tamilnadu epaper

உயிர்வேலி

உயிர்வேலி

 

*அறுபத்தைந்து வயது செண்பகம் பாட்டி குளியலறை வாசலில் குத்தாட்டம் போட்டு குடை ராட்டிணம் போல சுழன்றாடுவதை தூரமாக நின்று வாயடைத்துப்போய் பார்த்துக் கொண்டிருந்தாள் அவரது மருமகள் புவனா.

   சின்னச்சின்ன சண்டைச் சச்சரவுகள் மாமியார் -மருமகளுக்குள் அவ்வப்போது உண்டென்றாலும் ஒருபோதும் முற்றி முகம் திருப்பிக்கொள்ளும் அளவுக்கு அனுமதித்ததில்லை இருவரும்.

    தனது ஆனந்த ஆட்டத்தை மருமகள் பார்த்துவிட்டதை எண்ணி புதுப்பெண் போல முகம் சிவந்து போனார் செண்பகம் பாட்டி.

    "என்ன..அத்தே..

சந்தோசமான சங்கதின்னா என்கிட்ட சொல்லலாம்ல...நாங்க மட்டும் ஆடத்தெரியாமலா இருக்கோம்.?!" நமட்டுச் சிரிப்போடு கேட்ட மருமகள் வாயைப் பொத்தி.."பக்கத்து வீட்டு பாலுகிட்ட உம்புருசன் புலம்பறதைக் கேளு..அப்புறமா ...

சமாச்சாரம் சந்தோசமா இல்லியான்னு சொல்லு.!'என்றார் செண்பகம் பாட்டி.

    பக்கத்து வீட்டு அண்ணனிடம் தன் கணவன் புலம்புவதை கேட்ட புவனாவின் நினைவலைகள் இருபது நாட்களுக்கு முன் தன்வீட்டில் நடந்த சம்பவத்தை கண்முன் கொண்டுவந்தது.

       ***********

"புவனா..புவனா..

வேலிக்கால்கள்ல கட்டியிருக்குற துணிக்காயப்போடுற கயித்தை எல்லாம் அவிழ்த்து எடு..இந்த முட்படல் வேலி .முப்பதுலட்ச ரூவா வீட்டோட பார்வையையே கெடுக்குது..தழை

தாம்புல சுணைப்பூச்சிக வேற உண்டாகி வீட்டுக்குள்ள படையெடுக்குது..கால் கூசாம நடக்கக்கூட முடியல" 

     "நம்ம..ராமலிங்கம் மேஸ்திரிகிட்ட 'ரெடிமேட் ஸ்லாப் காம்பவுண்ட்'போட ஆர்டர் கொடுத்துட்டேன்.

.வேலைக்கு ஆளுங்க வந்திருவாங்க"என்றார் செண்பகவள்ளியின் மகன் பக்கிரிசாமி.

  " அடே....ய்ய்...முப்பது

லட்சரூவா வீடுகட்டுன பவிசுக்காரா...எம் பொழப்புல மண்ணை அள்ளிப் போட்டுட்டு..உசுருக்கு உசிரா வச்சி காவந்து பண்ணுன வயக்காட்டை வித்து வீடுகட்டுனப்ப கூட..ஒத்தப்

பிள்ளையாச்சேன்னு விட்டுக் கொடுத்தேன்..இப்ப வேலியில கை வச்ச நடக்குறதே வேற"என்றார் செண்பகம் பாட்டி.

   "அம்மா..பழசை கட்டிகிட்டு அழுதுகிட்டிருக்க என்னால முடியாதும்மா..நாலு எடம் போய்வர்ற எனக்கு நாகரீகமா நம்ம வீட்டையும் வச்சிக்கனும்னு ஆசை இருக்கும்ல..

புரிஞ்சுக்கம்மா" என்றார் பக்கிரிசாமி.

    "யப்பா..நாப்பது நாப்பத்தஞ்சு வருச காலமா மண்ணோட மல்லுக்கட்டுனவ நானு.!..பயிர் ஒவ்வொன்னையும் உடன்பொறந்த உயிரா நெனக்கிற பாட்டாளி குடும்ப ரத்தம்டா..நாம.!..

கெடந்து உழலத்தான் மண்ணு இல்லேன்னு ஆகிப்போச்சு...வேலிக்கால்லயாவது ரெண்டு பச்சை பசலைகளை வளர்த்து ..அதுக்கு தண்ணீ ஊத்தி என் தாகத்தை தீர்த்துக்கறேன்..

உனக்கு புண்ணியமா போகுது இந்த வேலியை மட்டும் என் உசிரு இருக்குற வரைக்கும் விட்டுவையப்பா." என்றார் செண்பகம் பாட்டி.

   "அட...சும்மா கெடம்மா..கெரகம்...

விவசாயிகளையே வேற்றுகிரக மனுசங்களா நாதியத்து வீதியில புலம்ப விடுற நாட்டுல..பச்சைய பாக்கனும்...பாளைய பாக்கனும்னுகிட்டிருக்க...வேணும்னா மொட்டை மாடியில் தொட்டிகளை வாங்கித் தோட்டம் போட்டுத்தரச் சொல்றேன்...இப்ப வேலிய பிரிக்குறதை தடுக்காம..தள்ளிப்

போம்மா.." என்றார் பக்கிரிசாமி.

    "அடப்பாவி..புரியாத மரமண்டையா இருக்கியேடா..இதோ இந்த' கிளுவை'த் தழைகளை கிள்ளிப்போட்டு தான் கிடை ஆடுகளை வளர்க்கறேன்.

