அட்சய திருதியை என அறியப்படுவது இந்து மற்றும் சமணர்களின் புனித நாள் ஆகும். அது தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும்.முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாள் அட்சய திருதியை ஆகும்.
காக்கும் கடவுளான திருமாலால் ஆளப்படுவதாகும். மேலும் இந்து புராணங்களில் குறிப்பிடப்படும் முனிவரான பரசுராமரின் பிறந்த நாளாகவும் கொண்டாடப்படுகிறது, அவர் திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறார். இந்து இதிகாசங்களின்படி, அட்சய திருதியை நாளில் திரேதா யுகம் தொடங்கியது, மேலும் பகீரதன் தவம் செய்து இந்தியாவின் மிகப் புனிதமான புண்ணிய நதியான கங்கை நதி சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வரவழைத்தது இந்நாளில்தான் எனக் கூறப்படுகிறது.
"அட்சயா" எனும் சொல் சமசுகிருதத்தில் எப்போதும் குறையாதது எனும் பொருளில் வழங்கப்படுகிறது. மேலும் இந்த நாள் நல்ல பலன்களையும் வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக மங்களகரமான நீண்டகால சொத்துக்களான தங்கம், வெள்ளி, அவற்றினால் செய்யப்பட்ட நகைகள், வைரம் மற்றும் இதர விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் வீடு-மனைகள் போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது. மரபியல் வழிவந்தவர் அட்சய திருதியை நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து நன்மையைக் கொடுக்கும் எனக் கூறுகின்றனர். ஆகையால் ஒரு வணிகத்தினைத் துவங்குவது, கட்டடம் கட்ட பூமி பூசையிடுவது போன்ற புதிய முயற்சிகளை அட்சய திருதியை நாளில் செய்ய பலர் விரும்புகின்றனர்.
இந்த நாளில் செல்வத்திற்கு அதிபதியான குபேரனையும், லட்சுமியையும் வழிபாடு செய்வது சிறப்புக்குாியது. அன்றைய தினம் குபேர லட்சுமி பூஜையும் நடத்தப்படுகிறது. லட்சுமி உருவப்படத்துடன் குபேரரின் அடையாளமான, சுதர்சன குபேர எந்திரமும் வைக்கப்பட்டு வணங்கப்படுகிறது.
*விரதம் இருக்கும் முறை*
அட்சய திருதியை நாள் அன்று, அதிகாலை எழுந்து நீராட வேண்டும். பின்னர் இல்லத்து பூஜை அறையில் அரிசி மாவால் கோலம் போட வேண்டும். அந்த கோலத்தின் மீது பலகை வைத்து, அதன் மீதும் கோலம் போட வேண்டும். ஒரு சொம்பில் அரிசி, மஞ்சள், நாணயம், சிறிய நகைகளை போட வேண்டும். பின்னர் அந்த சொம்பில் நீர் நிரப்பி, அதற்கு சந்தனம், குங்குமம் இட வேண்டும். பின்னர் சொம்பின் மேல் தேங்காய் வைத்து, அதைச் சுற்றிலும் மாவிலையை வைத்து கலசமாக தயார் செய்து பலகையில் வைக்க வேண்டும். மேலும் லட்சுமி நாராயணர், அன்னபூரணி, குபேரன், சிவ-சக்தி ஆகியோரது படங்களில் ஒன்றை வைத்து, அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு மாலையிட வேண்டும்.
அந்தப் படங்களின் முன்பு குத்துவிளக்கு அல்லது காமாட்சி விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். பிறகு கும்பத்தின் முன்பு நுனி வாழை இலையில் அரிசியை பரப்பி, அதன் மீது விளக்கு ஏற்றிவைக்க வேண்டும். அதன் அருகில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து, அதற்கு குங்குமம் இட்டு பூ போட வேண்டும். மேலும் பொன் மற்றும் புதியதாக வாங்கிய பொருட்களை கலசத்திற்கு அருகில் வைத்து தீபாராதனை காட்டி வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் அளவற்ற பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். அட்சய திருதியை நாளில் குலதெய்வ வழிபாடு செய்வதும் முக்கியமானது. தயிர் சாதம் தானம் செய்தால் ஆயுள் கூடும். இனிப்பு பொருள் தானம் செய்தால் திருமணத் தடை நீங்கும். உணவு தானியம் அளித்தால் அகால மரணத்தைத் தடுக்கலாம். கால்நடைகளை தானமாக வழங்கினால், வாழ்வு வளம் பெறும். மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்தால், பாவ விமோசனம் கிடைக்கும். ஏழைகளுக்கு தயிர் சாதம் தருவது, 11 தலைமுறைக்கான பலன்களைப் பெற்றுத் தரும்.
-சிவ.முத்து லட்சுமணன்
போச்சம்பள்ளி