திருச்செங்காட்டங்குடி நாகை மாவட்டம் திருமருகல் வட்டத்தில் உள்ள ஒரு
சிறிய கிராமம். நாகப்பட்டினம் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற
தொகுதிகளுக்கு உட்பட்டது. இங்கு அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று உள்ளது.
திருவாரூரில் இருந்து இந்த ஊருக்கு வருவதற்கு நகரப் பேருந்து வசதி உள்ளது.
கும்பகோணத்தில் இருந்து வந்தால் திருமருகல் என்ற ஊரில் இறங்கி
அங்கிருந்து நகரப் பேருந்து மூலமாகவும் செல்லலாம்.
யானை முகம் கொண்ட கஜமுகாசுரனை விநாயகர் சம்ஹாரம் செய்தார்.
அந்த அசுரனின் ரத்தம் பெருகி செங்காடாய் இருந்ததால் இவ்வூர்
திருச்செங்காட்டங்குடி என்று அழைக்கப்படுகிறது. கஜமுகாசுரனை
சம்ஹாரம் செய்ததால் ஏற்பட்ட தோஷத்தை போக்க விநாயகர் இங்கு வந்து
சுயம்புவாக எழுந்தருளியிருந்த சிவனை வழிபட்டார். சிவன் அவருக்கு காட்சி
தனது தோஷம் நீக்கி அருளினார். அதனால் சிவன் 'கணபதீஸ்வரர்' என்ற
பெயர் பெற்றார். இது தேவாரப்பாடல் பெற்ற தலம். இறைவனுக்கு
பிரமபுரீஸ்வரர், உத்திராபதீஸ்வரர், மந்திரபுரீஸ்வரர் என்ற பெயர்களும் உண்டு.
"தோடுடையான் குழையுடையான் அரக்கன் தன் தோளடர்த்த
பீடுடையான் போர்விடையான் பெண்பாகம் மிகப்பெரியான்
சேடுடையான் செங்காட்டாங் குடியுடையான் சேர்ந்தாடும்
காடுடையான் நாடுடையான் கணபதீச் சரத்தானே"
இதன் பொருள்: திருச்செங்காட்டங்குடியில் விளங்கும் கணபதீச் சரத்தில் எழுந்தருளியுள்ள
இறைவன், ஒரு காதில் தோட்டினை அணிந்தவன். பிறிதொரு காதில் குழை
அணிந்தவன். கயிலையை பெயர்த்த இராவணனின் தோள்களை நெரித்த
பெருமை உடையவன், போரிடும் காளையை உடையவன். பெண்ணை ஒரு
பாகமாகக் கொண்டவன். மிகவும் பெரியவன். பெருமைகட்கு உரியவன்.
பூதகணங்களோடு சேர்ந்தாடும் சுடுகாட்டை தனக்குரிய இடமாகக்
கொண்டவன். நாடுகள் பலவற்றிலும் கோயில் கொண்டு அருள் புரிபவன்.
என்று தேவாரத்தில் சம்பந்தர் பெருமான் இவ்வூரை போற்றிப் பாடியுள்ளார்.
சிறுத்தொண்ட நாயனார் என்பவர் 63 நாயன்மார்களில் ஒருவர். அவர்
பிறந்தது இந்த ஊரில் தான். இவரது இயற்பெயர் பரஞ்சோதி. கல்கி
அவர்கள் எழுதிய 'சிவகாமியின் சபதம்' வரலாற்று தொடர்
நாயகன். அதில் 18 வயது இளம் பிள்ளையாக அறிமுகப்படுத்தப்படும்
பரஞ்சோதி தான் பின்னர் நரசிம்ம பல்லவன் படைத் தளபதியாக மாறினார்.
அவர் மாமத்திரர்எனும் குலத்தில் பிறந்தவர். அக்குலத்தை சேர்ந்தவர்கள்
அரசர் குலத்திற்கு படை தளபதியாகவும் அமைச்சராகவும்ம் பணியாற்றி வந்தனர்.
