாட்டு நேரத்தில் " இது மாதிரி ருசியான சாப்பாட்டை எல்லாம் உன் வீட்டில் சாப்பிட்டு இருக்கிறாயா ? " என்று கேட்டு என்னை அவமானப்படுத்தினார்.
" என்னை ஒரு மனுஷியாகவே மதிப்பது கிடையாது. நாயை விட கேவலமாக நடத்துகிறார்.
இவ்வளவுக்கும் சேர்த்து நான் பழிவாங்குவேன்.
அந்த காலத்துக்காகத்தான்
காத்திருக்கிறேன் "
70 வயதை தாண்டி விட்ட மாமியார் மாமனார் இருவரில் யார் படுத்தாலும்
அவர்களுக்கு இருக்கு கச்சேரி. என்னுடைய சுய ரூபத்தை அவர்களுக்கு காட்டுவேன்.
இப்படியே தொடர்கிறது டைரி. அதை படித்த மாமியாருக்கு வேர்த்து விறுவிறுத்து விட்டது. தான் செய்த தவறுகள் அனைத்தும் அவருக்கு புரிந்து விட்டது.
அந்திம காலத்தை
அமைதியாக கழிக்க வேண்டுமானால் மருமகளின் தயவும் பணிவிடைகளும் அவசியம் என்பதை உணர்ந்தார்.
ஒரு நொடியில் ஞானோதயம் ஏற்பட்டது. தன் குணம் நல்லதாக மாறிவிட்டதை உணர்ந்தார்.
வீட்டுக்குள் நுழைந்த அபிதாவை மாமியார் ஸ்ட்ராங்கான ஆவி பறக்கும் காபியுடன் எதிர்கொண்டார். " காபியை சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடு. மதிய சாப்பாடு நாம் இருவரும் சேர்ந்து பிறகு சமைத்துக் கொள்ளலாம் "
எல்லாம் டைரி செய்த மாயம் என்று தெரிந்து கொண்ட அபிதா, " சரிங்க அத்தை.... ஒரு மணி நேரம் கழித்து நாம் சமையல் வேலையை ஆரம்பிப்போம் " என்று கூறியபடி மகிழ்ச்சியாக ரூமுக்குள் புகுந்து ஓய்வெடுக்க ஆரம்பித்தாள்.
***
வளர்மதி ஆசைக்தம்பி தஞ்சாவூர்