ஒருநாள் அரசர் ஒருவர் சிறைச்சாலையைப் பார்வையிட வந்தார். அங்கிருந்த கைதிகள் ஒவ்வொருவரையும் அழைத்து அவர்கள் சிறைக்கு வந்ததற்கான காரணத்தைக் கூறும்படிக் கேட்டார்.
முதல் கைதி அரசே! நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை. என்னைத் தவறுதலாகச் சிறையில் அடைத்து விட்டனர். தாங்கள்தான் அருள் கூர்ந்து என்னை விடுவிக்க வேண்டும் என்று வேண்டினான்.
இரண்டாவது கைதி, அரசே! எனக்கும், நீதிபதிக்கும் சிறு தகராறு. அதனால் அவர் எனக்கு வேண்டுமென்றே சிறைத்தண்டனை கொடுத்து விட்டார். நான் எந்தப் பாவமும் செய்யாதவன். என்னை அருள் கூர்ந்து விடுவிக்கும்படி வேண்டினான்.
இப்படியே எல்லாக் கைதிகளும் தாங்கள் எந்தக் குற்றமும் செய்யாத நல்லவர்கள் என்றும், சிறையில் இருந்து கொண்டு துன்புறுவதாகவும் கூறினார்கள்.
அரசர் பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தார். கடைசியாக வந்த கைதி மட்டும் அரசே! இந்த கைகளினால் நான் திருடினேன். அதற்காகச் சிறைத்தண்டனை அனுபவிக்கிறேன் என்றான்.
அவன் கூறியதைக் கேட்டதும் அரசன் கடுங்கோபம் கொண்டார். சிறைக் காவலர்களைப் பார்த்து, நல்லவர்கள் மட்டும் இருக்கக்கூடிய இந்தச் சிறைச்சாலையில் இத்திருடனை யார் கொண்டு வந்து அடைத்தது? இவன் இங்கிருக்கும் எல்லோரையும் திருடர்களாக்கி விடுவான். இவனை உடனே வெளியே விரட்டி விடுங்கள் என்று கூறினார்.
அரசனின் குறிப்பை உணர்ந்து கொண்ட அரண்மனைக் காவலர்கள் அவனை விடுதலை செய்தனர்.
தத்துவம் :
உண்மை விலைமதிப்பற்றது. கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி நேர்மையாக உண்மையை சொல்ல வேண்டும். அப்பொழுது தான் உங்கள் நேர்மைக்கான பிரதிபலனை எதிர்ப்பார்க்க முடியும்.
சோதனைகளை சாதனைகளாக்கு!
ஒரு ஊரில் கணேசன் என்பவர் இருந்தார். அவருக்கு சிவா என்று ஒரு மகன் இருந்தான். அவன் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு சொந்தமாக சுயதொழில் செய்து வந்தான். ஆரம்பத்தில் அவன் செய்த தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. இப்படியே சில மாதங்கள் கடந்தன. திடீரென அவன் செய்த தொழிலில் மந்தமான போக்கு ஏற்பட்டு பெரும் நஷ்டம் அடைந்தான். எனவே என்ன செய்வது என்று புரியாமல் மிகுந்த மனச்சோர்வுடன் காணப்பட்டான்.
தன் மகனின் சூழ்நிலையைக் கண்ட கணேசன், மகனை அழைத்துக் கொண்டு வேகமாக சமையலறைக்குள் சென்றார். சமையலறையில் இருந்து மூன்று பாத்திரங்களை எடுத்தார். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி ஒரு உருளைக்கிழங்கையும், இரண்டாவது பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி ஒரு முட்டையையும் போட்டு ஒவ்வொன்றாக அடுப்பில் வைத்து வேக வைத்தார். உருளைக்கிழங்கும், முட்டையும் நன்கு வெந்ததும், இரண்டையும் தனியே எடுத்து வைத்துக் கொண்டார்.
பிறகு மூன்றாவது பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதில் டீத்தூளை கலந்து அடுப்பில் வைத்தார். சூடான டீ தயார் ஆனது. சூடான டீயுடன் சிறிது சர்க்கரை சேர்த்து ஒரு காபி கப்பில் ஊற்றி சூடாக தன் மகனுக்கு கொடுத்தார். சிவாவும், அப்பா கொடுத்த டீயை வாங்கிப் பருகினான். அப்போது கணேசன் தன் மகனிடம் கேட்டார். சிவா! நீ இப்போது நன்றாக வெந்துள்ள உருளைக்கிழங்கு போன்றவனா? அல்லது முட்டையைப் போன்றவனா? அல்லது டீத்தூளைப் போன்றவனா? சிந்தித்துப் பார்த்து பதில் சொல் என்றார்.