எந்நேரமும் சிவநாமத்தை சிந்தையில் கொண்டு வாழ்ந்து வந்தார். பல போர்களில்
நரசிம்ம பல்லவருக்கு வெற்றிகளைப் பெற்று தந்தார்.
கி பி 642 ஆம் ஆண்டு முதலாம் நரசிம்ம பல்லவன் தளபதி பரஞ்சோதி
தலைமையில் ஒரு வலிமை மிக்க படையை சாளுக்கிய
தலைநகர் வாதாபியை கைப்பற்ற அனுப்பி வைத்தார். அப்போது
நடந்த போரில் சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியை வென்று
வாதாபியை கைப்பற்றினார். வாதாபி யுத்தத்திற்கு பிறகுதான்
நரசிம்மர் தனது அமைச்சர்களின் மூலம் தளபதியின் சிவத்தொண்டின்
பெருமைகளை அறிந்து கொண்டு ஏராளமான பொன்னும் பொருளும்
வழங்கி ராஜ மரியாதையோடு அவரை திருச்செங்காட்டங்குடிக்கு
வழியனுப்பி வைத்தார். சொந்த ஊருக்கு வந்த பிறகு கணபதீஸ்வரத்து
இறைவனை தினமும் வணங்கி தனது சிவத்தொண்டுகளை செய்து வந்தார்.
வாதாபியிலிருந்து கொண்டு வந்த கணபதியை இக்கோயிலில் பிரதிஷ்டை
செய்தார். திருவெண்காட்டு நங்கை என்னும் மங்கையை திருமணம்
செய்து கொண்டார்.
அவர்களுக்கு சீராள தேவர் என்ற பெயருடைய மகன் பிறந்தான். பையனுக்கு
ஐந்து வயது ஆனதும் பள்ளியில் பயில வைத்தார். நாள்தோறும்
சிவனடியார்களுக்கு திருவமுது படைத்த பிறகுதான் உண்ணுவார்.
சிவனடியார்களை விரும்பி தொழுது அவர் மிகச் சிறியராகப் பணிந்து
ஒழுகியமையால் 'சிறுத்தொண்டர்'என்று அழைக்கப்பட்டார். இவரது
பெருமையை உலகிற்கு உணர்த்த சிவபெருமான் வைத்த மிகக் கடுமையான
சோதனையில் வெற்றி பெற்றதும் இறைவன் உமையவளுடன் காட்சியளித்து அருளினார்.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பரணி நட்சத்திரத்தன்று இந்த நிகழ்வை
போற்றும் விதமாக அமுது படையல் விழா நடைபெறும். உத்திராபதீஸ்வரருக்கு
படைக்கப்படும் திருஅமுது பிள்ளைக்கறி ஆகும். 24 வகை அறிய
மூலிகைகளால் செய்யப்படும் அருமருந்து. பிள்ளை வரம் வேண்டுவோர்
இக்கோயிலுக்கு தம்பதியராக வந்து உத்திராபதீஸ்வரரை வணங்கி சிறுத்தொண்டர்
மடத்தில் இறைவன் அமுது உண்ண எழுந்தருளும் வைபவத்தைக் கண்டு
அப்போது வழங்கப்படும் பிள்ளைக்கறி பிரசாதத்தை 21 நாட்கள் காலையில்
வெறும் வயிற்றில் உண்டு வந்தால் குழந்தை வரம் பெறுவர்.
ஐயடிகள் காடவர்கோன் என்னும் பல்லவ மன்னன் சிறுத்தொண்டருக்கு
இறைவன் காட்சி கொடுத்ததை கேள்விப்பட்டு இத்தலத்திற்கு வந்து
தங்கி அவரை தினமும் வழிபட்டு வந்து அவரின் தரிசனம் கிடைக்க
காத்திருந்தான். இறைவன் ஒரு நாள் "இத்திருக்கோயிலை திருப்பணி
செய்து உத்திராபதியார் திருவுருவம் அமைத்து சித்திரை திருவோணத்தில்
குடமுழுக்கு செய்தால் செண்பகப்பூ மணம் வீச காட்சி தருவோம்" என்று
அருளினார். மன்னரும் அவ்வாறே செய்ய, கொல்லர்கள் இறைவன்
உருவம் அமைக்க தொடங்கினார்கள். கும்பாபிஷேக நாள் நெருங்கியது.
