tamilnadu epaper

அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்

அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்

வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்

 

செவ்வியும் உங்கள் திருமணக் கோலமும் சிந்தையுள்ளே

 

அவ்வியம் தீர்த்தென்னை ஆண்டபொற் பாதமும் ஆகிவந்து

 

வெவ்விய காலனென்மேல் வரும்போது வெளிநிற்கவே.

 

 

வவ்விய பாகத்து இறைவரும் நீயும் = உன்னால் இடது பாகத்தை ஆட்கொள்ளப்பட்ட சிவபெருமானும் நீயும்

 

 மகிழ்ந்திருக்கும் செவ்வியும் = மகிழ்ந்து இருக்கக்கூடிய அழகும்

 

உங்கள் திருமணக் கோலமும் சிந்தையுள்ளே = அம்மையப்பராக திருமண கோலத்தில் உள்ள உங்களது திருருவம் எனது மனதில் நிழலாடுகின்றது

 

அவ்வியம் = அழுக்காறு

 

 தீர்த்தென்னை ஆண்டபொற் பாதமும் ஆகிவந்து = தீர்த்து என்னை ஆண்ட உனது பொன்னார் திருவடிகளும் ஆகி வந்து

 

வெவ்விய = கோபம் கொண்ட

 

 காலனென்மேல் வரும்போது வெளிநிற்கவே = காலன் என்னை நோக்கி வரும்போது என்னை காத்து அருளுக.

 

சிவசக்தி ஸ்வரூபமாக நீயும் சிவனும் அர்த்தநாரீஸ்வரராக இருக்கக்கூடிய அழகு கோலமும், உங்களுடைய திருமண கோலமும், எப்போதும் எனது மனதிலே இருப்பதினால், என் உள்ளே இருக்கும் ஆணவம், மாயை, கன்மம் என்று சொல்லக்கூடிய மும்மலங்களை நீக்கி, அடியேனை ஆட்கொண்ட உனது பொன்னார் திருவடிகளும் ஆகி வந்து, எமன் என்னை நோக்கி வரும்போது வெளிப்பட்டு நின்று என்னை காத்து அருள வேண்டும்.

 

*உயிர் மங்கு பொழுது கடிதே மயிலின் மிசை வர வேண்டும்*

= எனது உயிர் மங்கும் பொழுது மயிலின் மீது விரைந்து வர வேண்டும் - திருப்புகழ்

 

(வளரும் /தொடரும்)

 

 சிவகுமார் நடராஜன், பரங்கிப்பேட்டை