tamilnadu epaper

அறிவோம் அபிராமி அந்தாதியை

அறிவோம் அபிராமி அந்தாதியை

பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்

 

காத்தவளே பின் கரந்தவளே கறைகண்டனுக்கு

 

மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே

 

மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே

 

 

பூத்தவளே புவனம் பதினான்கையும் - பதினான்கு உலகங்களையும் படைத்தவளே. புவனங்களை படைத்தவள் ஆதலால், அவள் புவனேஸ்வரி என அறியப்படுகிறாள்.

 

பூத்தவண்ணம் காத்தவளே - எப்படி அவற்றைக் கருணையுடன் படைத்தாயோ அதே போல் காப்பவளே

 

பின் கரந்தவளே - பின் அவற்றை திரோதான சக்தியால் மறைத்துக் கொள்பவளே

 

கறைகண்டனுக்கு மூத்தவளே - பாற்கடலைக் கடைந்த போது எழுந்த ஆலகால விஷத்தை உண்டதால் கறை ஏற்பட்ட கழுத்தினை உடைய சிவபெருமானுக்கும் மூத்தவளே. அம்பாள் சிவனுக்கு மூத்தவளா என்று ஒரு கேள்வி எழலாம். 'ஆயுங் அறிவும் கடந்த ஈசனுக்கு தாயும் மகளும் தாரமும் ஆமே' என்பார் திருமூலர். சக்தி தத்துவத்திற்கு அடுத்து தான் சதாசிவ தத்துவம் வருகின்றது. ஆகையால், சக்தி ஆனவள் மூத்தவளாக கருதப்படுகிறாள். 

 

என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே - என்றைக்கும் முதுமையடையாமல் இளமையாகவே இருக்கும் முகுந்தனுக்கும் / பெருமாளுக்கும் இளையவளே

 

மாத்தவளே - மாதவம் செய்து சிவனை அடைந்தவளே

 

உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே - உன்னையன்றி மற்றோர் தெய்வத்தை நான் வணங்குவேனா?

 

 

பதினான்கு உலகங்களும் உனது திருவருளால் படைத்தவளே எவ்வாறு படைத்தாயோ அவ்வாறே காப்பவளே, பாற்கடலில் வாசுகி என்னும் பாம்பை மத்தாக கொண்டு கடைந்த போது ஏற்பட்ட அமுதத்தை பிரித்துக் கொள்வதில் தேவர்களிடமிருந்து பலம் கொண்ட அசுரர்கள் பெற முயன்ற போது அதனை தடுத்து உட்கொண்டு. அவ்விஷம் கழுத்தில் வரும் போது உமையவள் அதை தடுத்து நிறுத்தியதால் சிவனது கழுத்தில் நீல நிறமானது ஏற்பட்டது. அதனால் சிவனுக்கு திருநீலகண்டர் என பெயர் ஏற்பட்டது. அந்த திருநீலகண்டரின் சதாசிவ தத்துவத்திற்கு முன்பு தோன்றிய சக்தி தத்துவம் ஆகிய அன்னையை. நான் உன்னை இன்றி மற்றவரை தெய்வமாக வழிபடுதல் முறையாகுமா?

 

(தொடரும் / வளரும்)

 

 சிவகுமார் நடராஜன், பரங்கிப்பேட்டை