.'செம்பருத்தி'த் தழைகளை அரைச்சு தேய்க்கப் போயிதாண்டா இடுப்புக்கு கீழே விழுகுற முடிக்கத்தையை வளர்த்துகிட்டு குளுக்குறா உம்பொண்டாட்டி...

'பூவரசம்'இலைகள்ல நான் பீப்பி செஞ்சு கொடுத்து ஊதாம ஒருநாள் கழியுமா...எம்பேரப்

பிள்ளைகளுக்கு.

.'கண்ணால முருங்கை'தோசை மாசம் ரெண்டு தடவை சாப்பிடலேன்னா..உன்னோட சளிப்பிரச்சினை தான் தீர்ந்திருக்குமா..?" 

   "உப்புளிக்கொடி..

உத்தாமணிக்கொடி..மொசுமொசுக்கை...

பிரண்டைன்னு பலவகை மூலிகைகளை வளர்த்து ஊர்ப்பிள்ளைகளுக்கு எல்லாம் கை வைத்தியம் பார்த்து...உன் குலம் தழைக்கனும்னு புண்ணியம் தேடறேனே...இதுக்கு மேலயும் வேலியை எடுத்தாத்தான் உண்டுன்னா..என்னை வெட்டிப்போட்டு தலைமுழுகிட்டு செய்துக்க..போடா" ஆற்றாமையோடு புலம்பியபடி நகர்ந்தார் செண்பகம் பாட்டி.

  "வயசான காலத்துல அவங்களோட வயிற்றெரிச்சலை வாங்கிக் கட்டிகிட்டு ..என்னத்தை காம்பவுண்டு போடப்போறீங்க..

அவங்க இருக்குற வரைக்கும் அவங்க ஆசைப்படியே விட்டுடுங்களேன்" மனைவியின் வார்த்தைகளுக்கும் செவிமடுக்கவில்லை அவர்.

  வேலை முடிந்து..வெள்ளை அடிக்கும் வரை கடுங்கோபத்தோடு இருந்த செண்பகம் பாட்டியை எதிர் வீட்டு அம்சா தன் வீட்டுத் திண்ணையில் அமரவைத்து 'உன் மவன் மேல குறைபடாதே அக்கா..இப்ப பாரு உம்மவன் வூட்ட...தரங்கம்பாடி கோட்ட கணக்கா தகதகக்குது'..என்று செண்பகம் பாட்டியை சமாதானப்படுத்தினார்.

  இருந்தாலும் உள்ளுக்குள் குமுறிக் கொண்டிருந்தவருக்கு ...இப்போது பாலுவிடம் தன் மகன் கூறுவதை கேட்டதும் தாளாத சந்தோசம் தாறுமாறாக பொங்கி தள்ளாத வயதிலும் குத்தாட்டம் வரை கொண்டுவந்து நிறுத்திவிட்டது.

   "இந்த ரெடிமேட் ஸ்லாப்பை ஏன் வச்சோம்னு இருக்கு பாலு..எங்கம்மா வயிற்றெரிச்சலை கொட்டிகிட்டு சொந்தக்காசுல சூனியம் வச்சு கிட்ட கதையா ...போலீஸ் ஸ்டேசன் படியில கால் வைக்குற நிலமை வந்துட்டுதே....இப்பவே பிரிச்சு அந்தாண்ட கடாசிட்டு..பழைய

மாதிரி வேலிப்படல்களை வாங்கியாந்து கட்டிடப்போறேன்" விரக்தியோடு சொன்னார் பக்கிரிசாமி.

  "அது தானா..அத்தே..உங்க சந்தோசத்துக்கான காரணம்..அந்த சங்கதியோட ரிஷிமூலத்தை கேட்கலீயே நீங்க..மூனு நாளைக்கு முன்ன மேலத்தெருவுல ஒரு கல்யாணம் நடந்துதுல்ல..அந்த கல்யாண வாழ்த்துப் போஸ்டரை நம்ம காம்பவுண்ட் சுவத்துல ஒட்டியிருக்கானுங்க மேலத்தெரு பசங்க..அதை யாரோ விசமக்காரன் கிழிக்கப்போக...கீழத்தெரு ஆளுங்க மேல சந்தேப்பட்டு அடிதடி கலவரம் ஆகி...ஊர்ப்

பஞ்சாயத்துலயும் உண்மை தெரியாததால போலீஸ் கேஸ் ஆகிப்போச்சாம்..

சண்டைக்கு காரணமான இடம் நம்ம வீட்டு காம்பவுண்டுக்கறதால இவரையும் சாட்சியா சேர்த்துட்டாங்களாம்...

பத்து நாளா போலீஸ் ஸ்டேசனுக்கும் வீட்டுக்கும் அலையுறாங்க..

பிரச்சினை தீர்ற வழியக்காணும்...

தொழில் முடக்கம்.. பணச்செலவு..

மன உளைச்சல்..னு அவஸ்தையில அனத்திகிட்டே இருக்கார் உங்க பிள்ளை...ஊர் வம்பு தேடிவந்த பிறகுதான் புத்தி வந்திருக்கு உங்க பிள்ளைக்கு" என்றாள் மருமகள்.

  "அடியே...அம்சம்..உன் வீட்டு கொல்லையிலிருந்து ஒரு முழம் செம்பருத்திக் கிளை ஒடிச்சி குடுடி..பதியம் போடனும்.!" என்றபடியே உயிர்வேலி உயிர்பெறப் போகும் நம்பிக்கையோடு மிடுக்காக எழுந்து நடந்தாள் செண்பகம் பாட்டி.*

-------------------

 

*அரும்பூர்.க.குமாரகுரு*,மயிலாடுதுறை.

--------------