tamilnadu epaper

அது ஒரு கனாக்காலம்

அது ஒரு கனாக்காலம்

 

   பரமசிவம் நிழலில் ஈசி சேரைப் போட்டு இடித்துத் தள்ளப்படும் தனது சினிமா தியேட்டரை கண் கலங்கியபடி பார்த்தவாறு இருந்தார்.

 

       சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் அவரது அப்பா காலத்தில் கட்டப்பட்ட சினிமா தியேட்டர் அது..அப்போது சினிமா உலகில் முன்னணியில் இருந்த உச்ச நடிகர் ஒருவர்தான் திறந்து வைத்தார் அதற்குப் பிறகு எத்தனை ஆயிரம் படங்கள்..அதில் வெள்ளி விழா ,நூற்றைம்பது நாள்,

நூறு நாள் ஓடிய படங்கள் தான் எத்தனை எத்தனை ..அதற்கான கேடயங்களை அதில் நடித்த நட்சத்திரங்களே வந்து வழங்கும்போது அவ்வளவு பெருமையாக உணர்வார் பரமசிவம்.

 

     எத்தனை லட்சக்கணக்கான ரசிகர் பட்டாளங்கள் .அவர்கள் எழுப்பும் விண்ணைப் பிளக்கும் கரவொலி கோஷங்கள் ..அவை அத்தனையும் இன்று கானல் நீராகிப் போனது.

     

     நவீன தொழில்நுட்பத்துக்கு ஈடு கொடுத்தும் கூட நஷ்டத்தை தாக்கு பிடிக்க முடியாமல் இடித்துத் தள்ளிவிட்டு காம்ப்ளக்ஸ் கட்டுவது என முடிவெடுத்து விட்டார் பரமசிவம்.

 

    தன்னையும் தன்னுடைய தியேட்டரையும் நம்பி இருந்த தொழிலாளர்களுக்காகவே சிறிது காலம் நடத்தலாம் என்று முடிவு செய்தும் கூட அவரால் முடியவில்லை.

 

    கண்களைத் துடைத்தபடி அமர்ந்திருந்த பரமசிவத்தை அவரது செல்போன் அழைத்தது .

அவரது மனைவி லட்சுமிதான்.

"சொல்லு லட்சுமி " என்றார் .

"ஏங்க! இன்னும் நீங்க காலையிலிருந்து சாப்பிடவே இல்லை. வந்து ஒரு வாய் சாப்பிட்டுட்டு போங்க "என்ற லட்சுமியிடம் "வரேன்" என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.

 

    வாசல் கேட்டைத் திறந்த வாட்ச்மேனிடம் "ரங்கசாமி! வீடு வரைக்கும் போயிட்டு வந்துடுறேன். அடுத்த ஷோக்கு ஆளுங்க வந்துட்டா மேனேஜரை டிக்கெட் கொடுத்து 

படத்தை போடச் சொல்லிடு " என்று

'பழக்க தோஷத்தில் ' சொல்லிவிட்டு போகும் முதலாளி பரமசிவத்தை கண் கலங்கியபடி பார்த்தான் ரங்கசாமி. 

 

 

மு.மதிவாணன்

குபேந்திரன் நகர்

அரூர் 636903