சமயபுரம் மாரியம்மனுக்கு வேண்டுதல். தை மாத முதல் வெள்ளி என்பதால் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகமாகத்தான் காணப்பட்டது . மொட்டை அடிக்க டோக்கன் வாங்கும் வரிசையில் கூட்டம்அதிகம் .முடி காணிக்கை கொடுப்போர் அவசியம் வரிசையில் நின்றால் தான் டோக்கன் கிடைக்கும்.
வரிசையில் நின்று டோக்கன் வாங்கி முடி
எடுப்பதற்கு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆகி விட்டது. சம்பரதாயபடி ஒத்தப்படையில் முடி காணிக்கை கொடுத்தாகிவிட்டது. கோகுல்,கோகுல் மகன் தினேஷ்,அப்பா மூவரும் மொட்டை போட்டுக்கொண்டனர். கோகுல் அம்மாவும் மனைவியும் பூ முடி எடுத்துக் கொண்டனர்.
" இப்பவே மணி பன்னிரெண்டு ஆயிடுச்சி...எப்ப ஸ்தானம் பண்றது...
எப்ப சாமி தரிசனம் பண்றது...குழந்த பசி
தாங்காது ..." கோகுலின் அப்பா.
'மிலிட்டரி சர்வீஸ்' லிருந்து 'ரிடையரட்' ஆனவர். சுறுசுறுப்பும் நேர்மையும் அவர்
மிலிட்டரியில் வேலை செய்ததின் அடையாளம். அனைவரும் குளித்துவிட்டு
புத்தாடை உடுத்திக்கொண்டனர்.
" அடுத்து ஆக வேண்டியத சீக்கிரமா
பாருங்க..." மீண்டும் கோகுல் அப்பாவின் குரல். மாவிளக்கு போடுவதற்கு உண்டான
எல்லா ஏற்பாடுகளையும் கோகுல் அம்மாவும் ,மனைவியும் செய்து கொண்டிருந்தனர். கோகுலும் அப்பாவும்
குழந்தையோடு சற்று அமர்ந்தனர்.
" கூட்டத்த பாத்தா சாமிய தரிசனம்
பண்ண மணிகணக்கா வரிசையில
நிக்கணும் போலிருக்கு...குழந்தைக்கு
ஏதாவது ஆகாரம் கொடுக்கணும்..." கோகுல்
அப்பா சொல்ல,
"வரிசையில நிக்கணுமுன்னு அவசியம் இல்லப்பா... திருச்சி நண்பர் கிட்ட
சொல்லி வி. ஐ. பி பாஸுக்கு ஏற்பாடு பண்ணி வாங்கி வச்சிருக்கேன்...பத்தே
நிமிஷத்துல சாமிய பாத்துட்டு வந்துடலாம்.
கவலை படாதீங்க அப்பா..."
" நீ சொன்னது தான் கவலையா இருக்கு... எனக்கு ஞாயமா படல...எல்லாரும்
கால் கடுக்க வரிசையில வறாங்க...நாம மட்டும் குறுக்கு வழியில எப்படி... என் மனசு ஏத்துகில மகனே..."
"நாம மட்டுமா...வசதியும் வாய்ப்பும் உள்ளவங்க எல்லாருமே இப்படித்தானே போறாங்கப்பா..."
"அவங்க போனா நமக்கென்ன... நான்
எல்லாரும் போற... வசதி வாய்ப்பு இல்லாதவங்க போற... சாதாரண வழிலத்தான் வருவேன்... என் நேர்மைக்கு பரிட்சை வைக்காத... நீங்க வேணுன்னா
'வி.ஐ. பி பாஸ்'ல வாங்க... " சொல்லிவிட்டு
இலவச வரிசைக்கு செல்லும் வழியை
நோக்கி நடந்தார்.
சுகபாலா,
திருச்சி.