tamilnadu epaper

இனிப்புகள் வாங்கும் பொழுது அதன் மேல் வெள்ளையாக ஒன்று ஒற்றப்பட்டு இருக்குமே அதை வெள்ளி என்கிறார்கள் இதன் உண்மை விளக்கம் என்ன?

இனிப்புகள் வாங்கும் பொழுது அதன் மேல் வெள்ளையாக ஒன்று ஒற்றப்பட்டு இருக்குமே அதை வெள்ளி என்கிறார்கள் இதன் உண்மை விளக்கம் என்ன?

உண்மைதான்.

இனிப்புகளின் மேல் மெல்லிய வெள்ளி இழைகள் தான் ஒட்டப்படுகின்றன.

மென்மையான வெள்ளி உலோகத்தை, வெள்ளிப் படலம், வெள்ளி இழை, வெள்ளி பேப்பர், வெள்ளி ஷீட் என்று பல பெயர்களில் அழைக்கப்படும் வெள்ளி இழை இந்தியில் 'வராக்கா ' என்று அழைக்கப்படுகிறது.

வெள்ளி இழை ஒட்டப்பட்ட இனிப்புகள் கண்களையும், கருத்தையும் சிறுவர் முதல் பெரியவர் வரை கவருகின்றன.ஆண்டுதோறும் சுமார் 2,75,000 கிலோ வெள்ளி உலோகம், இழைகளாக மாற்றப்பட்டு இனிப்புகள் மீதும், பிரியாணி, பீடா, பழங்கள் போன்ற உணவுப்பொருட்கள் மீதும் ஒட்டப்பட்டு உண்ணப்படுகிறது.275 டன் வெள்ளியை நாம் ஆண்டுதோறும் உட்கொள்கிறோம் எனில், அது மிகப்பெரிய ஒன்றாகும்.

இப்படிப்பட்ட வெள்ளி இழை எப்படி தயாரிக்கப்படுகிறது தெரியுமா?

நூறு கிராம் வெள்ளியை எடுத்து, ஒரு அங்குல அளவில் சிறு சிறு துண்டுகளாக வெட்டுகிறார்கள்.ஒரு வெள்ளித்துண்டு மீது, 'ஜெர்மன் பட்டர் பேப்பர் ' எனப்படும் ஒரு சிறப்பு தாள் வைக்கப்பட்டு அதன் மீது மீண்டும் ஒரு வெள்ளிக்கு ஆண்டு, அதன் மேல் ஜெர்மன் பட்டர் பேப்பர் இப்படி ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப்பட்டு, பின்பு 8 மணிநேரம் மரத்தால் செய்யப்பட்ட சுத்தியலால் அடிக்கப்படுகிறது.வெள்ளித்துண்டு மிக மெல்லிய இழையாக ஆகும் வரை அடிக்கப்படுகிறது.ஒரு வெள்ளி இழையின் தடிமன் சுமார் 0.025 மில்லி மீட்டர்.இது மனித சருமத்தை விட மென்மையானது.

பழைய காலத்தில் வெள்ளி இழைகளை உருவாக்க, ஜெர்மன் பட்டர் பேப்பருக்கு பதிலாக மாட்டுக் குடலை (OxGut) வெட்டி நடுவில் வைத்து, மரச்சுத்தியலால் அடித்திருக்கிறார்கள்.அந்த முறை இப்பொழுதும் தொடருவதாக நினைப்பவர்கள் வெள்ளி இழையை ஒரு அசைவப் பொருளாக கருதுகிறார்கள்.

இந்த மாட்டுக்குடல் கலாச்சாரம் இப்பொழுது இல்லை.100 சதவீதம் சைவமான முறையில், எந்த வித இரசாயனப் பொருளையும் சேர்க்காமல், வெள்ளி இழைகள் தயாரிக்கப்படுகிறது.இரும்புச் சுத்தியலும், ஜெர்மன் பட்டர் பேப்பரும்தான் உபயோகப்படுத்தப்படுகிறது என்பது ஐதராபாத் தை சேர்ந்த வெள்ளி இழை உற்பத்தியாளர்களின் கருத்தாக இருக்கிறது.

ஒரு முறை, வெள்ளி இழைகளுக்கு பதில் அலுமினிய இழைகளை இனிப்புகள் மீது ஒட்டியிருப்பதை, " உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு அதிகாரிகளால்", புனேவில் இனிப்புப் பலகாரக்கடையில் சோதனை செய்தபோது கண்டுபிடிக்கப்பட்டது.

விளைவுகள்

அலுமினியமோ , வெள்ளியோ உடலில் அதிகமாக சேரும் போது, அது உடல்நலத்திற்கு நல்லதில்லை.

அலுமினியம் உடலில் அதிகம் சேர்ந்தால், இரத்தத்தில் கால்சியம் அளவு அதிகரிக்கும்.அது கால்சியத்தை எலும்பில் படியவிடாது.அதனால் மூளையிலுள்ள திசுக்களில் அலுமினியம் படிய ஆரம்பித்து, "அல்சைமர் நோய்" தோன்றக்கூடும்.

அதேபோல் வெள்ளி அதிக அளவில் உடலுக்குள் போனால், அது சருமத்தில் படிந்து, சருமத்தை நீலம் கலந்த பழுப்பு நிறத்திற்கு மாற்றிவிடும்.இதற்கு மருத்துவ மொழியில்," அர்ஜைரியா" என்று பெயர்.இது உடலுக்குத் தீங்கில்லை என்றாலும், நல்லது இல்லை.

இந்தியாவில் சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து இருந்தாலும், மக்களுக்கு இனிப்பின் மீதான மோகம் குறையவில்லை.

இனிப்புகள்மீது ஒட்டப்பட்டிருப்பது எம்மாதிரியான இழை என்பது கண்டறிவது சிரமம் என்பதால், இழை சேர்க்கப்படாத இனிப்புகள் வாங்கி உண்ணுவோமே…

உடல் நலம் காப்போம்…

 

-சிவசக்தி 
நாப்பிராம்பட்டி
ஊத்தங்கரை 
கிருஷ்ணகிரி மாவட்டம்