குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான தீமையை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை ஒருங்கிணைத்து ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதியன்று குழந்தைத் தொழிலாளர்கள் ஒழிப்பு நாளாக அனுசரிக்கப்படுகிறது.
ஐ.நா அமைப்பின் சர்வதேச தொழிலாளர் அமைப்பால் 2002 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. குழந்தை தொழில்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கல்வி மற்றும் மருத்துவ சேவைகளுக்கு தகுந்த ஆதரவை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு இயல்பான குழந்தைப்பருவத்தை உறுதி செய்வதே இந்த நாளின் நோக்கமாக உள்ளது. எனவே, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமாகக் அனுசரிக்கப்படுகிறது.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) 2017 ஆம் ஆண்டு அறிக்கை, இந்தியாவில் 15 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 20 சதவீதம் பேர் அபாயகரமான தொழில்கள் மற்றும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும், 12 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் 17 வயதிற்கு முன்பே வேலையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் மதிப்பிட்டுள்ளது.
குழந்தைத் தொழிலில் ஈடுபடும் குழந்தைகளின் எண்ணிக்கை உலகம் முழுவதும் குறைந்து வந்த நிலையில், கொரோனா நோய்த்தொற்றிற்கு பிறகு சில இடங்களில் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு: பா. சீனிவாசன், செயலாளர், இந்தியன் ரெட் கிராஸ் சங்கம், வந்தவாசி கிளை.