-பாவலர் கருமலைத்தமிழாழன்
குறிக்கோள்கள் இல்லாமல் வாழ்வ தெல்லாம்
குன்றுமுட்டி வீழ்கின்ற குருவி போலாம்
கறிசெய்ய உதவாத அழுக லான
காய்கறிகள் போலவாகும் வாழ்க்கை யிங்கே
பொறிநெருப்பு பெருங்காட்டை அழித்தல் போன்று
பொசுங்கிவிடும் இலக்கின்றி வாழும் வாழ்க்கை
நெறியோடும் உயர்வான குறிக்கோ ளோடும்
நிதம்நடக்க முயல்பவனே வெற்றி கொள்வான் !
புகழ்வாழ்க்கை பாராட்டைப் பெறும்நல் வாழ்க்கை
புவிதன்னில் பெறவேண்டும் என்னும் கொள்கை
அகம்தன்னில் பதித்ததிலே உறுதி கொண்டே
ஆர்வமுடன் தளராமல் உழைக்கும் போதே
முகத்தின்முன் வருகின்ற தடைக ளெல்லாம்
முளைக்கின்ற கதிர்முன்னே பனிபோ லாகும்
தகவுடைய கல்வியொன்றே உலகம் தன்னில்
தகுதியினை உனக்களிக்கும் உணர்க நன்றே !
எழிலியற்கை விவசாயி ஆழ்வார் போன்றும்
ஏவுகணை தந்தையெனும் கலாமைப் போன்றும்
பொழிந்திட்ட மனிதநேய தெரசா போன்றும்
பொலிகின்ற காமராசர் நேர்மை போன்றும்
வழிவழியாய் வரும்தமிழ்நற் பண்பாட் டோடும்
வரவேண்டும் என்கின்ற இலக்கைக் கொண்டே
விழியான கல்விதன்னை முறையாய்க் கற்பாய்
விளக்கைப்போல் உன்வாழ்க்கை ஒளிரும் நன்றே !