அதற்கு சிவா, அப்பா! எனக்கு ஒன்றும் புரியவில்லை என்றான். அதற்கு கணேசன், உருளைக்கிழங்கு, முட்டை, டீத்தூள் ஆகிய மூன்று பொருட்களும் ஒரே எதிரியாகிய கொதிக்கும் தண்ணீரைத்தான் சந்தித்தன. அதில் முட்டையானது, தனது கடினமான வெளித்தோலில் எந்த மாற்றத்தையும் காட்டாமல் இருந்தாலும், தனக்குள் இருந்த கருவை கடினமாக்கிவிட்டது. உருளைக்கிழங்கோ, கொதிக்கும் தண்ணீரில் இளகிப் பலவீனப்பட்டு விட்டது. ஆனால், டீத்தூளோ வெந்நீரை மணமுள்ளதாக்கி சுவையானதாக மாற்றிவிட்டது.
இந்த முட்டை, உருளைக்கிழங்கு மற்றும் டீத்தூளைப் போலத்தான் மனிதர்களில், ஒரு சிலர் எந்தக் கஷ்டம் வந்தாலும் அதைத் தாம் முன்னேறுவதற்கு வந்த வாய்ப்பாக மனமுவந்து சந்தித்து, சோதனைகளை டீத்தூள் போன்று சாதனைகளாக மாற்றுகின்றார்கள். அதைப்போல் ஒரு சிலர் தங்களுடைய கஷ்ட நஷ்டங்களை வெளிகாட்டாமல் முட்டை போல தோற்றமளித்தாலும் உள்ளே மனதளவில் விரக்தியடைந்து விடுகின்றார்கள். வேறு சிலர் உருளைக்கிழங்கு போல துன்பங்களில் தம்மைக் கரைத்துக் கொண்டு மனத்தோற்றம், வெளித்தோற்றம் ஆகிய இரண்டிலும் கோழைகளாகி விடுகின்றனர். இப்போது என் கேள்வி உனக்கு புரிகிறதா? என்று சிவாவிடம் கணேசன் கேட்டார்.
அதற்கு சிவா, அப்பா இனி நான் டீத்தூளைப் போன்றவன் என்று உற்சாகமாகப் பதில் சொன்னான். இன்று முதல் நான் டீத்தூளைப் போலவே எந்தக் கஷ்டம் வந்தாலும், அதை நான் முன்னேறுவதற்கு வந்த வாய்ப்பாக மனமுவந்து சந்தித்து, சோதனைகளை டீத்தூள் போன்று சாதனைகளாக மாற்றிக் கொண்டு வாழ்வேன் என்று உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கூறினான். சிவா கூறியது போலவே புத்துணர்ச்சியுடன் தொழிலில் லாபம் பெற என்ன செய்ய வேண்டும், என்ன யுக்திகளை கையாள வேண்டும் என்று சிந்தித்து அதை தொழிலில் புகுத்தி செயல்பட ஆரம்பித்தான். சில மாதங்களிலேயே அவன் செய்து வந்த சுயதொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.
தத்துவம் :
சோதனைகளைக் கண்டு சோர்ந்து போகாமல், அந்த சோதனையையே சாதனைகளாக மாற்ற முயல வேண்டும்.
கோவில் யானை
ஒரு ஊரில் இருந்த ஒரு கோவிலின் அருகே ஒருவர் ஒரு தையல் கடை வைத்து நடத்திக் கொண்டிருந்தார். அந்த தையல் கடைக்கு அருகில் இருந்த அந்த கோவிலில் கோவில் யானை ஒன்று இருந்தது. அந்த யானை தினமும் குளிக்கச் செல்லும் முன் தையற்கடையின் முன்பாக வந்து நிற்கும். தையல் கடைக்காரரும் அந்த யானை உண்பதற்கு பழங்கள், தேங்காய் முதலியவற்றை கொடுப்பார்.
