ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது. பல ஆண்டு காலமாக மாயவரம் என்று வழங்கப்பட்டு , பிறகு மாயூரம் என்று மாற்றம் செய்யப்பட்டது.
எம்.ஜி .ஆர்.அவர்கள்
முதல்வராக இருந்த காலத்தில் , அவர் தான்
மயிலாடுதுறை என்று மீண்டும் பெயர் மாற்றம்
அறிவித்தார்.
பார்வதி மயில் வடிவம் எடுத்து ஆடி ,இறைவனை மணந்த தலம்.ஆதலால் மயிலாடுதுறை என்ற பெயர்க் காரணம் ஆனது.
---> மாயூரம் என்றாலே உடனே நினைவுக்கு வருவது காவேரி ஆறும் , ஐப்பசி மாத துலா ஸ்நானமும் தான். ஊர் மத்தியில் காவேரி ஓடுகிறது.துலாக்கட்டத்தில் ஸ்நானம் செய்வது விசேஷம்.அங்கு காவேரி நடுவில் நந்தி உள்ளது.துலாக்கட்டம் என்பது மருவி தற்போது லாகடம் என்று வழக்கில் உள்ளது.ஐப்பசி முப்பது நாட்களும் காவேரியில் ஸ்நானம் செய்வது மிகுந்த நற்பலன்களைத் தரும்.ஐப்பசி கடைசி நாள் கடைமுழுக்கு , கார்த்திகை முதல் தேதி முட(வன்) முழுக்கு.ஆயிரக்கணக்கில் மக்கள் புனித நீராடுவார்கள்.
--->மயூரநாதர் , வள்ளலார் , ஐயாறப்பர் , புனுகீஸ்வரர் , திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் , சேந்தகுடி துர்கை , தருமபுரம் துர்கை கோவில்கள் தரிசிக்க வேண்டியவை.
---> மயிலாடுதுறை அருகில் அஷ்ட வீரட்ட ஸ்தலங்களில் நான்கு உள்ளன .அவை --வழுவூர் , கொற்கை , பரசலூர் & திருக்கடையூர்.
---> ஈயப் பாத்திரம் வாங்க ஒரு காலத்தில் பெயர் பெற்ற ஊர்.
---> தமிழில் முதல் நாவலான " பிரதாப முதலியார் சரித்திரம் " எழுதிய முன்சீப் அ.வேதநாயகம் பிள்ளை , சரித்திர நாவலாசிரியர் சாண்டில்யன் , பேராசிரியர் கல்கி ( புத்தமங்கலம் ) அவர்கள் படித்த முனிசிபல் ஹைஸ்கூல் , துமிலன் குமாஸ்தாவாக வேலை பார்த்த தாலுகா ஆபீஸ் , ஜெகசிற்பியன் , எல்லார்வி , அநேக கோவில்கள் பற்றிய கட்டுரைகள் எழுதிய புகைப்படக் கலைஞர் என்.ராமகிருஷ்ணா மற்றும் பல எழுத்தாளர்கள் இவ்வூரைச் சேர்ந்தவர்கள்.
---> இலக்கிய உபந்யாசகர்கள் புலவர் கீரன் , புலவர் ராமபத்ரன் , சிவராமகிருஷ்ண சாஸ்திரிகள் இவ்வூர்க்காரர்கள்.
---> தமிழும் , சைவமும் வளர்க்கும் தருமபுரம் ஆதீனம் இங்குள்ளது.
---> தமிழ்த் தாத்தா உ . வே. சாமிநாதய்யரின் குருநாதர் திரு. மீனாட்சி சுந்தரம் பிள்ளை ஐயாறப்பர் சந்நிதித் தெருவில் வசித்து வந்தார். உ .வே .சா . தன் குருநாதரைப் பார்க்கச் செல்லும் பொழுது , தன் செருப்பைக் கையில் எடுத்துச் செல்வாராம்.அவ்வளவு குரு பக்தி & மரியாதை.
---> மாயவரம் என்றால் உடனே பாதிரி மாம்பழம் ஞாபகத்திற்கு வரும்.அதன் மணமும் , சுவையும் ஈடு இணையற்றது.முதன் முதலில் , ஒரு கிருஸ்துவப் பாதிரியாரால் பயிரிடப்பட்டதால் பாதிரிப் பழம் என்று பெயர்.நாலு பழங்கள் வீட்டிலிருந்தால் , வீடே மணக்கும்.
---> பேயன் வாழைப்பழம் உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியைத் தரும்.அரிதான அந்தப் பழம் இவ்வூரில் கிடைக்கும்.
---> வேதநாயகம் பிள்ளை ( கூடுதல் தகவல்கள் ) :- இவர் சீர்காழி , தரங்கம்பாடி , மாயூரம் ஆகிய இடங்களில் முன்சீஃப்பாக வேலை பார்த்தவர்.பல நாவல்கள் எழுதியவர்.இவர் வாழ்ந்த இல்லம் தற்போது துணிக்கடையாக உள்ளது.இவரது கல்லறை 2ம் நம்பர் சாலையில் , பஸ் ஸ்டாண்டிலிருந்து 300 மீட்டர் தூரத்தில் உள்ளது.
---> பல சுதந்திரப் போராட்ட வீரர்களையும் , தியாகிகளையும் தந்து பெருமை பெற்ற ஊர்.
---> காந்திஜி இவ்வூருக்கு விஜயம் செய்திருக்கிறார்.அவர் தங்கியிருந்த வீடு இன்றளவும் உள்ளது.
---> வீட்டில் வசதிகள் குறைந்த நிலையில் , தெரு ( மண்ணெண்ணை ) விளக்கின் அடியில் அமர்ந்து , படித்து ,வாழ்க்கையில் முன்னேறி , ஹைக்கோர்ட் ஜட்ஜாகப் பதவி வகித்த முத்துசாமி அய்யர் இவ்வூர்க்காரர்.
