ஆசியாவின் மிக ஆழமான கிணறு சீனாவில் தோண்டப்பட்டுள்ளது. இது குறித்த சிறப்புக்களை சீனா வெளியிட்டுள்ளது. இந்த கிணற்றை வெறும் 580 நாள்களில் தோண்டி இருப்பதாக சீன அரசின் தேசிய பெட்ரோலியக் கழகம் தெரிவித்துள்ளது. பூமிக்கடியில் மொத்தம் 10,910 மீட்டர் ஆழமுள்ள இந்த கிணற்றின் கடைசி 910 மீட்டரை தோண்டுவதற்கு கிட்டத்தட்ட 300 நாள்கள் வரை எடுத்ததாக தெரிவித்துள்ளது.
ஜின்ஜியாங் உய்குர் பகுதியில் உள்ள தக்லிமகன் பாலைவனத்தின் மையப் பகுதியில் பூமியின் பரிமாணம் மற்றும் புவியியல் சார்ந்த ஆராய்ச்சி செய்வதற்கு 'ஷெண்டிடேக் 1' என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக மிக அழமான கிணற்றை தோண்டும் பணியை சீன தேசிய பெட்ரோலியக் கழகம் 2023 மே 30ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், 580 நாள்கள் நீடித்த கிணறு தோண்டும் பணியானது நிறைவுற்றதாக சீன அரசு அறிவித்துள்ளது.
ஆசியாவின் மிக ஆழமான இந்த கிணற்றை தோண்டுவதற்கு மொத்தமாக 580 நாட்கள் எடுத்துக் கொண்டதாகவும், இதன் ஆழம் 10,910 மீட்டர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 12,000 அடி வரை துளையிடும் கருவி பயன்படுத்தப்பட்டதாக அரசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது உலகின் 2 வது ஆழமான கிணறாகும்.
ரஷ்யாவின் கோலா சூப்பர்டீப் போர்ஹோல் எஸ்ஜி-3 என்ற கிணறு, 1989ம் ஆண்டு தோண்டி முடிக்கப்பட்டது. மொத்தம் 12,262 மீட்டர் ஆழமுடைய இந்த கிணறு, உலகில் மனிதர்களால் தோண்டப்பட்ட மிக ஆழமான கிணறாக இருக்கிறது.