தையல் கடைக்காரர் கொடுத்தப் பழங்களை சாப்பிட்டு முடித்ததும் யானை அந்த தையல் கடைக்காரருக்கு ஆசி வழங்கிவிட்டு குளிக்க செல்லும். மேலும், அந்த யானை, அந்த தையல் கடைக்காரருக்கு பல வேளைகளில் உதவியும் செய்து வந்தது. ஒரு நாள் அந்த தையற்கடைக்காரருக்கு மனதில் தீய எண்ணம் தோன்றியது. ஒரு நாள் வழக்கம்போல் அந்த கோவில் யானை அந்த தையல் கடைக்காரரின் கடை முன்பு வந்து நின்றது. அந்த தையல் கடைக்காரர் யானைக்கு சாப்பிட பழங்கள் எதையும் கொடுக்காமல், தான் துணி தைப்பதற்கு வைத்திருந்த ஊசியால் யானையின் தும்பிக்கையில் நறுக்கென்று குத்திவிட்டார்.
யானையும், தையற்காரனின் செய்கையை மனதில் பதிய வைத்துக் கொண்டு குளிக்கச் சென்றது. அது ஆற்றில் குளித்து முடித்த பின்பு சேறு நிரம்பிய பகுதிக்குச் சென்று, சேற்றை தனது தும்பிக்கையில் நன்றாக உறிஞ்சி வைத்துக் கொண்டது. குளித்துவிட்டு யானை திரும்பி வரும் வழியில் அந்த தையற்கடைக்காரரின் முன்பாக வந்து நின்றது. அந்த தையற்கடைக்காரரோ துணிகளைத் தைப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். அது பண்டிகைக் காலமாக இருந்ததால் அவர் நிறைய புதிய துணிகளைக் கடைக்குள் வைத்திருந்தான். யானை தன் கடையின் முன்பு வந்து நிற்பது கூடத் தெரியாமல் துணிகளை மும்மரமாகத் தைத்துக் கொண்டிருந்தார்.
அப்போது தையற்காரர் சற்றும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் யானை தனது தும்பிக்கையிலுள்ள சேற்றை, கடையிலுள்ள துணிகளில் எல்லாம் வாரி இறைத்து விட்டு, அங்கிருந்து யானை சென்று விட்டது. தையல்காரரின் துணிகள் எல்லாம் சேறு பட்டு வீணாகிப் போனது. உண்ண பழங்கள் தருவான் என்று நம்பி வந்த யானைக்கு தான் செய்த தவறுக்கு தண்டனை தான் இது என்று தையற்கடைக்காரர் புரிந்து கொண்டார்.
மேலும் யானை நினைத்திருந்தால் என்னை என்னவேண்டுமானாலும் செய்திருக்க முடியும். அப்படி செய்யாமல் நான் செய்த தவறுக்கு தண்டனை அளித்து விட்டு செல்லும் யானையின் நல்ல மனதைப் புரிந்து கொண்டார். மேலும், அந்த யானையிடம் இருந்து ஒருவருக்கு நாம் நன்மை செய்தால், அவரிடம் இருந்து நன்மைக் கிடைக்கும் என்றும், ஒருவருக்கு தீமை செய்தால் தீமைதான் விளையும் என்பதையும் புரிந்து கொண்டார். அதோடு மட்டுமல்லாமல் தான் யானைக்கு செய்த செயலை எண்ணி வெட்கி தலைக் குனிந்தார்.
தத்துவம் :
வினை விதைத்தவன் வினை அறுப்பான், திணை விதைத்தவன் திணை அறுப்பான் என்ற பழமொழிக்கு ஏற்ப, நாம் மற்றவர்களுக்கு நன்மை செய்தால் நன்மை கிடைக்கும். தீமை செய்தால் தீமை தான் கிடைக்கும். அதனால் எல்லோருக்கும் நன்மை செய்து நலமுடன் வாழ்வோம்.
மரத்தின் பாசம் !
ஒரு ஊரில் ராஜா என்னும் சிறுவன் இருந்தான். அவன் இருந்த வீட்டின் பக்கத்தில் பெரிய மரம் அழகுடன் காட்சி தந்தது. அச்சிறுவன் தினந்தோறும் அம்மரத்தில் ஏறி, பழங்களை பறித்து உண்பான். சிறிது நேரம் மரத்தின் கீழே அமர்ந்து இளைப்பாறுவான். பின்பு மகிழ்ச்சியுடன் அம்மரத்தில் ஏறி விளையாடுவான். இதைக் கண்டு அம்மரமும் மிகவும் மகிழ்ந்தது. நாட்கள் போகப்போக அம்மரமும் அச்சிறுவனின் வரவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும். அச்சிறுவன் வந்ததும் கிளைகளை அசைத்து தன் மகிழ்ச்சியை தெரிவிக்கும்.
