பேருந்து சிக்னலில் நின்ற போது ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்த ரேவதி வெளியே பார்த்தாள்.
சுமார் இருபது... இருபத்திரெண்டு வயதிருக்கும் மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு அழுக்கு இளைஞன் அங்கிருந்த ஒரு சுவற்றில் "அக்கா ஒழிக"... "அக்கா ஒழிக!" என்று எழுதிக் கொண்டிருந்தான்.
ரேவதி தன் அருகே நின்றிருந்த கண்டக்டரிடம் விசாரித்தாள்.
"ஒரு காலத்துல இதே பஸ்லதான் அவன் காலேஜுக்கு போவான்... "அக்னி நட்சத்திரம்" படத்தில் வரும் கார்த்திக் மாதிரி சும்மா 'கல...கல'ன்னு 'துரு... துரு'ன்னு இருப்பான்!"
"இப்ப ஏன் இப்படி?
"இவன் குடும்பம் நல்ல ஆச்சாரமான குடும்பம்... இவனோட அக்கா எவனோ ஒருத்தனைக் காதலிச்சு அவன் கூட ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கிட்டா... அதை தாங்கிக்க முடியாத இவனோட அம்மாவும் அப்பாவும் ஒரே நாள்ல தூக்கு போட்டுக்கிட்டாங்க... அதைத் தாங்க முடியாத இவனும் பைத்தியக்காரனா ஆயிட்டான்... தினமும் இவனை பார்க்கும் போதெல்லாம் என் மனசு கனத்து போயிடும்மா" சொல்லி விட்டு கண்டக்டர் நகர்ந்தார்.
அந்த இளைஞனைக் கூர்ந்து பார்த்தாள் ரேவதி.
அவன் முகத்தில் தன் தம்பி ரகுவின் முகம் தெரிய, சட்டென்று தலையைச் சிலுப்பி அதை அழித்தாள்.
சிக்னலை விட்டு பஸ் கிளம்பியதும், ஒரு சிறிய யோசனைக்கு பின் மொபைலை எடுத்து யாருக்கு கால் செய்தாள் ரேவதி.
"சுந்தர்... நாளைக்கு காலையில் நாம ரெண்டு பேரும் ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கிறதா திட்டம் போட்டிருந்தோமே... அதுல ஒரு சின்ன மாற்றம்"
"என்ன ரேவதி?" எதிர்முனை சுந்தர் கேட்க.
"நீங்க உங்க வீட்டுப் பெரியவங்க கிட்ட நம்ம காதலைச் சொல்லி சம்மதம் வாங்க முயற்சி பண்ணுங்க!... நானும் அதே மாதிரி எங்க வீட்ல பேசறேன்... ரெண்டு பக்கமும் சம்மதிச்சா கல்யாணம் பண்ணிக்கலாம்!.. இல்லையா போராடுவோம்..."
"அப்பவும் அவங்க சம்மதிக்கலேன்னா?'
"காதலைத் தியாகம் பண்ணிட்டு நம்ம குடும்பத்துக்காக வாழ்வோம்!... நம்மால நம்ம குடும்பம் பாதிக்கப்படக் கூடாதல்ல சுந்தர்?"
ஒரு நெடிய அமைதிக்கு பின் சுந்தர் சொன்னான். 'ஆமாம் ரேவதி நீ சொல்றதுதான் சரி... நாம ஓடிப் போயிட்டா... என் வீட்டிலும் நிறைய பாதிப்புகள் வரும்!... என் தங்கச்சிகளுக்கு கல்யாணமே நடக்காது.. நல்லவேளை இப்பவாது நமக்குப் புத்தி தெளிந்ததே... அந்த ஆண்டவனுக்குத்தான் நன்றி சொல்லணும்"
"இல்லை... பைத்தியக்காரனுக்குத்தான் நன்றி சொல்லணும்" என்றாள் ரேவதி.
"பைத்தியக்காரனுக்கா?"
"சுந்தர்...இப்பவெல்லாம் ஆண்டவன் சக மனிதர்கள் ரூபத்தில் வந்து நமக்கு புத்தி புகட்டுவான்.... பைத்தியக்காரன் ரூபத்துல கூட வருவான்" சொல்லி விட்டு இணைப்பிலிருந்து வெளியேறி,
"அப்பாடா" என்றபடி நெஞ்சை தொட்டுக் கொண்டாள் ரேவதி.
(முற்றும்)
முகில் தினகரன், கோயமுத்தூர்