உறைகின்ற நின் திருக்கோயில் நின் கேள்வர் ஒரு பக்கமோ
அறைகின்ற நான்மறையில் அடியோ முடியோ அமுதம்
நிறைகின்ற வெண்திங்களோ கஞ்சமோ எந்தன் நெஞ்சகமோ
மறைகின்ற வாரிதியோ பூரணாசல மங்கலையே.
உறைகின்ற நின் திருக்கோயில் = அபிராமி அன்னையே நீ உறைகின்ற திருக்கோயிலானது
நின் கேள்வர் ஒரு பக்கமோ = உன்னுடன் கணவரான (கேள்வர் = கணவர்) சிவபெருமானின் இடப் பக்கமோ?
அறைகின்ற நான்மறையின் அடியோ முடியோ = ஓதப்படுகின்ற நான்கு வேதங்களின் ஆரம்பமோ? அல்லது அவற்றின் முடிவோ?
அமுதம் நிறைகின்ற வெண்திங்களோ = அமுதம் போல் குளிர்ந்த நிலவொளியை வீசும் வெண்மையான சந்திரனோ?
கஞ்சமோ = தாமரை மலரோ? (கஞ்சம் = தாமரை. *கஞ்ச மலர் செங்கையும் ..."* = தாமரை மலர் போன்ற சிவந்த கைகளும் - திருப்புகழ்)
எந்தன் நெஞ்சகமோ = என்னுடைய நெஞ்சமோ?
மறைகின்ற வாரிதியோ - எல்லாவிதமான செல்வங்களும் மறைந்திருக்கும் கடலோ?
பூரணாசல மங்கலையே = எங்கும் பூரணமாய் நிறைந்து நிலையாய் நிற்கும் மங்கல வடிவானவளே!
எங்கும் நீக்கமற நிறைந்து நிலையாய் நிற்கும் மங்கல வடிவான அபிராமி அன்னையே. நீ இருக்கக்கூடிய கோவிலானது உனது கணவரான சிவபெருமானுக்கு அருகிலோ, ஓதப்படுகின்ற வேதங்களின் ஆரம்பத்திலோ? அல்லது முடிவிலோ? குளிர்ச்சி பொருந்திய சந்திரனிலோ? மனித உடலில் ஆறு ஆதாரங்களாக சொல்லப்படக்கூடிய சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞா, ஸ்வாதிஷ்டானம் போன்று தாமரை மலர்களிலோ? எந்தன் நெஞ்சகமோ? அல்லது பல விதமான இயற்கை செல்வங்கள் மறைந்து இருக்கக்கூடிய கடலிலோ?. இந்தப் பிரபஞ்சம் முழுவதும் நீ நிரம்பி இருந்தாலும் மேலே சொன்னவற்றில் நீ மகிழ்ந்து வாழ்கிறாய் போலும்.
(தொடரும் / வளரும்)
சிவகுமார் நடராஜன், பரங்கிப்பேட்டை