நாளடைவில் அம்மரமும் அச்சிறுவனிடம் பேச ஆரம்பித்தது. மரமும், சிறுவனும் நண்பர்களாகி அன்புடன் பழகி வந்தார்கள். அதன்பின் சில மாதங்களாக அச்சிறுவன் வராதததை கண்டு மரம் ஏங்கியது. தினமும் அச்சிறுவனின் வரவை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்தது. சில மாதங்கள் கழித்து அச்சிறுவன் மரத்தை காண வந்தான். மரம் அச்சிறுவனை கண்டதும், வா! வா! உனக்காக தான் இத்தனை நாட்கள் காத்து கொண்டிருக்கிறேன். ஏன் இத்தனை நாட்களாக என்னை பார்க்க வரவில்லை. வா! வந்து என்மேல் ஏறி விளையாடு. என் கனிகளை பறித்து உண் என்றது. சிறுவன், மரமே! எனக்கு அதில் விருப்பம் இல்லை. இப்பொழுது நான் வளர்ந்துவிட்டேன். எனக்கு விளையாட பொம்மைகள் தான் வேண்டும் என்று வருத்தத்துடன் கூறினான்.
மரம், சிறுவனின் வருத்தத்தை கண்டு தானும் வருந்தியது. பின் அச்சிறுவனிடம், நீ மரத்தில் இருக்கும் கனிகளை பறித்து சென்று சந்தையில் விற்றால், அதன் மூலம் பணம் கிடைக்கும். அதை வைத்து நீ பொம்மைகள் வாங்கி கொள்ளலாம் என்றது. அச்சிறுவனும் மரம் கூறியபடியே செய்தான். அதன்பின் நீண்ட நாட்களுக்கு அவன் மரத்தை காண வரவில்லை. மரமும், ஒவ்வொரு நாளும் அவன் வரும் வழி நோக்கிக் காத்திருந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு அவன் மரத்தை காண வந்தான். மரம், அவனை கண்டவுடன், மிகவும் மகிழ்ந்தது. மரம், ஏன் இத்தனை நாட்களாக என்னை காண வரவில்லை எனக் கேட்டது. அவன், மரமே! நீ சிறிதும் மாறவில்லை. ஆனால் எனக்கு திருமணம் ஆகிவிட்டது. இப்பொழுது என் குடும்பத்தை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. வீடு கட்ட சிறிது மரங்கள் தேவை என வருத்தத்துடன் கூறியது. மரம், இதற்கு ஏன் வருந்துகிறாய்? என் கிளைகளை வெட்டி கொண்டு செல் என்றது. அவனும் மரத்தின் எல்லா கிளைகளையும் வெட்டிக் கொண்டு சென்றான்.
அதன்பின் பல வருடங்கள் அவன் மரத்தை காண வரவில்லை. மரமும் அவனது வருகையை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்தது. மறுபடியும் பல வருடங்கள் கழித்து அவன் மரத்தை பார்க்க வந்தான். மரம் அவனை கண்டு மனம் மகிழ்ந்தது. அவன் மரத்திடம், எனக்கு படகு செய்ய வேண்டும் என்று வருத்தத்துடன் கூறினான். மரம் அவனிடம், நீ ஏன் வருந்துகிறாய்? என்னை வெட்டிக் கொண்டு சென்று படகு செய்து கொள் என்றது. அவனும் மரத்தை வெட்டிக் கொண்டு சென்றான். மரத்தின் அடிப்பகுதி மட்டும்தான் மீதம் இருந்தது. மறுபடியும் அவன் பல வருடங்கள் கழித்து மரத்தை காண வந்தான். அப்பொழுது அவன் முதுமை பருவத்தை அடைந்திருந்தான். மரம் அவனை கண்டு அளவற்ற மகிழ்ச்சி அடைந்தது. மரம், அவனைப் பார்த்து, ஏன் இவ்வளவு சோர்வாக இருக்கிறாய்? எனக் கேட்டது. அதற்கு அவன், எனக்கு வயதாகிவிட்டதால் சோர்வாக உள்ளேன். எனக்கு இப்பொழுது ஓய்வு தான் தேவை என்றான். மரம், இவ்வளவு தானே! வா என் மேல் அமர்ந்து கொள் என்று மகிழ்வுடன் கூறியது. பின் அவன் அந்த மரத்தின் அடிப்பகுதியில் அமர்ந்து கொண்டு ஓய்வெடுத்தான். இந்த அளவிற்காவது அவனுக்கு உதவ முடிந்ததே என்று மரம் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தது.
