கும்பகோணத்தில் இருந்து பட்டீஸ்வரம், ஆவூர் வழியாக தஞ்சாவூர் செல்லும் சாலையில் ஆவூரில் இருந்து சுமார் 2 கி மீ தூரத்தில் உள்ளது ஊத்துக்காடு கிராமம். தஞ்சை செல்லும் சாலையில் ஊத்துக்காடு கிருஷ்ணன் கோயில் பற்றிய வளைவு ஒன்று இருக்கும். அந்த வழியில் சென்றால் இந்த கிராமத்தை அடையலாம். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவில் உள்ளது இந்த கிராமம்.
இந்த ஊரில் புகழ்பெற்ற 'காளிங்க நர்த்தன பெருமாள்' கோயில் உள்ளது.மூலவர் வேத நாராயண பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சியளிக்கிறார். ஆயிரம் வருடங்கள் பழமையானது இக்கோயில்.
தேவலோக பசுவான காமதேனுவுக்கு விருப்பமாகவும் சுவாசமாகவும் இருந்தது இந்தஊத்துக்காடு தான். அதனால்தான் இந்த ஊர் தேனுசுவாசபுரம், என்றும் மூச்சுக்காடு என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வூருக்கு அருகில் உள்ளது ஆவூர் என்ற ஊரில் சிவன் கோயில் ஒன்று உள்ளது. இத்தலத்து இறைவன் ஸ்ரீ பசுபதீஸ்வரர். இவருக்கு சேவை செய்யும் பொருட்டு காமதேனு தனது இரு குழந்தைகளான நந்தினி, பட்டி என்ற கன்று பசுக்களை ஊத்துக்காட்டில் விட்டுச் சென்றது. அவை இரண்டும் இறைவனுக்கு தொடர்ந்து அபிஷேகத்திற்கு பாலும் பூஜைக்கு பூக்களும் கொடுத்தும் சேவை செய்து கொண்டு இருந்தன. நாரதர் அடிக்கடி இங்கு வந்து அந்த பசுக்களுக்கு தினமும் தெய்வீக கதைகளை சொல்லிக்கொண்டு இருந்தார். ஒரு நாள் அவர் ஸ்ரீ கிருஷ்ணர் கதையைசொன்னார். காளிங்கன் என்ற பாம்பு தலையில் நர்த்தனமாடி அவனையும் அவனது ஆணவத்தையும் அழித்த கதையை சொன்னார். அப்போது அவருக்கு வயது ஐந்து என்பதையும் எடுத்துரைத்தார். அவ்வளவு சின்ன வயசிலே காளிங்கனால் பகவான் எவ்வளவு துன்பப்பட்டு இருப்பான் என்பதை நினைத்து அந்த பசுக்கள் கண்ணீர் விட்டன.இதைக் கண்ட தேவலோகத்தில் இருந்த காமதேனு கண்ணனிடம் சென்று தன் பிள்ளைகள் நிலை குறித்து விவரித்து அதை தீர்த்து வைக்க வேண்டி கொண்டது.
காமதேனுவின் வேண்டுகோளை ஏற்று கண்ணன் இத்தலத்திற்கு வந்து அந்த பசுக்களை அரவணைத்து ஆறுதல் சொன்னார். பூக்கள் மலரும் புஷ்பவனத்திற்கு அருகில் ஒரு ஊற்றை உருவாக்க, தண்ணீர் பெருகி அங்கு ஒரு குளம் உண்டானது. ஊத்துக்காடு எனும் பெயரும் பெற்றது. அந்த குளத்திலேயே பசுக்களுக்காக மீண்டும் ஒரு முறை காளிங்க நர்த்தனம் நடத்திக் காட்டினார். இந்த நர்த்தனத்தால் தனக்கு எந்த துன்பமும் ஏற்படவில்லை என்பதை உணர்த்திக் காட்டினார். இந்த பெருமைமிகு நர்த்தன பெருமாள் இங்கு வாசம் செய்வதால் இந்த ஊருக்கு தென் கோகுலம் என்ற பெயரும் ஏற்பட்டது.
நாரதர் கிருஷ்ணனிடம் காளிங்க நர்த்தன லீலையை மறுபடியும் இங்கே புரிந்ததால் நீங்கள் இந்த ஊத்துக்காட்டில் விக்கிரகமாக தங்கி அனைவருக்கும் அருள் புரிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன்படி கிருஷ்ணன் இந்த ஊரில் தங்கி விட்டார்.ஸ்ரீ கிருஷ்ணன் விக்கிரகத்தை நாரதரே பிரதிஷ்டை செய்தார். அவரின் காலடியில் நந்தினி, பட்டிபசுக்களின் விக்கிரகங்கள் கண்ணனை அண்ணாந்து பார்த்த வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
இத்தலத்தில் வந்து வேண்டிக்கொண்டால் விவாக தடை நீங்கும். புத்திர பாக்கியம் கிடைக்கும்.ராகு, கேது சர்ப்ப தோஷம் நீங்கும். இசைக்கலைஞர்கள், நாட்டிய கலைஞர்கள் தங்கள் கலைகளில் மேலும் மேலும் பிரகாசிக்க இக்கோயிலில் உள்ள கிருஷ்ணனை வேண்டிக்கொள்வது உண்டு.
