சிவகுரு எனும் பாடகரை தெரியாதவர்கள் உலகில் யாரும் கிடையாது.
பல மொழிகளில் பல்லாயிரம் பாடல்களை பாடிக் கொண்டிருப்பவர் அவருடைய பாடல்கள் எங்கும் வீடுகளில், கடைகளில் என பட்டி, தொட்டி எங்கும் இன்றுவரை ஒலித்துக்கொண்டு தான் இருக்கிறது.
யாருக்கு சோகம் என்றாலும் இன்பம், துன்பம் எது எந்த நிகழ்வு ஏற்பட்டாலும் இவரின் வசீகர குரலில் ஒலிக்கும் பாடல்களே மனதுக்கு ஒத்தடம் கொடுக்கும்.
அவரின் இனிமையின் குரலுக்கு பல கோடி மக்கள் அடிமைகள்.
அவருக்கு பணம், புகழ், வசதி வாய்ப்புகள், அந்தஸ்து, தேசிய விருதுகள் எதிலும் குறைவில்லை.
மக்கள் அவரை குறித்து "அவருக்கு என்ன குறை ஒன்றுமில்லையே வாழ்ந்தா அவரை போல வாழணும்" என்றார்கள்
ஒரு சிலர் "கொடுத்து வச்சவரு குரல் வளமே மூலதனம் நாம பாரு என்ன தொழில் செஞ்சு என்னத்த கண்டோம்" பெருமூச்சு விட்டார்கள்.
பாடகர் சிவகுரு தன் மனைவி, மகன் குறித்து எந்த பேட்டியிலும், டி.வி. நிகழ்ச்சிகளிலும், பொதுவெளிகளிலும் பகிர்ந்து கொண்டதில்லை அதை அவர் விரும்பியதில்லை.
அவரின் குடும்பம் ஆஸ்திரேலியாவில் இருந்து வந்தது சில பத்திரிக்கைகள் 'இப்படியாக பொய் செய்தி பதித்து வந்தது
"பாடகர் சிவகுருவுக்கும் அவர் மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஆகவே பிரிந்து வாழ்கிறார்கள்"
"பாடகர் சிவகுரு வேறு திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் ஆகவே அவரின் மனைவியை பிரிந்து தனித்து வாழ்ந்து வருகிறார் "
இதை பாதி மக்கள் கூட்டம் உண்மை என நம்பி வந்தது
அவரோ இதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை
அவரின் மனப் பாரம் யாருக்கு தெரியப் போகிறது சில பத்திரிக்கைகள் மனச்சாட்சியின்றி பொய் பிரச்சாரம் செய்கிறது.
ஒவ்வொன்றையும் நிருபிக்க முற்பட்டால் காலம் தான் விரயமாகும் என அவர் அச்செய்திகளை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.
அவர் தவறாமல் ஒவ்வொரு மாதமும் ஓர் மாற்றுத் திறனாளி விடுதிக்கு செல்வது வழக்கம்.
அங்கே ஊமை, செவிடு குறைபாடு உள்ள பிள்ளைகளை சந்திப்பதும் அவர்களிடம் அன்பு செலுத்துவதும் அவருக்கு ஆத்ம திருப்தியை கொடுத்து வந்தது.
தன் பல கோடி சொத்துக்களை அப்படிப்பட்ட பிள்ளைகள் இருக்கும் ஆசிர்மங்களுக்கு எழுதி வைத்தார்.
தான் வாழ்தலின் அர்த்தம் அப்படிப்பட்ட பிள்ளைகளுக்கு உதவி செய்தல்தான் என்பது அவரின் ஆத்மார்த்த திருப்பதி ஆகும்.
எவ்வளவு பெரிய டாக்டர்களை கொண்டு பல கோடி ரூபாய் செலவு செய்து பார்த்தும் ஒரு முன்னேற்றமும் இல்லாமல் அவரின் ஒரே செல்ல மகன் பிறந்ததிலிருந்தே பிறவி ஊமையாய் தன் அம்மாவுடன் ஆஸ்திரேலியாவில் இருந்து வருகிறான்.
கவிமுகில் சுரேஷ்
தருமபுரி
(சிறுகதை)