தத்துவம் :
பெற்றோர்களிடம் இருந்து நாம் எவ்வளவோ பெற்றுக் கொண்டிருக்கிறோம். பெற்றதில் மகிழ்கின்ற நாம் அவர்களுக்கு திரும்ப ஏதேனும் கொடுத்தது உண்டா? என்றால் இல்லை என்பது தான் பலரின் பதிலாய் இருக்கும். பெற்றதில் மகிழ்கின்ற நாம் முடிந்தவரை நம் அன்பையாவது அவர்களுக்கு கொடுப்போம்.
தன் வினைத் தன்னைச் சுடும் !!
ஒரு எழில் மிகுந்த சோலைகள் உள்ள கிராமத்தில் குப்புசாமி என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு முருங்கை மரம் இருந்தது. வாரம் ஒரு முறை முருங்கைக்காய்களை பறித்து, பையில் நிரப்பி தோளில் வைத்துக்கொண்டு ஒன்பது கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் நகரத்தின் வரை நடந்து சென்றே, வாடிக்கையாக ஒரு மளிகை கடையில் விற்றுவிட்டு வருவது வழக்கம்.
முருங்கைக்காயை கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவார். குப்புசாமி கொண்டுவரும் முருங்கைக்காயின் சுவை அந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரபலமானது. இதை பயன்படுத்தி மற்ற முருங்கைக்காயோடு கலந்து மளிகை கடைக்காரரும் நல்ல லாபம் சம்பாதித்து விடுவார்!
பல வருடமாக குப்புசாமி முருங்கைக்காய் கொண்டுவருவதால் மளிகை கடைக்காரர் அதை எடை போட்டு பார்த்ததில்லை. குப்புசாமி சொல்கின்ற எடையை அப்படியே நம்பி அதற்கு ஈடான மளிகை பொருட்களை கொடுத்து அனுப்புவார். அதற்கு காரணம், குப்புசாமியின் நேர்மையும், நாணயமும் தான்
ஒரு நாள் குப்புசாமி பத்து கிலோ முருங்கைக்காயை கொடுத்துவிட்டு அதற்கான பொருட்களை வாங்கிச்சென்றார். சிறிது நேரத்தில் பத்து கிலோ முருங்கைக்காய் மொத்தமாய் வேண்டும் என்று ஒரு சமையல்காரர் வந்து கேட்க அவருக்காக மளிகைக்காரர் எடைபோட அதில் ஒன்பது கிலோ மட்டுமே இருந்தது.
அன்று முழுவதும் மளிகைக்காரருக்கு தூக்கமே வரவில்லை. குப்புசாமி மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தோம், இவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகத்தை செய்துவிட்டாரே. இத்தனை வருடங்களாக இப்படி முட்டாள்தனமாக எடை குறைவான முருங்கைக்காயை வாங்கி ஏமாந்து விட்டோமே!!
அடுத்த முறை குப்புசாமி வந்தால் சும்மா விடக்கூடாது என்று கடுங்கோபத்தில் இருந்தார் அந்த மளிகைக்காரர். நான்கு நாட்கள் கழித்து குப்புசாமி மிகவும் சந்தோஷமாக வந்தார்.
நல்ல விளைச்சல் என்பதால் நிறைய கொண்டு வந்திருந்தார். கையும், களவுமாக பிடிக்கவேண்டும் என்று, எத்தனை கிலோ என்று மளிகைக்காரர் கேட்க பத்து கிலோ என்றார் குப்புசாமி. அவர் முன்னாலேயே எடைபோட்டு பார்க்க ஒன்பது கிலோ தான் இருந்தது. வந்த கோபத்தில் மளிகைக்காரர் பளார், பளார் என குப்புசாமியின் கன்னத்தில் அறைந்தார்.
இத்தனை வருடமா? இப்படித்தான் என்னை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறாயா? கிராமத்துக்காரங்க ஏமாற்றமாட்டார்கள் என நம்பிதானே எடை போடாமல் அப்படியே வாங்கினேன். இப்படி துரோகம் பண்ணிட்டியே, என்று மளிகைக்காரர் கூறினார்.