---> ஒருங்கிணைந்த ஆந்திரா & சென்னை மாகாணத்தில் P.W D. யில் Chief Engineer ஆக பதவி வகித்து , நாகார்ஜுன சாகர் , போலாவரம் பிராஜெக்ட் போன்ற அணைகள் கட்டக் காரணமாக இருந்தவரும் , ஓய்வு பெற்ற பிறகும் , மீண்டும் சில ஆண்டுகள் C.Eng ஆகவும் , அதன் பிறகு ஆந்திர அரசின் Secretary ( P .W. D. Project Wing ) ஆகவும் , Chairman , A. P. State Centre ஆக சிறப்பாகப் பணியாற்றியவர் பத்மபூஷண் எல். வெங்கடகிருஷ்ண அய்யர் மாயவரம் மகாதானத் தெருவைச் சேர்ந்தவர்.தனது 88 வது வயதில் 3-11-76 அன்று காலமானார்.மாயூரத்திற்குப் பெருமை சேர்த்தவர்களில் ஒருவர்.
---> கர்நாடக சங்கீத வித்வான் மதுரை எம்.எஸ் .மணி அய்யர் , மாயவரம் ராஜம் அய்யர் இவ்வூர்க்காரர்கள்.
---> நடன ஆசான் , பரதநாட்டிய குரு வழுவூர் ராமையாப் பிள்ளை இந்த ஊரில் வாழ்ந்து வந்தவர்.
---> நாதஸ்வர வித்வான்கள் திருவெண்காடு சுப்ரமணியப் பிள்ளை,
திருவீழிமிழலை சுப்ரமணியப் பிள்ளை ,
திருப்பாம்புரம் சண்முக சுந்தரம் பிள்ளை , செம்பனார்கோவில் பிரதர்ஸ் , வி.ஆர் .கோவிந்தராஜப் பிள்ளை வயலின் இங்கு தான் வாழ்ந்து வந்தார்கள்.
---> திரைப்படத் துறையில் பல வெற்றிப் படங்களைத் தந்த டைரக்டரும் , தயாரிப்பாளருமான கே.எஸ் .கோபாலகிருஷ்ணன் (மல்லியம் ), மல்லியம் ராஜகோபால் , டி.ராஜேந்தர் , கே.ஏ.தங்கவேலுவின் ஜோடியும் அவரது மனைவியுமான எம்.சரோஜா மற்றும் நாம் இருவர் படத்தில் ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்ற பாடலுக்கு நடனம் ஆடி , நடித்த கமலா (லக்ஷ்மண் ) மாயூரத்தைச் சேர்ந்தவர்கள்.
---> மாயூரத்தின் ஒரு பகுதியான கூறைநாடு (கொரநாடு ) கைத்தறிப் புடவைகள் தான் ஒரு காலத்தில் திருமணங்களில் முகூர்த்தப் புடவைகளாக இருந்தன.அதற்கு கூறைப்புடவை என்று பெயர்.இன்றும் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டக்காரர்கள் கல்யாண முகூர்த்தப் புடவைகளை கூறைப்புடவை என்று தான் கூறுவார்கள்.
---> மணப்பாறை மாடு கட்டி , மாயவரம் ஏரு பூட்டி என்ற பாடலிலும் , கூறைநாட்டுப் புடவை கட்டி எதிரே வந்தாளாம் என்ற வேறு சினிமாப் பாடல்களிலும் மாயவரம் இடம் பெற்றுள்ளது.
---> ராமமூர்த்தி சாண்டோ , லக்ஷ்மண சாண்டோ என்ற அந்தணர் வகுப்பைச் சேர்ந்த சகோதரர்கள் சுத்த சைவ உணவுகளை மட்டும் சாப்பிட்டு பயில்வானாகத் திகழ்ந்தவர்கள்.தலை முடியில் கயிறு கட்டியும் / பல்லில் கயிறைக் கடித்தும் காரை இழுப்பது / நகர்த்துவது , மயூரநாதர் கோவில் யானையை நெஞ்சில் தாங்கியது போன்ற சாதனைகள் குறிப்பிடத்தக்கது.
(லக்ஷ்மண சாண்டோ என்னிடம் தெரிவித்த தகவல்கள் இவை
சில ஆண்டுகள் முன்பு வரை இவ்வூர் காளியாகுடி ஹோட்டல் அல்வா , டிபன் வகைகள் , டிகிரி காபியும் மிகவும் பிரசித்தம்.1960-70 களில் ஒரு ரூபாய்க்கு முழு சாப்பாடு (Unlimited meals ) , சாப்பாட்டில் இரண்டு அப்பளம் போடுவார்கள்.வெளியூர்க்காரர்கள் மாயவரம் வந்தால் ஒரு வேளையாவது காளியாகுடி ஹோட்டலில் சாப்பிடாமல் போக மாட்டார்கள்.அந்தக் காலம் மலையேறி
விட்டது.
---> ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு மாயவரம் நகரின் எல்லையில் நாலா பக்கமும் பச்சை பசேல் என்று வயல்கள் கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருந்தன.இன்று அந்த விளைநிலங்கள் எல்லாம் வீடுகளாகவும் , குடியிருப்பு காலனிகளாகவும் , வியாபார ஸ்தலங்களாகவும் , பெட்ரோல் பங்க்குகளாகவும் மாறிவிட்டன.பட்டமங்கலத் தெரு , மகாதானத் தெரு ஓட்டு வீடுகள் அடுக்கு மாடிக் குடியிருப்புகள் , கல்யாண மண்டபங்கள் , லாட்ஜ்களாக மாறிவிட்டன.