tamilnadu epaper

இறைவன் ஒரு      இயக்குனர்

இறைவன் ஒரு       இயக்குனர்

 

 

 "என் தம்பி ரகு... வேற ஜாதிப் பொண்ணை காதலிச்ச ஒரே காரணத்துக்காக அவனை வீட்டை விட்டுத் துரத்தினார் எங்கப்பா... ஆனாலும் சாகும் போது அவனுக்கும் சொத்துல பங்கு வெச்சுத்தான் உயில் எழுதினார்... நாந்தான் அந்த உயிலை மறைச்சிட்டு போலி உயில் தயாரிச்சு என் தம்பிக்கு பங்கு இல்லாமல் பண்ணினேன்" சுப்பு புலம்ப.

 

  "சரி... சரி... அதையே ஏன் திரும்பத் திரும்ப சொல்லிட்டிருக்கீங்க?" மனைவி சசி கடிந்தாள்.

 

  "அந்தப் பாவத்திற்கு தண்டனையாய்த்தாண்டி ஆண்டவன் நமக்கு குழந்தை பாக்கியம் இல்லாம பண்ணிட்டான்"

 

  "அதனாலென்ன?... ஒரு அனாதை ஆசிரமத்துக்கு போய் ஒரு நல்ல குழந்தையைத் தத்தெடுத்திட்டு வந்து வளர்த்திட்டாப் போச்சு!" சாதாரணமாய் சொன்னாள் சசி.

 

தம்பி ரகுவின் வீடு.

 

  'ஏங்க உங்க அப்பாவும் உங்களுக்கு சொத்துல பங்கு இல்லாமப் பண்ணிட்டார். உங்களுக்கும் ஒரு நல்ல வேலை இல்லை... வருமானம் இல்லை... சோத்துக்கே கஷ்டப்படறோம்... இந்த நிலையில நமக்கு இந்தக் குழந்தை வேணுமா?... நாம நல்ல பொருளாதார நிலைக்கு வந்த பிறகு குழந்தையை பெத்துக்கலாமே'?" என்றாள் ரகுவின் மனைவி பானு.

 

  "அதைக் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு முன்னாடியே யோசிச்சி இருக்கணும்!".

 

  "இப்ப என்ன கெட்டுப் போச்சு?... இந்தக் குழந்தையை கொண்டு போய் அன்னை தெரசா அனாதை இல்லத்தில் சேர்த்திடலாம் அவங்க நல்ல பெரிய பெரிய பணக்காரர் குடும்பங்களுக்கு தத்து கொடுத்துட்டு இருக்காங்க!" என்றாள் பானு.

 

 ஆரம்பத்தில் மறுத்த ரகு இறுதியில் சரண்டர் ஆனான்.

 

 "அன்னை தெரசா அனாதைகள் இல்லம்"

 

காரில் வந்திறங்கிய சுப்புவும் சசியும் தங்கள் தேவையை அந்த இல்லத்தின் தலைவியான ரெஜினா சிஸ்டரிடம் சொல்ல,

 

 "யூ ஆர் வெரி லக்கி... நேத்திக்கு ஈவினிங் தான் பிறந்து மூணே நாளான ஒரு ஆண் குழந்தைஎங்க இல்லத்திற்கு வந்தது"

 

  "சிஸ்டர் அதையே நாங்க தத்து எடுத்துக்கிறோம் சிஸ்டர்" இருவரும் ஒரே குரலில் சொல்ல,

 

விண்ணுலகில் ஆண்டவன் சிரித்துக்கொண்டான். "சேர வேண்டிய சொத்தை சேர வேண்டிய வாரிசுக்கு சரியாய்ச் சேர்ப்பதற்குத்தானே நான் இருக்கேன்'

 

(முற்றும்)

 

முகில் தினகரன், கோயமுத்தூர்.