tamilnadu epaper

ஆண்களுக்கு ஆபத்தாகும் பெருங்குடல் புற்றுநோய்! மருத்துவர்கள் எச்சரிக்கை!!

ஆண்களுக்கு ஆபத்தாகும் பெருங்குடல் புற்றுநோய்! மருத்துவர்கள் எச்சரிக்கை!!

ஆண்களைவிட பெண்களுக்கு அதிகம் ஏற்படும் பெருங்குடல் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்தலாம் என்கின்றனர் மருத்துவர்கள். இதன் அறிகுறிகள் என்ன? தடுக்கும் வழிமுறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் என்னென்ன?


வெங்கடாசலம் என்பவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு சந்தேகத்தின் பேரில் மருத்துவப் பரிசோதனை செய்யும்போது அவருக்கு பெருங்குடல் புற்றுநோய்(colon cancer) இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து பரிசோதனைகள் மேற்கொண்டு அவர் சிகிச்சை பெற்ற நிலையில், தற்போது அவர் புற்றுநோயிலிருந்து மீண்டு வழக்கமான வாழ்க்கைச் சூழலில் இருக்கிறார். டென்னிஸ் விளையாட்டு வீரரான அவர், கடந்த ஆண்டு நடைபெற்ற உலக டென்னிஸ் போட்டியில் கலந்துகொண்டார். ஆரம்பத்திலேயே புற்றுநோய் கண்டறியப்பட்டதால் அவருக்கு அறுவை சிகிச்சைகூட தேவைப்படவில்லை, கதிர்வீச்சு சிகிச்சை, கீமோதெரபி மூலமாகவே அவர் குணமடைந்தாக அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர் கூறுகிறார்.


உடல்ரீதியாக சில அறிகுறிகளை உணர்ந்ததாகவும் கொஞ்சம்கூட தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொண்டதால் புற்றுநோய் சிகிச்சையில் குணடமைந்துள்ளதாகவும் தெரிவிக்கிறார் தற்போது 70 வயதான வெங்கடாசலம்.


ஆகவே, புற்றுநோய் வந்துவிட்டால் குணப்படுத்துவது கடினம் என பெரும்பாலானோர் நினைக்கும் சூழ்நிலையில், ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் புற்றுநோய் குணப்படுத்தக்கூடியதுதான் என்கின்றனர் மருத்துவர்கள். எந்தவொரு நோயையும் குறிப்பாக புற்றுநோயை தொடக்க நிலையிலேயே கண்டறிந்தால் அதிலிருந்து மீள வாய்ப்புள்ளது என்கின்றனர்.


உலகம் முழுவதுமே புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், இந்தியாவில் ஆண்களிடையே நுரையீரல் புற்றுநோயும் பெண்களிடையே மார்பகப் புற்றுநோயும் அதிகரித்துக் காணப்படுகிறது.


தமிழ்நாடு குடல் நோய் நிபுணர்கள் அறக்கட்டளையின் தலைவரும், அப்போலோ மருத்துவமனையின் குடல் நோய் மூத்த ஆலோசகருமான டாக்டர் கே.ஆர். பழனிசாமி இதுபற்றி கூறுகையில், “பெருங்குடல் புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைவாக உள்ளது. ஆரம்பத்திலேயே இதனைக் கண்டறிந்தால் சிகிச்சை அளிக்க முடியும். எனவே, பரிசோதனைகள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் பெருங்குடல் புற்றுநோயைக் கண்டறிய அவ்வப்போது ஸ்கேன் செய்துகொள்ள வேண்டும். மலத்தில் கண்ணுக்குத் தெரியாத ரத்தம் இருந்தால் அது பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறிகளில் முக்கியமான ஒன்றாகும்” என்று தெரிவித்தார்.


பெருங்குடல் புற்றுநோய் தடுக்கக் கூடியது, குணப்படுத்தக் கூடியது மற்றும் சிகிச்சையளிக்கக் கூடியது. சமீபத்திய மருத்துவ சிகிச்சை முறைகள் மற்றும் நோயறிதல் குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், பெருங்குடல் புற்றுநோய் அதிகரித்து வருவது கவலைக்குரியது என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.



பெருங்குடல் புற்றுநோய் என்பது பெருங்குடலில் உருவாகும் ஒரு புற்றுநோய். புற்றுநோய் உருவாகும் இடத்தைப் பொருத்து இது கூட்டுப் புற்றுநோயாகவோ அல்லது மலக்குடல் புற்றுநோயாகவோ இருக்கலாம். இதனால் பெண்களைவிட ஆண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் இந்த புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் 40 முதல் 50 வயதுக்குள்பட்டவர்கள்.


இந்தியாவில், 10,000 பேரில் ஒருவருக்கு இந்த புற்றுநோய் உருவாகிறது. மேலும் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மூன்று பேரில் இருவர் இறக்கும் சூழ்நிலை இருக்கிறது. இதற்குக் காரணம் புற்றுநோயை தாமதமாகக் கண்டறிவதுதான் என்கின்றனர் நிபுணர்கள்.


பெருங்குடல் புற்றுநோய் பெரும்பாலும் பெருங்குடலின் புறணி பகுதியில் சிறிய கட்டிகளாக உருவாகிறது. இது நீண்ட காலத்திற்கு எந்த அறிகுறிகளையும் காட்டாது. அறிகுறிகள் தோன்றும் நேரத்தில் குடல் புற்றுநோய் ஆரம்ப நிலையைக் கடந்திருக்கும். எனவே, அதற்கு மேலும் தாமதப்படுத்தாமல் நோயைக் கண்டறிந்து உடனடியாக சிகிச்சை பெற வேண்டும்.


பெரும்பாலான நாடுகளில் குடல் புற்றுநோய் பரிசோதனை ஒரு சாதாரண வழக்கமான பரிசோதனையாக இருக்கிறது என்றும் முதல் கட்ட ‘மல பரிசோதனை’ மூலமாக இதனை எளிதாக முன்கூட்டியே கண்டறியலாம் என்றும் அடையாறு புற்றுநோய் மையத்தின் குடல் நோய் நிபுணர் டாக்டர் என். திருமூர்த்தி கூறுகிறார். இந்தியாவிலும் இதுபோன்று ஆரம்ப நிலை புற்றுநோய் சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.