புஸ்தக வெளியீடு
14 பேர் சேர்ந்து எழுதிய 14 கதைகள்
முதற்பதிப்பு 2025
இந்தப் பூவுலகில் நாம் எளிதாக கடைபிடிக்க முடிவது பகவத் நாமம் சொல்வது மட்டுமே. ஆனால் அந்த நாமத்தைச் சொல்லி பகவானின் தரிசனம் கிடைக்கப் பெற்றது , அவரால் நேரடியாக சொர்க்கம் போனது, அவரின் அளவற்ற பெருங்கருணை தன் நாமம் சொன்னவர்க்கெல்லாம் எப்படி கிடைத்தது என்பதை யெல்லாம் விளக்கமாக இந்த பக்தி நூல் நமக்கு புரிய வைக்கிறது. நாமும் அவர்கள் போல் இல்லாவிட்டாலும் அதில் சிறு துளியேனும் செய்வோமா என்று நம்மை யோசிக்க வைக்கிறது.
இதன் முன்னுரையில் எழுத்தாளர் மன்னை பாசந்தி இப்படி சொல்கிறார் இந்நூலைப் பார்க்கப் பார்க்க ஆன்மிகம் மிளிர்ந்தது. படிக்கப் படிக்க ஆன்மிகம் தழைக்கிறது. வாசிக்க வாசிக்க இறையருள் கூடுகிறது. நாமும் அதை அப்படியே ஏற்றுக் கொள்கிறோம் படித்தவுடன். ஒவ்வொரு கதை முடிக்கும் போது நம்மையறியாமல் விட்டலா என்று ஒரு முறையேனும் சொல்லாமல் இருக்க முடியாது.
இதில் பாண்டுரங்கனின் பக்தர்கள் 14 பேரின் நாமஸ்மரணம் பற்றி தான் எழுதி இருக்கு.முதல் கதை பக்த சக்குபாய். சக்குபாயின் பாண்டுரங்க தரிசனத்துக்கு அந்த பாண்டுரங்கனே அவள் வடிவில் அவளின் வீட்டில் இருந்து சேவகம் செய்தார் என்றால் அவளின் பக்தியை எந்த வார்த்தையில் விவரிக்க?
இரண்டாம் கதை நாமதேவர். துணி விற்பனை செய்யப் போனவர் அதைச் செய்யாமல் நாம ஜபம் செய்து விட்டு அவர் அப்பா கேட்டபோது விற்று விட்டேன் என்று சொல்ல சிறு கல் தங்கக் கட்டியானது விட்டலன் கருணையால். பாண்டுரங்கா என பக்தியோடு அழைத்தால் உடனே ஓடோடி வருவான் அந்த விட்டலன்.
இன்னும் பாண்டுரங்கன் மீது கொண்ட பக்தியால் அவன் கோயிலில் மரமாக மாறி நிற்கும் கானோபாத்ரா, தென்னாங்கூர் கோயில் கட்டிய பக்தர் ஸ்வாமி ஹரிதாஸ்கிரி, கோரா கும்பரின் பக்திக் கதை, துக்காராம் எழுதிய அபங்கம் பற்றிய கதை, புரந்தரதாசர் பக்தி பற்றி, ஸ்ரீ ஞானேஸ்வர் சரிதம், பத்ராசல ராமதாசர் சரிதம், சோகாமேளரின் பக்திக்கு மயங்கி அந்த இறைவன் அவர் வீட்டில் வந்து உணவு அருந்திய கதை, மகாகவி சூர்தாசரின் கதை, அஷ்டபதி எழுதிய ஜயதேவர் சரிதம், ஜனாபாயின் அபங்கங்களை பாண்டுரங்கனே எழுதிய கதை, கடைசியாக துளசிதாசர் சரிதம் என திகட்டாத மனம் உருக வைக்கும் நாமஸ்மரணம் சொல்லும் இந்த புத்தகம் போற்றுதலுக்குரியது. அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
-இந்துமதி நடராஜன்,
சென்னை