வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள்
சிந்திப்பவர் நல் திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே
பந்திப்பவர் அழியாப் பரமானந்தர் பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி! நின் தண்ணளியே.
வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள் - உன்னை என்றும் வணங்குபவர்கள் வானில் வாழும் தேவர்களும் தானவர்களான அரக்கர்களும்
சிந்திப்பவர் நல்திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே - உன்னை என்றும் தியானத்தில் வைத்துச் சிந்திப்பவர் நான்கு திசைகளிலும் நான்கு முகங்களைக் கொண்ட பிரம்மதேவனும், நாராயணனுமே
பந்திப்பவர் அழியாப் பரமானந்தர் - உன்னைத் தன் அன்பால் கட்டிப்போடுபவர் என்றும் அழியாத பரமானந்தப் பொருளான சிவபெருமானே
பாரில் உன்னைச் சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண்ணளியே - ஆனால் இவர்கள் எல்லாரையும் விட்டுவிட்டு இந்த உலகத்தில் உன்னை வணங்கு தரிசனம் செய்பவர்களுக்கு அல்லவா உன் கருணை எளிதாகக் கிடைக்கிறது. எங்கள் தலைவியே. அது வியப்பிற்குரியது.
உன்னை வழிபடுபவர்கள் தேவர்களும், அசுரர்களும்; தியானம் செய்பவர்கள் பிரமனும், மாலும்; உன்னைத் தன் அன்பில் கட்டிப் போட்டுள்ளவர் அழியாத பரமானந்தம் கொண்ட சிவபிரான்; உன்னை தரிசனம் செய்பவர்களுக்கு உன் குளிர்ந்த கருணை எளிதில் கிடைக்கின்றது. ஒரு அதிகாரியையோ, டாக்டரையோ, அரசியல் தலைவரையோ சந்திப்பது எளிதான விஷயம் அல்ல. ஆனால், அன்னையாகிய உன்னை சிந்திக்கும் அடியவர்களுக்கு எளிதில் அருள் புரிவது வியப்பிற்குரியது. இதையே,
*மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம் போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும் ...* (திருமாலும், பிரம்மாவும் காணாத அண்ணாமலையாரை நம் போன்ற அடியார்கள் அறிவோம்) - என்கிறது திருவாசகம்
(தொடரும் / வளரும்)
சிவகுமார் நடராஜன், பரங்கிப்பேட்டை