tamilnadu epaper

ஆதங்கம்

ஆதங்கம்

 

 ...

 

முப்பது வருடம் இந்திய இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது விவசாயம் செய்யும் நான் இதுவரை கதையோ கட்டுரையோ எழுதியதில்லை. அவ்வளவு அழகாய் கோர்வையான வார்த்தைகள் எல்லாம் எனக்கு சுட்டு போட்டாலும் வராது. ஆனால் இன்று என் மன ஆதங்கத்தை எப்படியேனும் வெளிப்படுத்தியே ஆக வேண்டும்....

கவிதையாக எழுதலாமா?.. ம்ம்.. எப்படி இருக்கும் என்று கூட தெரியாது.

 

சரி கதையாகவே முயற்சிக்கலாம்.... எப்படி ஆரம்பிப்பது!

 இன்று என் தூக்கம் ஒட்டுமொத்தமாய் காணாமல் போனதற்கு காரணம் என் அண்ணன் தான்... ஆம்!அவர் பேசிய வார்த்தைகளை மறக்க முடியவில்லை... மீண்டும் மீண்டும் வந்து என் நெஞ்சில் அம்பாய் பாய்ந்து இரணமாக்குகிறது.

 

 இதோ இந்த ஒரு வருடமாய் தான் நான் குடும்பத்தோடு இருக்கிறேன். உறவினர்களோடு பழகுகிறேன் என்பதை விட உறவினர்களை அறிந்து கொள்கிறேன். இராணுவத்தில் பணியாற்றிய இத்தனை வருடத்தில் எத்தனை உறவுகளின் திருமணத்திற்கு வர முடியாமல் அங்கிருந்து வாழ்த்தியிருப்பேன்.குடும்பத்துடன் பண்டிகைகள்...ஏன் குழந்தைகளின் பிறந்தநாளுக்கு, திருமண நாளுக்கு என ஏதாவது உண்டா..?அத்திப்பூத்தாற்போல ஒன்று இரண்டை கூறலாம்.

 

 இன்பத்தை விட துன்பம் மிகக் கொடுமை. இறப்புக்கு வர முடியாமல் அழுத நாட்களை யாரிடம் கூறுவது...?இதையெல்லாம் பார்த்து அனுபவித்த என் அண்ணனே இப்படி கூறியதுதான் இன்று என் தூக்கம் தொலைந்ததற்கு காரணம்.

 

 மாலை அண்ணனுடன் பேசிக் கொண்டிருக்கும்போது சமீபத்தில் வெளியான இராணுவ வீரரின் வாழ்க்கை படம் பற்றிய உரையாடல் வந்தது. "படம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு.. இங்கேயும் தான் பல பேர் விபத்துல இறந்து போறாங்க... ஆனா என்றோ ஒரு நாள் இராணுவத்தில் உள்ளவர்கள் இறந்தால் அதைத்தான் பெரிதாக காட்டுவார்கள். எப்பொழுதும் போர் வருகிறதா . எல்லோருக்கும் ஒரு இறப்பு தானே.." ராணுவ வீரர்களுக்கு எத்தனை சலுகைகள்... மற்றவர்களுக்கு இதெல்லாம் கிடைக்குமா என்ன..?

 

 இந்த வார்த்தைகள் தான் என்னை வேதனைக்கு உள்ளாக்கியது.

 

 ஹெல்மெட் போடாமல் விபத்தில் இறப்பவரும்... குடித்துவிட்டு இறப்பவரும்... இராணுவத்தில் பணியில் இறந்தவரும் ஒன்றா...? இராணுவத்தினர் பணியில் உள்ளதால் தான் போர் வராமல் இருக்கிறது என்பதை எப்படி புரிய வைப்பேன்.. தன் உயிர் போய்விடும் என தெரிந்தே நாட்டைக் காக்க பாடுபடும் ஓர் இராணுவ வீரரின் உயிரை உயர்வாக அல்லவா கருத வேண்டும்.. உயர்வாக கருதவில்லை என்றால் கூட பரவாயில்லை... குறைத்து மதிப்பிடக்கூடாது அல்லவா....? என் அண்ணன் மட்டுமல்ல.. பல பேரின் மனநிலை இப்படித்தான் உள்ளது. இவர்களுக்கு புரியும் வகையில் கண்டிப்பாக ஒரு கதையாக எழுதிவிட வேண்டும் என்று சிறுகதை எழுத ஆரம்பித்தார் மோகன்.

 

 முனைவர் உமாதேவி பலராமன்,

117 பைபாஸ் சாலை,

 திருவண்ணாமலை. 606601.

செல் :9486365350.