கட்சித் தலைவரிடம், காலில் விழாத குறையாய்க் கெஞ்சி, இடைத்தேர்தலில் சீட் வாங்கிய ராசையா தொடர்ந்து பல இடங்களுக்குச் சென்று பிரச்சாரம் செய்ததில் ஒரு உண்மையைக் கண்டுபிடித்தார். அது வேறொன்றுமில்லை.. அவரை எதிர்த்து நிற்கும் எதிர்க்கட்சி வேட்பாளர் சினிமாத் துறையிலிருந்து வந்த காரணத்தால் அவருக்கே வெற்றி வாய்ப்பு அதிகம், என்கிற உண்மையை.
"என்ன செய்வது?... எப்படி ஜெயிப்பது?... மண்டையை பிய்த்துக் கொண்டவர் தன் அரசியல் ஆலோசகரான கிட்டப்பாவை அழைத்து ஆலோசனை கேட்க,
" ப்பூ...இவ்வளவுதானா?... நான் சொல்ற மாதிரிச் செய் கண்டிப்பா நீ ஜெயிப்பே"
"சொல்லுங்க... சொல்லுங்க"
"அனுதாப ஓட்டுக்கு ஏற்பாடு பண்ணு ஜெயிச்சிடுவே!"
"அதுக்காக என்னை சாகச் சொல்றீங்களா?" கடுப்பாகி கேட்டார் ராசையா.
"சாக வேண்டாம்யா... சாவின் விளிம்புக்கு போயிட்டு வந்த மாதிரி நடி".
ராசையா விழிக்க,
"மேடையில பேசும்/போது நெஞ்சுவலி வர்ற மாதிரி நடி... பேசப் பேச இருமிக் கொண்டே பேசு... திடீர்னு நெஞ்சைப் பிடிச்சுககிட்டு சாய்ஞ்சிடு... தொண்டர்கள் வந்து தூக்கும் போது தள்ளாட்டமாய் நின்று, அப்படியே பிரச்சாரம் பண்ணு... அப்புறம் அங்கிருந்து நேரா ஹாஸ்பிடல் போய் அட்மிட் ஆய்டு... எலக்சன் அன்னிக்கு ஆஸ்பத்திரியில் இரு... முடிவு வர்ற வரைக்கும் அங்கேயே இரு... வெற்றி உனக்குத்தான்"
ஆலோசகரின் ஆலோசனையை அன்று செயல்படுத்தி விடும் விதமாய் மாலைப் பிரச்சாரக் கூட்டத்திற்கு வந்தார் ராசையா.
உண்மையிலேயே மேடை ஏறும் போது நெஞ்சின் இடது புறம் லேசாய் வலித்தது.
கட்டை விரலால் அழுத்தி தேய்த்துக் கொண்டே மைக்கைப் பிடித்தார்.
உச்ச ஸ்தாயில் பேசும் போது வாய் வறண்டு, குரல் குழறியது. கால்கள் தள்ளாடின. நெஞ்சின் மீது பாறாங்கல் ஏற்றியது போல் வலி.
சமாளித்தபடி பேசியவர் சில நிமிடங்களில் மயங்கி விட, கீழே அமர்ந்திருந்த ஆலோசகர் கிட்டப்பா "பரவாயில்லையா... மனுஷன் நல்லாவே நடிக்கிறாரே" என்று தனக்குள் சொல்லிக்/கொண்டார்.
தொண்டர்கள், மயங்கி விழுந்த ராசய்யாவை தூக்கிக் கொண்டு போய் மருத்துவமனையில் சேர்க்க, எமர்ஜென்சில் அட்மிட் செய்யப்பட்டார் ராசையா.
மூன்றாம் நாள் நடந்த தேர்தலில் அனுதாப ஓட்டுக்கள் ராசையாவிற்க்கு சரமாரியாக விழுந்தன.
அடுத்த இரு நாட்களில் தேர்தல் முடிவுகள் வெளியாக ராசையா அமோக வெற்றி.
"அதான் ஜெயிச்சாச்சே...போதும் நடிப்பு" என்று சொல்லி ராசையாவை வீட்டிற்குக் கூட்டிச் செல்வதற்காக மருத்துவமனை வந்த ஆலோசகர் கிட்டப்பாவிற்கு அந்த தகவல் கிட்டியது.
"அடடா... வெற்றி செய்தியைக் கூட கேட்காமல் மனுஷன் உயிர் பிரிந்து விட்டதே!" எல்லோரும் புலம்பித் தள்ள,
அரண்டு போனார் ஆலோசகர்.
"அப்படியென்றால் மேடையில் அவர் நடிச்சது... துடிச்சது... விழுந்தது... எல்லாம் உண்மையா?"
விண்ணிலிருந்து ஆண்டவன் சிரித்தான்.
(முற்றும்)
முகில் தினகரன், கோயம்புத்தூர்.