tamilnadu epaper

எங்கள் ஊர் கூத்தனூர்

எங்கள் ஊர் கூத்தனூர்

திருவாரூர் மாவட்டம் , நன்னிலம் தாலுகாவில் உள்ளது கூத்தனூர்.

மயிலாடுதுறை --திருவாரூர் பஸ் மார்க்கத்தில் பூந்தோட்டம் என்ற ஊர் உள்ளது.அங்கு கடைத் தெரு பஸ் ஸ்டாப்பில் இறங்கி , அங்கிருந்து 1 கி.மீ .தூரத்திலுள்ள கூத்தனூரை அடையலாம்.

   கல்விக் கடவுள் கலைவாணிக்கு ஸ்ரீ மஹா சரஸ்வதி ஆலயம் என்ற பெயரில் தனியாகக் கோவில் உள்ளது.

   விக்கிரம சோழனின் அரசவைப் புலவர் ஒட்டக்கூத்தர் வரகவி பாடும் தன்மை பெற விரும்பினார். அவர் ஹரிநாதேஸ்வரம் என்ற ஊரில் தங்கி , ஹரி சொல் ஆறு ( தற்பொழுது அது அரசலாறு என்று அழைக்கப்படுகிறது) நதியில் தினமும் நீராடி , மகா கணபதியை வணங்கி , கலைமகளைக் குறித்து கடும் தவம் இருந்தார்.கலைமகள் , ஒட்டக்கூத்தரின் தவத்தைக் கண்டு மெச்சி , தனது வாய்த் தாம்பூலத்தை அவர் வாயில் உமிழ்ந்து வரகவி பாடும் வல்லமையை அருளினாள்.ஒட்டக்கூத்தரின் வேண்டுகோளுக்கிணங்கி , சரஸ்வதி தேவி அங்கேயே கோவில் கொண்டாள்.ஒட்டக்கூத்தன் பெயரால் ஊர் ( கூத்தன் + ஊர் ) கூத்தனூர் ஆயிற்று.

     ஸ்ரீ மஹா சரஸ்வதி அம்பாள் கோவிலில் வஸந்த நவராத்திரியும் , சாரதா நவராத்திரியும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

சரஸ்வதி பூஜையன்று அம்பாளின் பாதங்களை 

அர்த்த மண்டபம் வரை நீட்டியிருப்பார்கள்.அன்று மட்டும் பக்தர்கள் அம்பாளுக்கு ,அவர்களே நேரிடையாக அர்ச்சனை செய்யலாம்.உள்ளூர்வாசிகள் அன்று வீட்டில் தனியாக சரஸ்வதி பூஜை செய்வதில்லை. கோவிலில் போய் கொண்டாடுவார்கள்.

    விஜயதசமி அன்று குழந்தைகளுக்கு அக்ஷராப்யாசம் செய்து வைக்கப்படுகிறது.

சரியாகப் பேச்சு வராத குழந்தைகளுக்கு , அம்பாளின் அபிஷேகத் தேனை நாக்கில் தடவி வர , பேச்சு வரும்.

   நவராத்திரி ஒன்பது நாளும் சங்கீதக் கச்சேரிகள் , பரதநாட்டியம் போன்றவைகள் நடைபெறும்.வித்வான்கள் தங்கள் சொந்த செலவில் வந்து , இலவசமாக பாடுவார்கள்.

   எம்.எல்.வசந்தகுமாரி ஆண்டுதோறும் தவறாமல் வந்து கச்சேரி செய்தார்.

---> இவ்வூர் ஹரிநாதேஸ்வரர் சிவன் கோயிலிலுள்ள தக்ஷிணாமூர்த்தி பனிரெண்டு ராசிகளின் மேல் அமர்ந்துள்ளார்.

---> துர்கா , லக்ஷ்மி , சரஸ்வதி என்ற மூவரும் முப்பெரும் தேவிகளாவர்.துர்கையை சிவாலயத்திலும் , மஹாலக்ஷ்மியை பெருமாள் கோவிலிலும் , சரஸ்வதியை ஸ்ரீ மஹா சரஸ்வதியாக தனிக் கோவிலிலும் தரிசிக்கலாம்.

---> இவ்வூரில் ஓடும் அரசலாறு உத்தரவாகினியாக ( வடக்கு நோக்கி ) ஓடுவதால் , அதில் நீராடுவது மிகுந்த புண்ணியத்தைத் தரும்.

( காசியில் கங்கையும் , திருக்கோடிக்காவலில் காவேரியும் உத்தரவாகினியாக ஓடுவதால் கூடுதல் விசேஷம்.)

---> இங்கு கிழக்கு , மேற்கு , வடக்கு , தெற்கு தெருக்களும் , நடுத் தெரு , சந்நிதித் தெருவும் உள்ளன.

---> இவ்வூரில் பிறந்த பெண் குழந்தைகளில் , 

வீட்டிற்கு ஒருவருக்கு சரஸ்வதி என்ற பெயர் இருக்கும்.

---> இந்த ஊர் அந்தணர்களின் குலதெய்வமான ஸ்ரீ பால சாஸ்தா கோவிலுக்குப் பெண்கள் செல்லக் கூடாது .

---> சங்கீத கலாநிதி , பத்மபூஷண் எம்.எல்.வசந்தகுமாரி , காலம் சென்ற பிரபல மனோதத்துவ டாக்டர் என்.மாத்ரூபூதம் இவ்வூரைச் சேர்ந்தவர்கள்.

---> B H E L , MARUTI , S A I L சேர்மனாக இருந்த வி. கிருஷ்ணமூர்த்தியின் மனைவி இவ்வூர்க்காரர்.

---> இந்த ஊர்க்காரர்களில் சிலர் பிரபல தொழிலதிபர்களாகவும் , வர்த்தகர்களாகவும் உள்ளார்கள்.

---> இவ்வூருக்கு அருகில் 1 கி. மீ. தூரத்திலுள்ள செதலப்பதி எனப்படும் திலதர்ப்பணபுரியில் மனித முகத்துடன் கூடிய ஆதி விநாயகர் ,கோவிலுக்கு வெளியே தனி சந்நிதியில் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார்.

    ஸ்ரீ ராமர் தன் தகப்பனாருக்குப் பித்ருகடன் செய்த தலம்     

என்பதால் , பக்தர்கள் பித்ருகடன் , மஹாளய பக்ஷ தர்ப்பணம் செய்ய விசேஷமான தலம் செதலப்பதி ( திலதர்ப்பணபுரி ).