மயிலாடுதுறை, மே 12–
மயிலாடுதுறை அருகே பெருஞ்சேரி கிராமத்தில், 54 அடி உயரம் உள்ள சிவலிங்க வடிவிலான கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா, பெருஞ்சேரி கிராமத்தில், தாருகா வனத்து சித்தர் பீடம் அமைந்துள்ளது. புராண காலத்தில் தாருகா வனத்து முனிவர்கள் ஏவிய யானையை சிவபெருமான் அழித்து, ஆடையாக உடுத்தி கொண்டதாக வழுவூர் தல புராணம் தெரிவிக்கிறது.
இத்தகைய சிறப்புடைய கோவில் அருகே உள்ள பெருஞ்சேரி கிராமத்தில், 54 அடி உயரம் கொண்ட சிவலிங்க வடிவிலான கோவிலும், உட்புறம் ஒரே கல்லில் செய்யப்பட்ட 5 அடி உயரம் உள்ள சிவலிங்கம் தாருகா வனத்து சித்தர் பீடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. சித்தர் பீட நிறுவன தலைவர் கருணாகரன் முன்னிலையிலும், கூனம்பட்டி ஆதீனம் நடராஜ சுவாமிகள் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.