ஆடி.. பெயர் வந்தது ஏன்?
?தமிழ் மாதத்தின் ஒவ்வொரு பெயருக்கும் ஒவ்வொரு பொருள் உண்டு. அதன்படி, அம்மனுக்கு உகந்ததும், விழாக்களுக்கும் பஞ்சமில்லாத ஆடிமாதத்திற்கு என தனிச் சிறப்பு உண்டு. அப்படி சிறப்பு வாய்ந்த இந்த மாதத்திற்கு ஆடி என பெயர் வந்தது
?பெளர்ணமியன்று சந்திரன் எந்த நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறாரோ அந்த நட்சத்திரமே மாதங்களின் பெயராக அமைந்திருக்கும். சித்திரையில் சித்திரை நட்சத்திரத்திலும், வைகாசியில் விசாகத்திலும், ஆனியில் அனுஷத்திலும் பெளர்ணமி அமையும். ஆடியில் ஆஷாட நட்சத்திரத்தில் பெளர்ணமி இருக்கும். ஆஷாடத்தில் இரண்டு உண்டு. முதலில் வருவது பூர்வ ஆஷாடம். பின்னர் வருவது உத்தர ஆஷாடம். பூர்வ ஆஷாடம் என்பது பூராடம் என்றும், உத்தர ஆஷாடம் உத்திராடம் என்றும் சொல்லப்படுகிறது.
?உத்திர ஆஷாடத்தில் பெளர்ணமி வரும் ஆடி மாதத்தை வடமொழியில் ஆஷாடீ என்று கூறப்பட்டது. அதுவே தமிழில் ஆடி என்று மருவி விட்டது. இவ்வாறு ஆடி மாதம் பிறந்ததாகச் சொல்வர்.
*புராணக்* *கதை* :
?ஆடி என்பது ஒரு தேவமங்கையின் பெயர். ஒரு சமயம் பார்வதி தேவி, ஈசனைப் பிரிந்து தவம் செய்யும் நிலை ஏற்பட்டது. சிவபெருமான் தனிமையில் இருப்பதை அறிந்த ஆடி என்னும் தேவகுல மங்கை பாம்பு உருவம் எடுத்து, கயிலையின் உள்ளே யாரும் அறியா வண்ணம் நுழைந்தாள். பிறகு பார்வதி தேவியாக உருமாறி சிவபெருமான் அருகில் சென்றாள்.
?அப்போது ஒரு கசப்பான சுவையை சிவபெருமான் உணர்ந்தார். தன்னை நோக்கி வந்தவள் பார்வதி அல்ல என்பதை அறிந்து, தன் சூலாயுதத்தால் ஆடியை அழிக்க முயன்றார். அப்போது சூலாயுதத்திலிருந்து வெளிப்பட்ட தீப்பொறி ஆடியை புனிதமடையச் செய்தது.
?அவள் ஈசனை வணங்கி, ஒரு நிமிடமாவது தங்கள் அன்பான பார்வை என்மீது பட வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு நடந்துகொண்டேன். என்னை மன்னித்தருள வேண்டும் என்று வேண்டினாள். ஆனால் சிவபெருமான், என் தேவி இல்லாத சமயம் நீ அவளைப் போல உருமாறி வந்தது தவறு. எனவே, பூவுலகில் கசப்புச் சுவையுடைய மரமாகப் பிறப்பாய் என்றார்.
?அவள் விமோசனம் கேட்க, கவலை வேண்டாம், நீ மரமாகிப் போனாலும் ஆதிசக்தியின் அருளும் உனக்குக் கிடைக்கும். சக்தியை வழிபடுவது போல் உன்னையும் வழிபடுவார்கள். ஆடியாகிய உன் பெயரிலேயே ஒரு மாதம் பூலோகத்தில் அழைக்கப்படும். அந்த வேளையில் நீ கசப்பு குணம் கொண்ட மரமாக இருந்து மக்களுக்கு நல்லதைச் செய்வாய் என்று அருளினார்.
?ஆடி என்ற தேவலோகத்துப் பெண் தான் பூலோகத்தில் வேப்ப மரமாகத் திகழ்கிறாள். ஈசனின் சாபமே அவளுக்கு வரமாக மாறியது. தெய்வாம்சம் பொருந்திய வேம்பு ஆதிசக்தியின் அம்சமாக உள்ளது. நோய்கள் பலவற்றை குணமாக்கும் சக்தி கொண்டவளாக திகழ்ந்தாள் அந்த மங்கை. இவ்வாறு ஆடி என்ற பெயர் வந்தது என்பதை புராணக் கதை கூறுகிறது.
*ஆடி* *மாத* *சிறப்புகள்* :
?ஆடி மாதத்தில் வரும் நான்கு செவ்வாய்க்கிழமைகளிலும், அம்மன் கோவில்களுக்கு சென்றால் எண்ணிய காரியம் ஈடேறும். இந்நாளில், பெண்கள் அதிகாலையில் குளித்து, குலதெய்வ வழிபாடு நடத்திய பின் துர்க்கை அம்மன், முருகன் கோவில்களுக்கு சென்று வழிபடுவது சிறப்பு.
?வசதியுள்ளவர்கள், கடைசி செவ்வாய்க்கிழமை அன்று குழந்தைகளை வீட்டுக்கு வரவழைத்து அவர்களை தெய்வமாக வழிபட்டு விருந்தளிக்கலாம். ஆடி செவ்வாய்க்கிழமைகளில் அம்பாளை வழிபட்டு, மங்கல கௌரி விரதம் கடைபிடிப்பதாலும் விசேஷ பலன்கள் கைகூடும்.
?ஆடி மாதம் துளசி வழிபாடு அரிதான பல பலன்களை தரும். ஆடி மாதம் வளர்பிறை நாட்களில் துளசியை வழிபட்டு வந்தால், ஐஸ்வர்யம் பெருகும். நீண்ட ஆயுள் கிடைக்கும்.
?ஆடி வெள்ளி வழிபாடு செய்வது சகல பாக்கியங்களையும் அள்ளித்தரும். திருமண பாக்கியம் கைகூடி வரும். புதுமண தம்பதியருக்கும், நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் எதிர்பார்த்திருப்போருக்கும் விரைவில் குழந்தை பாக்கியம் உண்டாகும். சுமங்கலிப் பெண்கள் கணவனின் ஆயுள் அதிகரிக்கவும், திருமணமாகாத பெண்கள் விரைவில் திருமணம் கூடி வரவும் விரதம் மேற்கொள்கின்றனர்.
எம் ஏ நிவேதா ____
அரவக்குறிச்சிப்பட்டி ___
திருச்சி __620015_