"லலிதா! ராதிகா பேசினாள். அடுத்த வாரம் ராமி ஆஃபிஸ் வேலையா பதினைந்து நாள்கள் ஹைதிராபாத் வருகிறான். வார இறுதியில் நம்மைப் பார்க்க பெங்களூர் வருகிறானாம்" கோவிலிருந்து வந்த லலிதாவிடம் மகா தேவன் சொன்னார்
"ஏன் அவன் உங்களிடம் பேசலை? நேற்று கூட ஏதோ மெசேஜ் போட்டிருந்தான். இது பற்றி ஒண்ணும் சொல்லலியே" என்று கேட்டாள் , லலிதா.
" அதுவா இப்ப முக்கியம்? இரண்டு நாள் இங்கே நம்முடன் இருக்கப் போகிறான். அதை நினைத்து சந்தோஷப்படு" என்று முடித்துக் கொண்டார் , மகாதேவன்
" அவியலுக்கு காய் வாங்கிண்டு வாங்கோ. அவனுக்கு மலபார் அவியலும் முருங்கைக்காய் வத்தக்குழம்பும்; மைசூர் ரசமும் ரொம்ப பிடிக்கும். ஒரு கரண்டி பாயசம் பண்ணவா" என்று கேட்டாள் லலிதா.
" இரு அவசரப்படாதே! அவன் என்ன ப்ரோக்ராம் போட்டுண்டு வருகிறான்னு தெரியலை. பார்க்கலாம்" என்று பதிலளித்தார் மகாதேவன்
ஒரு வாரம் ஓடியது. வெள்ளிக்கிழமை மாலை ஏர்போர்ட்டிலிருந்து ராமி பேசினான்" என் ஃப்ளைட் பங்களூருக்கு வர இரவு பதினோரு மணி ஆகிவிடும். உங்களை நான் தொந்தரவு படுத்த விரும்பவில்லை.ராதிகா வீட்டுக்குப் போய் தூங்கறேன். காலையில் பார்க்கலாம் " என்றான்.
லலிதா ஏதும் சொல்வதற்குள் மகாதேவன் , ஓகே! ஓகே! என்று சொல்லி ஃபோனை வைத்துவிட்டார்.
மறுநாள் காலை விரைவாக எழுந்திருந்து சமையலில் ஈடுபட்டாள், லலிதா.
மகாதேவன் இரண்டு தெரு தள்ளியிருக்கும் ராதிகா வீடு போய் ராமியைப் பார்த்து வந்தார்." இப்போதுதான் எழுந்திருக்கிறார்கள். காஃபி சாப்பிட்டு ராதிகா, மாப்பிள்ளை கார்த்திக்குடன் வருகிறேன் என்று சொன்னான்." என்றார்
மணி பத்தாயிற்று " வா! நாம் சாப்பிடலாமா? அவர்கள் வரும்போது வரட்டும். நீயும் சாப்பிட்டு மாத்திரை போட்டு சிறிது ஓய்வெடு. காலையில் சீக்கிரம் எழுந்து விட்டாய்" என்றார், கரிசனத்துடன். லலிதாவுக்கும் அயர்வாய் இருந்ததினால் சாப்பிட்டு உறங்கப் போனாள்
சட் என்று ஃபோன் பெல் சிணுங்கியதில் விழித்துக் கொண்டாள். " இல்லை. நாங்கள் சாப்பிட்டு விட்டோம்.ஓகே ஓகே! "என்பது காதில் விழுந்தது.
அவர்கள் காலை உணவு வெளியே ஆர்டர் பண்ணி சாப்பிட்டார்களாம். இன்று மதியம் கார்த்திக் வீட்டில் சாப்பிட கூப்பிட்டு இருக்கிறார்கள். நம்மையும் வரச்சொல்லி கார்த்திக் அப்பாவும் கார்த்திக்கும் பேசினார்கள். இப்போது அவர்கள் இங்கு நம்மை பார்க்க வருகிறார்கள்" என்றதும், லலிதாவுக்கு வருத்தம் மேலிட்டது. கண்ணில் நீர் கட்டியது."நான்தான் அன்றே சொன்னேனே; அவசரப்படாதே; என்று" சொல்வதைப் போல் லலிதாவை ஒரு பார்வை பார்த்தார்; மகா தேவன்.
காஃபியாவது சாப்பிட்டும்; என்று யோசித்தபடி டிகாஷன் தயார் செய்ய போகும் நேரம் அழைப்பு மணி வாசலில் இருந்து வந்தது. ஓடிப்போய் கதவை திறந்தவள், ராதிகாவுடன் வந்த ராமியைக் கண்டதும் " வாடா! வா ! வா! " என்று உற்சாகமாக பேச ஆரம்பித்தாள். அவளுடைய முந்தின நிமிட வருத்தம் போயே போய்விட்டது. மகாதேவன் திகைப்புடன் அவளைப் பார்த்தார். அதுதான் அம்மாவின் மனம்... எப்போதும், அரவணைக்கத் தயாராய்.
சசிகலா விஸ்வநாதன்