தேங்காய் மண்டிக்காரன் வந்து, தன் வீட்டு தென்னை மரத்தில் காய்த்து தொங்கும் அத்தனை காய்களையும் பறித்துக் கொண்டு தந்தையிடம் அதற்கான பணத்தை கொடுத்துச் செல்வதை எரிச்சலுடன் பார்த்தான் குமார்.
"இது என்ன லாஜிக்?... எங்க மரத்திலேயே கிட்டத்தட்ட முப்பது காய்கள் காய்க்குது..அதை எடுத்து நாமே கூட பயன்படுத்திக்கலாம்... அதை விட்டுட்டு.. இங்கே மண்டிக்காரனுக்கு வித்திட்டு... அங்கே மளிகைக் கடைக்குப் போய் தேங்காய் வாங்கிச் சாப்பிடுவது என்ன வழக்கம்?"
நேரே தாயிடம் சென்று தன் ஆதங்கத்தை கொட்டினான் குமார்.
"நீ இன்னைக்குத்தான் கேட்கிறே... நான் இதே கேள்வியை உங்கப்பன் கிட்ட இருபது வருஷமா கேட்டுட்டிருக்கேன்.. பதிலே வரலை!" என்றாள் தாய்.
'அட வீட்டுக்குன் கொஞ்சம் எடுத்து வெச்சிட்டு மண்டிக்கு மீதியை கொடுத்தாலாவது ஒரு அர்த்தம் இருக்கு"
அப்போது சமையலறைக்கு வெளியே தந்தையின் கனைப்புக் குரல் கேட்க இருவரும் அமைதியாயினர்.
"அப்பாவோட இந்த செய்கைக்கு நிச்சயம் ஏதேனுமொரு வலுவான காரணம் இருக்கும்... ஆனால் அதை அப்பா சொல்ல மாட்டார்... நாமதான் கண்டுபிடிக்கணும்... எப்படி?... எப்படி?" யோசித்த குமாருக்கு ஒரு ஐடியா புலப்பட்டது.
"கரெக்ட் அப்பாவோட பாலிய சிநேகிதர் முத்தையா கிட்ட கேட்டா தெரிஞ்சிடப் போகுது"
மறுநாளே... முத்தையா வீட்டிற்குச் சென்று விபரத்தை சொல்லி அவரிடம் காரணம் என்னவென்று கேட்டான் குமார்.
"அதுவா?... சின்ன வயசுல அதாவது எட்டாம் வகுப்பு படிக்கும் போது உங்க அப்பா ஒரு நாய் வளர்த்தார்... அதுக்கு "புலி"ன்னு பெயர் வெச்சு ஆசை ஆசையா வளர்த்தாரு... அது மேல உசுரையே வச்சிருந்தார்... ஒருநாள் அவர் ஸ்கூலுக்கு போயிட்டு வந்து பார்த்தப்ப அந்தப் புலியை காணவில்லை... தெருத்தெருவா தேடினார்... காடு மேடெல்லாம் கண்ணீரோட அலைந்தார்!"
"கிடைச்சதா?" குமார் இடை புகுந்து கேட்க.
"எப்படிக் கிடைக்கும்... அதைத்தான் உங்க தாத்தா வேதாச்சலம் கொன்னுட்டாரே?"
"ஏன்? எதுக்கு?"
"அது ஒரு கதைப்பா.. எவனோ ஒருத்தன் திடீர்னு வந்தான்... "விவசாயத்தைப் பெருக்க வழிமுறைகளை சொல்லித் தர்றேன்"ன்னு சொல்லி எதை எதையோ சொன்னான்.. அதுல ஒண்ணை உங்க தாத்தா கப்புன்னு புடிச்சுக்கிட்டார்"
குமார் நெற்றி சுருக்கிப் பார்க்க,
"தென்னை மரத்துக்கு அடியில் ஒரு ஆழக்குழி தோண்டி அதுல செத்துப் போன நாயைப் புதைச்சு வெச்சா... அது கொஞ்ச நாள்ல உரமா மாறி தென்னை மரம் காய்ச்சுத் தள்ளும்"னு சொன்னான்!... அதைக் கேட்டு உங்க தாத்தா உங்க அப்பா வளர்த்த நாயை சத்தமில்லாமக் கொன்னு.. தென்னை மரத்துக்கு அடியில் புதைச்சிட்டார்.."
"அப்புறம் கடைசி வரைக்கும் அப்பாவுக்கு அந்த உண்மை தெரியாமலே போயிடுச்சா?"
"தெரிஞ்சிடுச்சு... தெரிஞ்ச என்ன பண்ண முடியும்?...ஆனா ஒரு விஷயத்தில் உறுதியா நின்னுரு உங்கப்பா... அந்த மரம் காய்க்கிற காய்களை சாப்பிட்டால் அது அந்த நாயோட இறைச்சியைச் சாப்பிடற மாதிரி!ன்னு சொல்லி அதைத் தானும் சாப்பிடாம.. வீட்ல மத்தவங்களும் சாப்பிடாத மாதிரி பார்த்துக்கிட்டார்".
அந்த நிமிடம் வரை தன் தந்தையை கரித்துக் கொட்டிக் கொண்டிருந்த குமார் சட்டென்று அவரை இமய உயரத்தில் கொண்டு போய் நிறுத்தினான்.
-முகில் தினகரன்,
கோயமுத்தூர்.