நினைத்த வண்ணம் இறைவன் திருவுருவம் அமைய வேண்டுமே என்ற
கவலையில் கொல்லர்கள் ஐம்பொன்னை உலைக்களத்தில் உருக்கி
கொண்டு இருந்தார்கள். அப்போது இறைவன் சிவயோகி வடிவில் வந்து
தாகத்திற்கு தண்ணீர் கேட்க அவர்கள் 'உலைக்களத்தில் தண்ணீர் ஏது காய்ச்சிய மழுதான்
உள்ளது அதை வேண்டுமானால் தருகிறோம் என்று கோபமாக சொன்னார்கள். அதை
கேட்டு வாங்கி அருந்திய சிவயோகியாக வந்த இறைவன் சிலையாக மாறினார்.
அந்த சிலையை கோயிலில் மன்னர் பிரதிஷ்டை செய்தார். இறைவன் அவருக்கு
செண்பகப்பூ மணம் வீச காட்சி தந்தார். 10 நாட்கள் நடக்கும் சித்திரை திருவிழாவின்
இந்த நிகழ்வும் கொண்டாடப்படுகிறது.
முன்னொரு காலத்தில் இந்த ஊரில் வசித்து வந்த அம்பாள் பக்தையான ஒரு ஏழைப் பெண்
கர்ப்பம் தரித்திருந்தாள். ஒரு நாள் அவள் தாய் ஆற்றைக் கடந்து வெளியூர் சென்று
விட்டாள். அன்று இரவு பலத்த மழை பெய்யவே அவரால் ஆற்றை கடந்து வீடு
திரும்ப இயலவில்லை. அப்போது அம்பாள் அவள் தாயார் வடிவில் சென்று
பிரசவம் பார்த்தாள். அதனால் அம்பாளுக்கு சூளிகாம்பாள் என்ற பெயர் வந்தது.
ஒரு காலத்தில் பிரம்மனுக்காக பொய் சொன்ன தாழம்பூ, அப்பாவத்தை போக்க இங்கு
ஆத்தியாய் முளைத்து இறைவனுக்கும் அடியார்களுக்கும் நிழல் தந்து வருகிறது.
இம்மரத்தின் கீழ் சிறிது நேரம் பத்மாசனத்தில் அமர்ந்து இறைவன் திருநாமத்தை
சொன்னால் நல்லது நடக்கும் என்பது ஐதீகம்.
திருச்செங்காட்டங்குடியிலிருந்து கிழக்கே சுமார் நான்கு கி மீ தொலைவில்
உள்ளது திருக்கண்ணபுரம். இராமனதீஸ்வரர் (இராமனதீச்சரம்) என்ற தேவாரப் பாடல்
பெற்ற சிவத்தலம் உள்ளது. ராவணனை கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம்
நீங்க இங்குள்ள இறைவனை வழிபட்டார் என்பது வரலாறு. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான
நீலமேகப் பெருமாள் திருக்கோயில் இங்குள்ளது. சௌரிராஜ பெருமாள் கோயில் என்றும்
அழைக்கப்படும். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோவில்களில் இதுவும்
ஒன்று. முன்னாள் அமைச்சர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் இந்த ஊரில் தான் பிறந்தார்.
புகழ் பெற்ற கணிதவியலாளர் திருக்கண்ணபுரம் விஜயராகவன் இந்த ஊரில் 1902 ஆம்
ஆண்டு பிறந்தார்.
திருச்செங்காட்டங்குடிக்கு வருகை தந்தால், இங்கிருந்து மிக மிக அருகாமையில்
இருக்கும் திருக்கண்ணபுரம், திருப்புகலூர், ஆகிய ஊர்களில் இருக்கும் கோயில்களுக்கு
சென்று அங்குள்ள இறைவனை தரிசித்து பலன்களை பெற்று சிறப்பாக வாழலாம்.