tamilnadu epaper

அன்புச்சுவர்

அன்புச்சுவர்

டிங்!டாங்! அலைபேசியில் மணிச்சத்தம் கேட்டதும் சிறு குழந்தையின் துள்ளலோடு அலைபேசியை எடுத்துப் பார்த்து  செய்தியைப் படித்தவுடன் சிறு குழந்தையாக மாறிப்போனார் ராகவன். அவரையும் அறியாமல் உள்ளம் சிலிர்த்தது.
    
       அவரை நினைத்து அவருக்கே ஆச்சரியமாய் இருந்தது. எப்படி மாறிப்போனோம்?.... எண்ணியவராய் அறையிலிருந்து வெளியே வர மருமகள் லதா இவரையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

       மகன் மாலையில் வந்ததும் இவள் பேசும் வார்த்தைகளுக்குக் கூடுதலாக இரண்டு காதுகள் வேண்டும்.
விதியை நொந்தவராக வெளியே வந்தார். நட்சத்திரம் நிறைந்த வானம் இவரைப் பார்த்துத் தோழமையுடன் சிரித்தது.

          ஒருவேளை தனிமையை அனுபவித்தால் இதுவும் ஒளி வீசாதோ?

     ‌ உடலால் மட்டுமல்ல உள்ளத்தால் விலகி இருப்பதும் கூட ஒரு வகைத் தனிமை தான்.அவருடைய எண்ணங்கள்  பின்னோக்கிச் சென்றது.

         அனுசரித்துப் போகும் மனைவி அளவான பிள்ளைகள் என வசந்தம் வீசிய காலம். அரசுப் பதவி, வங்கிக் கடனில் கட்டிய வீடு என வசதிகளுக்குக் குறைவில்லை.

         தங்களுடைய தேவைகளைக் குறைத்துக் கொண்டு பிள்ளைகளுக்குச் செய்வதில் இருவருமே சளைத்தவர்கள் அல்ல.
   
         அப்பா!.... மகனின் சத்தம் கேட்டுத் திரும்பினார். பத்தாவது படிக்கும் இளைய மகன். என்னப்பா? 
       என்னோட பிரெண்ட்ஸ் எல்லாம் டூர் போறாங்க, நானும் போகணும்.

     பெரியவர்கள் துணையின்றி அவருக்கு அனுப்ப ஒப்புதல் இல்லாவிட்டாலும் மகனின் ஆசைக்காக அனுப்பினார்.

        பஸ் ஏற்றி அனுப்பி விட்டு வந்த சிறிது நேரத்தில் தனக்கு போன் வந்திருப்பதாகப் பக்கத்து வீட்டுப் பெண் கூறவும் அங்கு சென்றவருக்கு அதிர்ச்சி.
   
     டூர் சென்ற மகன் அருவியில் குளிக்கும்போது வழுக்கி விழ, மண்டையில் அடிபட்டு மருத்துவமனையில் சேர்த்திருந்த செய்தியைக் கேட்டதும் இவருக்குத் தலையில் இடி விழுந்தது போலிருந்தது.

   அந்த இரவு பஸ் எதுவும் கிடைக்காமல் வழியில் கிடைத்த லாரியைப் பிடித்து நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு கூட்டி வந்தார்.

      இவருடைய போராட்டம் ஒரு வகையில் என்றால் மனைவியோ கோயில், விரதம் என்று பாசப் போராட்டம் நடத்தினாள்.

     மகன் உடல் தேறி நல்ல நிலைக்கு வந்த  பிறகு தான் இருவரும் நிம்மதியானார்கள்.

   நினைவலைகள் காற்றின் வேகத்தோடு போட்டியிட்டன. 

       அப்பா!..... சப்தம் கேட்டுத் திரும்பினார். அலுவலகத்திலிருந்து மகன் திரும்பியதைப் பார்த்ததும் நடப்புலகிற்கு வந்தார். என்னப்பா வெளில உட்கார்ந்துட்டீங்க? சாப்டீங்களா? உள்ளே வாங்க.... என்றவனிடம் நீ போப்பா ......... நான் வரேன் என்றார்.

