வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்து விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்டதில்லை கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ?
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே
வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்து = வானவெளியில் வந்து நின்ற உனது திருமேனியைப் பார்த்து
விழியும் நெஞ்சும் - என் விழிகளும் நெஞ்சமும்
களிநின்ற வெள்ளம் கரைகண்டதில்லை - களிப்படைந்த பரமானந்தம் என்னும் வெள்ளம் கரை காணாமல் பெருகி நிற்கின்றது.
கருத்தினுள்ளே தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது =
உலக இன்பங்களில் இருந்து விடுப்பட்ட என் மனமானது தெளிவடைந்து ஞானம் பெற்று திகழ்கின்றது.
என்ன திருவுளமோ? = உன் அருள் இவ்வளவு பெருமை வாய்ந்ததா? ஆனந்தத்தையும் அறிவையும் சேர்த்து அளித்த உன் திருவுளத்தின் பெருமையே பெருமை.
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே = அருள் ஒளியும் ஞான ஒளியும் வீசுகின்ற நவகோண சக்கரத்தில் (ஸ்ரீ சக்கரத்தில்) நவசக்தியாய் என்றும் நிலைத்து வாழ்பவளே.
முந்தைய பாடலில் பார்த்த வண்ணம் அர்த்தநாரீஸ்வர சொருபமாகவும், அம்மையப்பராக திருமண கோலத்திலும் எனக்கு காட்சியளித்த அம்மையே, தற்போது வானவெளியில் இருந்து வெளிப்பட்டு எனக்கு காட்சி தருகிறாய். இதனை கண்ட எனது கண்களும், மனதும் ஆனந்த வெள்ளத்தில் கரை புரண்டு ஓடுகின்றது. சதா சர்வ காலமும் உன் நினைவாலேயே வாழ்வதனால் என் மனம் உலக பாசங்களில் இருந்து விடுபட்டு தெளிவடைந்து ஞானத்தை அடைந்து விட்டது. ஸ்ரீ சக்கரத்தில் இருக்கக்கூடிய ஒன்பது முக்கோணங்களிலே நவசக்தியாக அருளக்கூடிய அன்னையே. ஒரு பக்தனை ஆனந்தம் அடைய செய்தது என்ன அருளோ?
(தொடரும் /வளரும்)
சிவகுமார் நடராஜன், பரங்கிப்பேட்டை