tamilnadu epaper

ஆலமரத்தின் நிழலில்

ஆலமரத்தின் நிழலில்


'காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும். 'என்ற பாரதியின் பாடலைப் கேட்டபடியே படியே. தன் வீட்டில் இருக்கும் ஆலமரத்தினடியில் ஒரு கயிற்றுக் கட்டிலில் படுத்தபடியே அதை வெறிக்கப் பார்த்து கொண்டு இருந்தார் சின்னச்சாமி..

.

ஆலமரத்தில் குடியிருக்கும் பலவிதமான பறவைகளைப் பார்த்து ரசித்துக் கொண்டே பழைய நினைவுகளை அசை போட்டார்..


"ஏனுங்க.....மணி ஒண்ணு ஆச்சு. இன்னும் சாப்பிட வரலீங்களா?நீங்க சாப்பிட்ட பொறவுதானே நம்ம ஆளுங்க சாப்பிடுவாங்க. என்னங்க.. ஆலமரத்தை பார்த்துகிட்டு?. என்ன யோசன? " என்று சின்னச்சாமி யின் மனைவி ராசாத்தி தரையில் பரப்பி இருந்த நெற்களைத் துழாவியபடி அடுக்கடுக்காகக் கேள்விக் கணைகளைத் தொடுத்தாள்.


"ஐயா.....கும்பிடுறேனுங்க.

தென்னை மரத்திலிருந்து ஓலைங்க நிறைய பிச்சு போட்டுருக்கேனுங்க. ஈக்குமாறு செய்யட்டுமா?" என்றார் தோட்டக்காரர் பரட்டை..


"சரி..கண்ணு....சாப்பிட்டயா. ?"


"ஏங்க.... நீங்க சாப்பிட்டாம எப்போங்க நாங்க எல்லாரும் சாப்பிட்டு. இருக்கோம்.

.ம்..ம்...எழுந்திருங்க..".


"ராசாத்தி..... இன்னிக்கு எனக்கு என்னமோ அந்த ஆலமரத்தைப். பார்த்துகிட்டே இருக்கணும் போல இருக்கு."


ஏங்க...இத்தனை வருஷமா இருக்குது.... தெனமும் பாக்கறோமில்ல..புதுசாவா பாக்கறோம். ? என்றாள் ராசாத்தி..


"ஆலமரத்துல எத்தனை விழுதுகள்!? ஒரே ஒரு மரம் இத்தனை கிளைகளைத் தாங்கி இருக்குது!! அதுல நெறய பறவைகள் கூடிகட்டி,. அதோட குஞ்சுகளுக்கு அலைஞ்சு திரிஞ்சு சாப்பாடு ஊட்டுது..அதுகளும் வாயை. ஆ.. ன்னு தொறந்து காட்டுது.. இந்த ஆலமரம் நன்றிக்

கடனா எதுவும் எதிர்பார்க்கல ராசாத்தி."


"ஆமாங்க.... நீங்களும் ஒரு ஆலமரம் மாதிரிதானுங்க..உங்க நிழலிலே எத்தனை புள்ளைங்க இருந்தாங்க..இருக்காங்க...

ஆருகிட்டயாவது நன்றியை எதிர் பார்க்கிறீ,ங்களா? இதுக்கு அடில உட்கார்ந்து எத்தன பிரச்சினைகள தீர்த்து வச்சிருக்கீங்க."


"சரி...சரி.. சாப்பிட போகலாம். வா. என்று தோளில் இருக்கும் துண்டை உதறிவிட்டு எழுந்தார்.


தலைவாழை இலையில் பலவிதமான பதார்த்தங்கள்.

தும்பைப்பூ நிற சோறு.. சாப்பிட உட்கார்ந்த சின்னச்சாமியை,


"ஐயா... உள்ள வரலாங்களா..?.என்ற குரல் கேட்டு..கையை உதறிவிட்டு எழுந்த அவரை,


"ஏனுங்க.... இருங்க..நா போயி ஆருன்னு பார்க்கிறேன், இப்பத்தான் சாப்பிட உட்கார்ந்தீங்க." என்றாள் ராசாத்தி. 


வீட்டில் தாழ்வாரத்தில் நின்று கொண்டிருந்த ஒரு பையனும்,பெண்ணும். வெகு நாகரீகத்துடன்" ஐயனை பார்க்க வந்தோமுங்க.." என்றனர்..


 "ஐயா சாப்பிட்டுட்டு வருவாரு.

தாகத்துக்கு தண்ணீ மோரு கொண்டு வரட்டுங்களா?


"வேணாங்க..ஐயாவை பார்த்துவிட்டு போலாம்னு வந்தோமுங்க..என் பேரு செந்தில்.


சாப்பிட்டு விட்டு தன் கைகளைத் துடைத்தபடி வெளியே வந்த சின்னசாமி,


"என்ன.....கண்ணுங்களா...

சாப்பிட்டீங்களா?

உங்கள யாருன்னு புரியலீங்க" .


ஐயா......எங்களைமறந்துட்டீங்களா? .ஆனா உங்ககிட்ட தின்ன உப்பையும், நீங்க தந்த படிப்பையும் மறக்க மாட்டோமுங்க... நாங்க ரெண்டு பேரும் குழந்தைகள் பராமரிப்பு இல்லத்தில் இருந்த போது,எங்கள மாதிரி எத்தனை பேரைப் படிக்க வச்சு சாப்பாடு போட்டு இருக்கீங்க

இவங்க என் மனைவி சித்ரா ங்க.  


