இன்னொரு லாக் டவுன் காலத்துக்கு எல்லாம் நம்மால் தாங்க முடியாது என்று உலக நாடுகளில் ஆட்சியாளர்கள் முதல் பொதுமக்கள் வரை சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். விஷயம் அப்படி பதைபதைக்க வைத்திருக்கிறது. உலகம் முழுவதும் ஆட்டிப் படைத்த கொரோனா வைரஸ் போலவே மற்றொரு வைரஸ் அதே சீனாவின் வூகான் மாகாணத்தில் கண்டறியப்பட்டுள்ளதாக பிரபல ஆராய்ச்சி வல்லுநர் ஷி ஸெங்லி தெரிவித்துள்ளது உலக நாடுகளை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
சீனாவின் வூகான் வைராலஜி நிறுவனம், குவாங்சோ ஆய்வகம் குவாங்சோ அறிவியல் அகாடமி இணைந்து நடத்திய ஆய்வில், கொரோனா வைரஸுடன் பல வகைகளில் ஒத்துப் போகும் வகையில் எச்கேயு ஃபை (HKU5) என்கிற வைரஸ் சீனாவில் கண்டறியப்பட்டுள்ளது உலக நாடுகளைப் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளத்.
இந்த எச்கேயுஃபை வைரஸ் மனிதர்களிடையே பரவுவதற்கான ஆபத்துகள் அதிகளவில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் அச்சுறுத்தல்களை வெளிப்படுத்தியுள்ளது. கோவிட் போலவே இந்த வைரஸூம் ஆபத்தானது அல்ல என்றாலும், தொற்று நோய்க்கான தயார்நிலைக்காக இது கடந்தாண்டு உலக சுகாதார அமைப்பின் வளர்ந்து வரும் நோய்க்கிருமிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எச்கேயு ஃபை வைரஸ் மனிதர்களுக்குப் பரவக்கூடிய அபாயம் அதிகம் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ள நிலையில், நேரடியாகவோ மற்றொரு விலங்கின் மூலமாகவோ வௌவால்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் என்று கூறப்படுகிறது.
கொரோனா தொற்றுக்குக் காரணமான கோவிட்-19 வைரஸை விட இந்த எச்கேயு ஃபை வைரஸின் செயல்திறன் குறைவு என்பதால், மனிதர்களிடையே இந்த புதிய வைரஸ் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று மிகைப்படுத்திக் கூறி, அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடாது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.