tamilnadu epaper

எங்கள் ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்புகள்

எங்கள் ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்புகள்

கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர் என்று எங்கள்  ஸ்ரீவில்லிபுத்தூரை பெருமையாக கூறுவார்கள். தமிழக அரசின் முத்திரை சின்னத்தில் இருப்பது எங்கள் ஊரின் புகழ்பெற்ற ஆண்டாள் கோயில் கோபுரமாகும். எங்கள் ஊருக்கு இப்பெயர் வரக்காரணம் இதனை உருவாக்கிய வில்லி என்பவார். வில்லிபுத்தூர் என்று பெயரிடப்பட்ட இவ்வூர், திருமகளாகிய ஆண்டாளின் அவதாரத் தலமாக இருப்பதால் தமிழில் உயர்ச்சொல்லான "திரு" என்கிற அடைமொழியோடு திருவில்லிபுத்தூர் என்று வழங்கப்படுகிறது. தற்போது ஸ்ரீ என்கிற வடமொழி சேர்த்து "ஸ்ரீ" வில்லிபுத்தூர் என்றும் அழைக்கப்படுகிறது.எங்கள் ஊர் நெசவுத் தொழிலுக்குப் புகழ் பெற்றது. மிகப் பிரபலமான துணி விற்பனை செய்யும் நிறுவனமான  போத்தீஸ் முதலில் ஸ்ரீவில்லிப்புத்தூரில்தான் துவங்கப்பட்டது. அதே போல், பால்கோவா என்ற இனிப்புத் தயாரிப்புக்கும் புகழ் பெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா வெளிநாட்டில் வாழும் தமிழர்களாலும் விரும்பி உண்ணப்படும் இனிப்பு ஆகும்.பெரியாழ்வார் இயற்றிய "திருப்பல்லாண்டு", ஆண்டாள் இயற்றிய "திருப்பாவை", "நாச்சியார் திருமொழி" ஆகியவை தமிழுக்கு திருவில்லிப்புத்தூர் தந்த இலக்கியங்கள். அன்றைய நாளில் இவ்வூர் எப்படி இருந்தது என்பதற்கான குறிப்புகள் ஆண்டாளின் பாசுரங்களில் காணப்படுகின்றன.ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடைபெறும் ஆடிப்பூரத் திருவிழாவில் 12-ஆம் நாள், தேரோட்டம் நடைபெறும். மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஆண்டாள் கோயிலில் வருடாந்திர தேர்த் திருவிழா பார்க்க வருவர். இது விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் மிக பெரிய விழாக்களில் ஒன்றாகும். இது 108 திவ்ய தேசங்கள் எனப்படும் வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். காலையில் சிறப்பு பூஜைகள் முடிந்த பின்னர், உற்சவ தெய்வங்கள், ஸ்ரீ ரங்கமன்னார் மற்றும் ஆண்டாள் அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகள் மூலம் தேருக்குக் கொண்டு வரப்படுவர். பின்னர் தேர் நான்கு ரத வீதிகளில் பவனி வரும். பெரிய மாரியம்மன் கோவிலில் நடைபெறும் பூக்குழித் திருவிழாவும் சிறப்பானது. பல்வேறு ஊரில் இருந்து பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் இருந்து தீமீதித் திருவிழாவில் கலந்து கொள்வர். 

 

திருவில்லிபுத்தூர் தமிழகத்தில் மிகவும் பழமைவாய்ந்த ஊர்களில் ஒன்றாகும். 1600 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட கோபுரம், மற்றும் "செண்பகவனம்" 

சிறப்பு பெற்ற "குறவர் கோட்டை" மற்றும் 200 ஆண்டு பழமையான இந்து மேல்நிலைப்பள்ளி, பென்னிங்டன் நூலகம் இதற்குச் சான்று. திருப்பாவை என்னும் தெய்வீகத் தமிழ் இலக்கியத்தைத் தொல்தமிழ்குறிஞ்சி  மக்களுக்கு அளித்தது இந்த கோவில் நகரமே ஆகும்.

திருவில்லிபுத்தூரின் பெருமைக்குக் குறிப்பிடத்தக்க ஒரு மைல்கல்லாக விளங்குவது திரு வடபத்ரசாயி பெருமாளுக்காக "வில்லி"அரசரால்  அர்ப்பணிக்கப்பட்ட 11அடுக்குகளைக் கொண்ட கோவில் ஆகும். இந்த கோவில் கோபுரம் 192 அடி உயரமானது. மலை அடிவார வனப்பகுதியை "குறவர்வில்லி அரசர்"தனது கட்டுப்பாட்டுக்குள் இருந்த வனத்தை திருத்தி,இராஜகோபுரமாகவும் அழகிய நகரமாகவும் அமைத்தார்.