ரோகிணி நட்சத்திரக்காரர்கள் வணங்கி வழிபட வேண்டிய தலம் இது. ரோகிணி நட்சத்திர நாளில் இங்கு வந்து வழிபட்டால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். ஆவணி மாத ரோகிணி நட்சத்திர நாளில் - கிருஷ்ண ஜெயந்தி அன்று - சுமார் 800 லிட்டருக்கு மேல் பாலாபிஷேகம் இங்கு நடக்கும்.
காளிங்கன் மேல் நின்றபடி ஆடினாலும் சர்ப்பத்துக்கும் கண்ணனுக்கும் மெல்லிய நூலிழை அளவுக்கு இடைவெளியுடன் கண்ணன் விக்கிரக திருமேனி அமைந்துள்ளது இத்தலத்தின் சிறப்பு.
இந்த ஊரில் வாழ்ந்தவர் வேங்கட கவி என்கிற வெங்கட சுப்பையர். இவருடைய காலம் 1700 - 1765. மன்னார்குடியில் பிறந்த இவர் வாழ்ந்தது இந்த ஊரில்தான். இசை, நாட்டியம்,நாடகம் ஆகிய கலைகளில் ஆர்வம் உடையவராக இருந்தார். சரியான குரு யாரும் கிடைக்காத காரணத்தால் தனது தாயின் ஆலோசனைப்படி ஸ்ரீ கிருஷ்ணரையே குருவாக ஏற்றுக்கொண்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். பகவான் அவருக்கு காட்சியளித்து அருளினார். கிருஷ்ணனை தனது தெய்வீக ஆசான் என்று பல பாடல்களில் குறிப்பிடுகிறார். 12 ஆழ்வார்களும் தங்கள் பாசுரங்களில் இத்தலம் பற்றி பாடவில்லை. அந்த வருத்தத்தை போக்கியவர் வேங்கட கவி அவர்கள்.
அவரது கீர்த்தனைகள் ஒலிக்காத சங்கீத மேடைகள் இல்லை. அவர் இயற்றிய 'அலைபாயுதே கண்ணா.." பாடலை கேட்காத செவிகள் உலகில் இல்லை என்று சொல்லலாம். அறியாத பருவத்தில் பள்ளியில் பாட்டுப் போட்டியில் நம்மில் பலர் அந்த பாடலைப் பாடி பரிசு வாங்கி இருப்போம். அதை இயற்றியது யாரென்று அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஊத்துக்காடு சென்ற பிறகு, ஊத்துக்காடு வேங்கட கவி பற்றி தெரிந்து கொண்ட போது தான் 'அலைபாயுதே' பாடல் அவர் இயற்றியது என்பதை நான் தெரிந்து கொண்டேன்.
இவ்வூரில் அரசு நடுநிலைப் பள்ளி ஒன்று உள்ளது. உடற்கல்விஆசிரியர் உட்பட 7 ஆசிரியர்கள் உள்ளனர். மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு எல்.கே.ஜி. , யூ.கே.ஜி. வகுப்புகள் இங்கு தொடங்கப்பட்டது என்று பள்ளியின் தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.
இவ்வூரின் பிரதானமானது விவசாயம்தான். இந்த ஊரைச் சுற்றிலும் தென்னை மரங்கள் வாழை மரங்கள் நிறைந்து காணப்படுகிறது.சில இடங்களில் மூன்றாவது போகம் நெல் அறுவடை நடந்து முடிந்துள்ளது.சில இடங்களில் குறுவை சாகுபடி வேலைகள் தொடங்கி நடந்துகொண்டு இருக்கிறது.
ஊத்துக்காட்டில் பழமையான சிவன் கோயில் ஒன்று உள்ளது. மூலவர் கயிலாய நாதர் அம்பாள் ஸ்ரீ குங்கும நாயகி. ஊத்துக்கட்டுக்கு கிழக்கே உள்ளது 'ஆவூர்'. இந்த ஊரில் புகழ்பெற்ற பசுபதீஸ்வரர் கோயில் உள்ளது. சங்ககாலப் புலவர்கள் ஆவூர் கிழார், ஆவூர் மூலங்கிழார், பெருந்தலைச் சாத்தனார் ஆகியோர் இங்கு பிறந்தவர்கள். ஆவூருக்கு அடுத்ததாக பட்டீஸ்வரம் உள்ளது. இங்கு தேனுபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது.இந்த கோவிலின் வடக்கு வாசலில் சக்தி வாய்ந்த துர்க்கை அம்மன் சந்நிதி உள்ளது.
===
திருமாளம் எஸ். பழனிவேல்