      உள்ளே.....

      என்னங்க!... உங்கப்பா செய்யறது கொஞ்சங்கூட நல்லால்ல. ஒரு ஆள் சம்பாத்தியத்தில கடனில்லாம குடும்பம் நடத்தறதே கஷ்டம்.இந்த வயசுல இவருக்கு எதுக்கு ஆண்ட்ராய்டு போன் ?

  ஆமா!  அதுக்கு என்ன இப்போ? அவருக்கும் பென்ஷன் வருது. நீ சொல்ற அளவுக்கு  நாம கஷ்டப்படல என்று இவருக்குச் சாதகமாகத் தான் ஆரம்பித்தான்.

      ஆனால் மனைவியின் பேச்சு அதிகமாக..... இவன் அடங்கிப் போனான்.

    எதுக்குப்பா உங்களுக்கு ஆண்ட்ராய்டு போன் எப்பப் பாரு சின்னப் பையனைப் போல பேசிகிட்டு ..... இது நல்லாவா இருக்கு? மத்தவங்களுக்குத் தொல்லையா இருக்கும்னு தெரியாதா?
என்று மகன் கேட்க,

  இனியும் அமைதியாக இருப்பது தவறு எனப் பேச ஆரம்பித்தார்.

      எதுப்பா தொந்தரவு? எனக்கும் உங்க அம்மாவுக்கும் கல்யாணம் முடிஞ்சு 40 வருஷம் ஆச்சு. ஒரு நாள் கூடப் பிரிஞ்சதில்லை. உன் தம்பிக்கு நல்லா சமைக்க ஆள் வேணும்னு கூட்டிட்டுப் போயிட்டான். எனக்குப் பென்ஷன் வருதுன்னு நீ என்னைக் கூட வச்சுக்கிட்ட. நீங்க நினைச்சா யாராவது ஒருத்தரு ரெண்டு பேரையும் கவனிச்சுக்க முடியும்.
 ஆனா மனசு இல்ல. இப்ப என்ன எதுக்கு ஆண்ட்ராய்டு போன்? அதானே உங்க பிரச்சனை. ஊருல இருக்குற உங்க அம்மா அவ சொல்ல நினைக்கிற விஷயத்தை எனக்கு செய்தியா அனுப்புவா.  நான் சாப்பிட்டாச்சா? மருந்து எடுத்தாச்சா?ன்னு எல்லாத்தையும் கேட்பா. முகம் பார்க்காத தூரத்திலிருக்கிற எங்கள இந்த முகநூலும் வாட்ஸ்அப்பும் தான்  சேத்து வைக்குது. சாதாரண போன்ல செய்தி மட்டும் தான் அனுப்ப முடியும். ஆண்ட்ராய்டு போன் இருந்தா நாங்க ஒருத்தர ஒருத்தரு போன் மூலமாகவாவது பாத்துக்கலாம்னு நினைச்சோம்.  குடும்பம்னா அன்புச் செங்கல் வச்சு சுவர் எழுப்பின கட்டடம். விரிசல் விழ ஆரம்பிச்சா சீக்கிரமே இடிஞ்சு போகும். நான் ஒரு முடிவு எடுத்திருக்கேன். நீங்க சின்ன வயசா இருக்கும்போதிலிருந்து உங்களுக்கு வேண்டியதை செஞ்சு ,உங்களுக்குப் புடிச்ச மாதிரி வாழ்ந்து.... இப்படி உங்களுக்காகவே ஒரு வாழ்க்கையை வாழ்ந்துட்டோம். எந்த கடமைய சரியா செஞ்ச நிம்மதி எனக்கு இருக்கு.இனிமே எங்க வாழ்க்கையை நாங்க வாழப் போறோம்.
 நாங்க முதியோர் இல்லத்தில் போய் தங்கிக்கப் போறோம்.

   அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே  டிங்....டாங்....என்ற  அலைபேசிச் சத்தம் மனைவியிடமிருந்து வந்த குட் நைட் மெசேஜை அவருக்கு மட்டுமல்ல அங்கிருந்த எல்லோருக்கும் சொன்னது.

 *********
தமிழ்நிலா