அய்யா! என்னை மன்னித்துவிடுங்கள். நான் மிகவும் ஏழை, எடைக்கல்லு வாங்குகிற அளவிற்கு என்னிடம் காசு இல்லை. ஒவ்வொரு முறையும் நீங்க கொடுக்கிற ஒரு கிலோ பருப்பை ஒரு தட்டிலும், இன்னொரு தட்டில் முருங்கைக்காயையும் வைத்து தான் எடைபோட்டு கொண்டு வருவேன்.
இதை தவிர வேற எதுவும் தெரியாதுங்கய்யா, என்று காலை பிடித்து அழ, மளிகைக்காரருக்கு செருப்பால் அடித்தது போல் இருந்தது. தான் செய்த துரோகம் தனக்கே வந்ததை உணர்ந்தார். இத்தனை வருடங்களாக குப்புசாமியை ஏமாற்ற நினைத்த மளிகைக்காரரும், அவருக்கே தெரியாமல் ஏமாந்து கொண்டுதான் இருந்திருக்கிறார் என்பது தெளிவானது.
தத்துவம் :
இது தான் உலகநியதி. நாம் எதை தருகிறோமோ அதுதான் நமக்கு திரும்ப வரும். நல்லதை தந்தால் நல்லது வரும், தீமையை தந்தால் தீமை வரும். ஆகவே நல்லதை மட்டுமே தருவோம், நல்லதை மட்டுமே செய்வோம்!!
எதிர்மறை சிந்தனையை எப்படி விரட்டுவது?
அது ஒரு மலை பிரதேசம். ஒரு இளம் ஜோடி ஒன்று பேருந்தில் சென்று கொண்டிருந்தார்கள். அந்த பேருந்து வளிந்து நெளிந்த பாதைகளில் சென்று கொண்டிருந்தது. திடீரென்று அந்த இளம் ஜோடியினர் பேருந்தில் இருந்து இறங்க முடிவு செய்தனர். அந்த இளம் ஜோடியினர் பேருந்தை நிறுத்தி இறங்கிக் கொண்டனர்.
அவர்கள் இறங்கிய அந்த வனப்பகுதியில் குயில்களும், மயில்களும், பறவைகளும் ஆடிப் பாடி விளையாடிக் கொண்டிருந்தனர். ஆனால் அந்த இளம் ஜோடிக்கு இந்த சுற்றுச்சுழல் மகிழ்ச்சியை தரவில்லை. இருவரும் மலைமீது இருந்த பாறையில் ஏறி நின்றனர். அந்த மலை உச்சியில் இருந்து கீழே பார்த்தபோது அவர்களின் கைகால்கள் நடுங்கியது. அவர்களின் உடலும் ஒருவாறு நடுங்க ஆரம்பித்தது.
பின் இருவரும் கண்களை மூடிக் கொண்டு தங்கள் கரங்களை பற்றிக் கொண்டனர். திடீரென்று மிகப்பெரிய சத்தம் கேட்டது. அச்சத்தத்தை கேட்டு அங்கிருந்த விலங்குகளும், பறவைகளும் அலறி அடித்து ஓடின. அந்த இளம் ஜோடியினர் சத்தத்தை நோக்கிச் சென்றனர். வெகு தூரத்தில் அவர்கள் வந்த பேருந்தின் மீது பெரிய பாறை விழுந்து பேருந்து நசுங்கி இருந்தது. இப்பேருந்து விபத்தில் இருந்து ஒருவரும் தப்ப முடியவில்லை. அனைவரும் அப்பாறைக்கு இரையாயினர். அந்த நேரத்தில், அப்பகுதியில் நிசப்தம் மட்டும் நிலவியது.
அந்த இளம் ஜோடியினர் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். இருவருமே நாம் அந்த பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக்கூடாது என கூறினர். அவர்கள் ஏன் அவ்வாறு கூறினார்கள் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா?
அந்த இளம் ஜோடியினர் அப்பேருந்தில் இறங்காமல் இருந்திருந்தால், சில நிமிடங்களுக்கு முன்னரே பேருந்து அந்த இடத்தைக் கடந்திருக்கும். பாறை விழும் பேராபத்தில் இருந்து அனைவரும் தப்பி இருப்பார்கள்.
தத்துவம் :
எதிர்மறையான சிந்தனை நமக்கு தோன்றினால், நாம் நேர்மறையாக சிந்திக்க கற்றுக்கொள்ள வேண்டும். எதிர்மறைவான சிந்தனையை தகர்த்து ஆக்கபூர்வ எண்ணங்களை வளர்த்திடுவோம்.
Thanks and regards
A s Govinda rajan
17/5 Sri andal flats andavar nagar second Street Kodambakkam Chennai