என்ன சார் உங்க மனைவி லதா ஆறு மாசத்துக்கு முன்னாடியே மேனேஜர் ஆகி... மாசம் அம்பதாயிரம் சம்பளம் வாங்குறது உங்களுக்குத் தெரியாதா?" லதாவுடன் பணிபுரியும் கேசவன்" />
"என்ன சார் உங்க மனைவி லதா ஆறு மாசத்துக்கு முன்னாடியே மேனேஜர் ஆகி... மாசம் அம்பதாயிரம் சம்பளம் வாங்குறது உங்களுக்குத் தெரியாதா?" லதாவுடன் பணிபுரியும் கேசவன் சொல்ல, சும்மாவாகிலும், "தெரியும்..தெரியும்" என்று சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்த விஜய் மனசுக்குள் பொருமினான்.
"என்னவொரு நெஞ்சழுத்தம்... ஆறு மாசமா என்னிடம் இருபதாயிரத்தைக் கொண்டு வந்து கொடுத்து, "இந்தாங்க இந்த மாச சம்பளம்"னு பொய் சொல்லியிருக்காளே... ஏன்?... எதுக்கு இந்தக் கள்ளத்தனம்?... எனக்குத் தெரியாம வேற எவன் கூடவாச்சும்.... சேச்சே.... லதா அப்படிப்பட்டவளில்லை"
தாறுமாறாகச் சிந்தித்து மனம் தளர்ந்து போனவன், "சரி... இன்னிக்கு கேட்டே விடலாம்!' தீர்மானித்தான்.
மாலை ஆறு மணிக்கு வீடு வந்து சேர்ந்த லதாவிடம் நேரடியாகவே கேட்டான். அவள் பதிலேதும் பேசாமல் மழுப்பலாய்ச் சிரிக்க, அவன் கோபமானான். "என்னடி சிரிக்கறே?.... எவனுக்குடி கொண்டு போய்க் கொடுக்கிறே மீதிப் பணத்தையெல்லாம்?". வார்த்தைகளை நெருப்பாய்க் கொட்டினான்.
அந்த நெருப்பு வார்த்தைகள் லதாவின் சுயமரியாதையைச் சுட்டுவிட, வேக வேகமாய் வீட்டிற்குள் சென்று பேங்க் பாஸ் புத்தகத்தைக் கொண்டு வந்து கொடுத்தாள்.
வாங்கிப் பார்த்த விஜய், "என்னடி உன் பேர்ல டெபாசிட் போட்டிருக்கே?" கேட்டான்.
"ஆனால் உங்களைத்தான் நாமினியா போட்டிருக்கேன்" என்றாள் லதா பதிலடியாக.
"இதை என்கிட்ட சொல்லிட்டே செஞ்சிருக்கலாமே?"
"சொல்லியிருக்கலாம்... ஆனா சொல்லியிருந்தா வேற மாதிரியான பிரச்சினை வந்திருக்கும்!" என்றாள் லதா
"எப்படி....எப்படி?"
"இப்போ உங்க சம்பளம் 25 ஆயிரம்.... நீங்க ஒரு சாதாரண கிளார்க்.... என்னோட சம்பளம் 50,000... நான் மேனேஜர்... இந்த உண்மை உங்களுக்கு தெரிஞ்சா நீங்க தாழ்வு மனப்பான்மைல ரொம்ப நொந்திடுவீங்க!... அதனாலதான் என் சம்பளம் 50,000மா இருந்தும் உங்க கிட்டே 20 ஆயிரம்னு சொல்லிட்டு மீதியை பேங்க்ல போட்டு வெச்சேன்"
விஜய் லதாவை நேருக்கு நேர் பார்க்க.
"ஆமாங்க... அப்படி ஒரு காம்ப்ளக்ஸ் உங்க மனசுல வந்துடுச்சுன்னா... நம்ம குடும்ப வாழ்க்கைல சந்தோஷம் அழிஞ்சு போயிடுங்க!... அதனாலதான் நீங்களும் பதவி உயர்வு பெற்று... என்னை விட அதிகச் சம்பளம் வாங்கும் போது நான் உண்மையைச் சொல்லிடலாம்னு காத்திருந்தேன்... அதுக்குள்ளார... யாரோ... " சன்னமாய் அழுதாள் லதா.
அவளை இறுக அணைத்துக் கொண்ட விஜய், "ஸாரி....லதா... என்னை மன்னிச்சிடு!" என்று சொல்ல,
அவன் மார்பில் செல்லமாய்க் குத்தினாள் லதா.
-முகில் தினகரன்,
கோயமுத்தூர்.