கோலாப்பூர் மஹாலக்ஷ்மி* (அம்பாபாய் மந்திர் என்றும் அழைக்கப்படுகிறது) மஹாராஷ்டிரா
அம்மனின் சக்தி பீட வரிசையில், கரவீரத்தலம் என்று அழைக்கப்படும் கோலாப்பூர் தலத்தில் தேவியின் கண்கள் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இத்தலத்தில் மகாலட்சுமி என்ற திருநாமத்துடன் தேவி அருள்பாலிக்கிறார். தேவியுடன் திருமாலும் இங்கு கோயில் கொண்டிருக்கிறார்.
பிரளய காலத்தில் கடல் பொங்கியதால், அனைத்து இடங்களும் மூழ்கின. இப்பகுதியை மட்டும் அன்னை மகாலட்சுமி, தன் கரங்களின் வீரத்தால் உயர்த்தி நிறுத்தினார். அதனால் இத்தலம் கரவீரத்தலம் என்று போற்றப்படுகிறது.
கோலாப்பூர் தலத்தில் வீற்றிருக்கும் மகாலக்ஷ்மி விக்ரஹம், 40 கிலோ எடை கொண்ட மணிக்கற்களால் அமைந்துள்ளது. அன்னை மகாலக்ஷ்மி 3 அடி உயரத்தில் நான்கு கரங்களுடன், மகுடம் தரித்து, அருள்பாலிக்கிறார். இவரது வாகனமான சிங்கம் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. அன்னையின் மகுடத்தில் நாகம் செதுக்கப்பட்டுள்ளது
சிங்க வாகனத்தில் எழுந்தருளி, தேவி, கோலாசுரன் என்ற அரக்கனை, தன் கதையால் அழித்த தலம் என்பதால் இத்தலம் ‘கோலாப்பூர்’ என்று அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது
வருடத்தில் மூன்று நாட்கள் சூரியக் கடவுள் தேவி மகாலக்ஷ்மிக்கு மரியாதை செலுத்துவதாக கூறப் படுகிறது. ரத சப்தமியை ஒட்டி வருவதாகும், இந்த பண்டிகை ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தில் வருகிறது. இது மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது. முதல் நாளன்று, சூரியனின் கிரணங்கள் தேவியின் பாதத்திலும், இரண்டாம் நாளன்று தேவியின் இடைப் பாகத்திலும், மூன்றாம் நாள் தேவியின் முக மண்டலத்திலும் விழுகின்றன. இதற்கு கிரண் உத்சவ் என்று பெயர். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, இந்தக் கோவிலை கட்டிய கட்டிடக் கலைஞர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டு இவ்வாறு உருவாக்கியுள்ளார்கள், மிகவும் சிறப்பான இந்த நிகழ்வை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகிறார்கள்.
தேவியின் திருத்தலங்கள் தொடரும்....
கீதா ராஜா சென்னை