"சந்தோஷமுங்க....உட்காருங்க..அம்மணி... சாப்பிட ஏதாவது கொண்டு வாம்மா."


"ஐயா. நான் இந்த ஊருக்குக் கலெக்டர் ஆக வந்திருக்கேனுங்க.

சித்ரா இங்கே இருக்கற பள்ளிக்கூடத்துல உடற்பயிற்சி ஆசிரியையா சேர்ந்திருக்காங்க.

இதை முதல்ல உங்ககிட்ட சொல்லி ஆசிர்வாதம் வாங்க வந்தோமுங்க... அதோட நான் முத முதலா அந்த அலுவலகத்துல போய் வேலையை எடுத்துக் கொள்ளும் போது நீங்க தான் என்னை ஆசிர்வாதம் செஞ்சு உட்கார வைக்கோணம்."



"தம்பி.... நீங்களா!! வயசாயிடுச்சு.ஞாபகமறதி இருக்கு."என்று 

கண்களில் நீர் வழிந்தோட

மெதுவாக நடந்து வந்தார்.


 புடவைத் தலைப்பால் துடைத்தபடி ராசாத்தியும் பின் தொடர சின்னச்சாமி செந்திலை அணைத்தபடி ,


"கண்டிப்பாக வரேன் ராசா.. நீங்க இந்த மாவட்டத்துக்கே கலெக்டரு.என்னையும் மதிச்சு நன்றி சொல்ல வந்திருக்கீங்க.."


"ஐயா.. எங்க அறிவுக்கண்ணை தொறந்து வச்சு எங்களை வாழ்க்கையில உசர வச்ச நீங்கதான் எங்களுக்கு எல்லாம்..

அதோட ஒரு கூட்டமும் நடக்குது. நீங்க தான்

 தலைமை தாங்கணும்"


"என்ன தம்பி.!!நான் ஒரு சாதாரண ஆளு.என்னயப் போயி..." என்றார்.


ஐயா..உங்களோட இந்த அடக்கமும், பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையும் 

எப்படி மறக்க முடியும்?"


என்ற செந்தில் சித்ராவை வாசல்வரை வந்து வழி அனுப்பினர் இருவரும்..


அந்த நாளும் வந்தது.. காரில் வந்து இறங்கிய சின்னச்சாமி,

ராசாத்தி தம்பதிகளை வாசலில் வந்து கைகளைப் பிடித்து அழைத்து இருவரையும் மேடையில் அமர வைத்தார்கள் செந்திலும் சித்ராவும்..


"வணக்கம் நண்பர்களே... இன்று நான் புதிதாக பதவி ஏற்கப்போகும் இந்நாளில் சிலரை அறிமுகப் படுத்தப் போகிறேன்..

இங்கே அமர்ந்து இருப்பவர்களில் ஒருவர் புகழ் பெற்ற வக்கீல்.

இன்னொருவர் மருத்துவர்..

இவர் தமிழாசிரியர்..

இவர் மளிகைக்கடை வைத்திருப்பவர்.. 


ஒவ்வொருவரும் ஒரு ஆலமரத்தின் விழுதுகள்.. ஒரு ஆலமரத்தின் அடியில் பலவிதமான பறவைகளும் அதன் குஞ்சுகளும் குடியிருக்கும்..அப்படி விழுதுகளாக எங்களுக்கு அடைக்கலம் தந்த ஆலமரம் இங்கு அமைதியாக அடக்கமாக அமர்ந்து கொண்டு இருக்கும் சின்னச்சாமி

ஐயா... ராசாத்தி அம்மாள் இருவரையும் இங்கு பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறோம்.... பராமரிப்பு இல்லத்தில் இருந்த எங்களை தத்தெடுத்து , எங்கள் வயிற்றுப் பசியைத் தீர்த்து அறிவுப்பசிக்கு

வித்தானவர்..எங்களை தூற்றியவர்கள் முன் னால் தலைநிமிர்ந்து நிற்கக் காரணம் இந்த ஆலமரம் தான் .இது எப்போதும் வீழ்ச்சி அடையாது.."


அதோட அவங்க வளர்த்து பிள்ளைங்க ஒண்ணா சேர்ந்து

"ரா...சி ஆலமரம்"..என்ற பெயரில ஆதரவில்லாத குழந்தைங்களைப்

பராமரிக்க இல்லம் ஒண்ணு ஆரம்பிக்கப் போறோம்.." 

 என்று சொன்னதும் அரங்கமே அதிர வைக்கும் கைதட்டலில் அமர்ந்திருக்கும் அனைவரும் 


"ஆலமரம் மேலமரும்

வண்ணப் பறவைங்க நாங்க "

என்று பாடியபடியே. ..

இருவரையும் கைப்பிடித்து அழைத்து வந்தனர்...


"ஏங்க...நம்ம முப்பாட்டன் காலத்துல இருந்தே பார்த்த அந்த ஆலமரத்தடியில் உட்கார்ந்து


"ஏன்.. ராசாத்தி... கடவுள் நமக்கு குழந்தை செல்வம் கொடுக்கலனு

சொல்லுவீங்க... எத்தனை குழந்தைகள நமக்கு கடவுள் தந்திருக்காரு." என்றபடியே அந்த ஆலமரத்தினடியில் இளைப்பாறினாள் ராசாத்தி அம்மாள்.


முற்றும்...