tamilnadu epaper

ஊன்று கோல்

ஊன்று கோல்


அறியா பருவத்திலே

அன்பெனும் உலகின்

அரியாசனத்தில் 

அமரவைத்த

அன்னை ஒரு ஊன்று கோல்!


அறியாமை இருளை 

அகலவைக்க அருந்துணையாய் 

ஆசானாய்   உடனிருந்து உதவிய 

தந்தை ஒரு ஊன்று கோல்!


வாலிப பருவத்திலே

குடும்பமெனும்  சுமையை 

சலிக்காமல் சுமந்திடவே

சமமாய் தோள்கொடுத்த 

தாரம் ஒரு ஊன்றுகோல்!


உருமாறி நிலைமாறி

வீசிச்சென்ற 

பருவப்புயலின்  

வேகத்தில் 


ஓய்ந்துபோன 

மனதிற்கும்

தேய்ந்துபோன 

வாழ்க்கைக்கும் 

சாய்ந்துபோன 

உடலுக்கும்  


ஏதோ  ஒரு 

காய்ந்துபோன

மரக்கிளையே

கடைசி வரை ஊன்றுகோல் !


-ரேனுகாசுந்தரம்