கோவை, ஏப்.2-–
கோவை ஈஷா யோகா மையத்தில், இந்திய கடற்படை வீரர்களுக்கு, அளிக்கப்பட்டு வந்த பாரம்பரிய ஹத யோகா பயிற்சி, நிறைவு பெற்றது.
ஈஷாவில், பாதுகாப்பு படைகளுக்கான பாரம்பரிய ஹத யோகா பயிற்சி நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில், கடந்த 15 நாட்களாக, இந்திய கடற்படை வீரர்களுக்கு, ஹத யோகா பயிற்சி வழங்கப்பட்டது.
இதில், ஹத யோகாவின் பிரிவுகளான உபயோகா, அங்கமர்தனா, சூரிய க்ரியா பயிற்சிகள் பெற்ற வீரர்கள், கடற்படை முகாம்களில் உள்ள சக வீரர்களுக்கும், இந்த ஹத யோகா பயிற்சியை வழங்கவுள்ளனர்.
ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வெளியிட்டுள்ள பதிவில், ‘இந்திய பாதுகாப்பு படைகளுக்கான, பாரம்பரிய ஹத யோகா பயிற்சியை வெற்றிகரமாக முடித்த, 72 இந்திய கடற்படை வீரர்களுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் தேசத்திற்கு உயர்ந்த சேவையை வழங்கும்போது, உங்கள் உடலும், மனமும் நீங்கள் நினைக்கும் விதத்தில், செயல்படுவது மிக முக்கியம். ஹத யோகா உங்களுக்கு எந்த சூழ்நிலையையும் சமநிலை மற்றும் தெளிவுடன் கடந்து செல்ல தேவையான வலிமையையும், உறுதியையும் அளிக்கும்’ என கூறியுள்ளார்.