tamilnadu epaper

எங்கள் குல தெய்வம் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி

எங்கள் குல தெய்வம் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி

 

-------------------------

சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில் முருகனின் ஆறுபடை வீடுகளில், நான்காம் படை வீடாகத் திகழ்கின்றது. இது தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திற்கு வடகிழக்கில் 6 கி.மீ தொலைவில் காவேரி ஆற்றின் வட கரையில் அமைந்துள்ளது. திருவேரகம் என்றும் இது அழைக்கப்படுகிறது. ஸ்ரீ பாலன் தேவராய சுவாமிகள் தன் கந்த சஷ்டி கவசத்தில் 'எந்தனை ஆளும் ஏரகச் செல்வ' என பாடுகிறார்.

ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகள் · அருளிய கந்த குரு கவசத்தில் 'தகப்பன் சாமியே என் இதயத்தில் தங்கிடுவாய், சுவாமிமலை தனில் சொன்னதைச் சொல்லிடுவாய் சிவகுருநாதா செப்பிடுவாய் பிரணவமதை' என வருவதையும் காணலாம்.

மலை என்றவுடன் இது மலை மேல் அமைந்துள்ளது என எண்ணத் தோன்றும். ஆனால் இயற்கையான மலை அல்ல. செயற்கையாக பெரிய பெரிய பிரம்மண்டமான கருங்கற்களைக் கொண்டு அமைக்கப்பட்ட கட்டுமலை ஆகும்.

 இத்தலம் நக்கீரர் மற்றும் அருணகிரிநாதரா ல் பாடல் பெற்ற தலமாகும். 

 

ஒரு முறை படைக்கும் தெய்வமான பிரம்மாவிடம் பிரணவத்தின் அர்த்தம் என்ன என முருகன் கேட்க, அவருக்கு அது தெரியாததால் அவரை முருகன் சிறையில் அடைத்து விடுகிறார். படைப்பு தொழில் நின்று போய்விட சிவன் முருகனிடம் வந்து பிரம்மாவை விடுவிக்க சொல்கிறார். உடனே முருகன் தந்தையிடம் அதே கேள்வியை கேட்க அவருக்கும் தெரியாமல் போகவே,மகன் குருவாகவும், தந்தை சீடனாகவும் அமர்ந்து பிரணவத்தின் அர்த்தம் கற்பிக்கப்பட்ட தலமே இத் தலம். ஆகவே இத் தலத்து முருகன் தகப்பன் சாமி என்றழைக்கப்படுகிறார்.

 

மூலஸ்தான தெய்வமான சுவாமிநாதசுவாமி 60 அடி (18 மீ) குன்றின் மேல் நின்றவாறு காட்சி தருகிறார். மற்றும் அவரது தாயார் மீனாட்சி (பார்வதி) மற்றும் தந்தை சிவன் (சுந்தரேசுவரர்) ஆகியோரின் சன்னதி கீழ் தளத்தில் அமைந்துள்ளது. அவர்களைச் சுற்றி தட்சிணாமூர்த்தி, விநாயகர், வள்ளி தெய்வயானை சமேத சுப்பிரமணியர், மஹாலக்ஷ்மி, சரஸ்வதி, துர்கை, சண்டிகேஸ்வரர் மற்றும் நவக் கிரகங்களின் சந்நிதிகள் அமைந்துள்ளன.

முப்பது படிகள் ஏறியவுடன் முதல் தளத்தில் ஒரு பிரகாரம் அமைந்துள்ளது. அங்கிருந்து முப்பது படிகள் ஏறியபின் இரண்டாவது தளம் வருகிறது. அங்குதான் முருகன் வீற்றிருக்கிறார்.

எதிரே அமர்ந்திருக்கும் விநாயகரை தரிசித்துவிட்டு முருகனை தரிசிக்கலாம்.

 இக்கோயிலில் மூன்று கோபுரங்கள் (வாசல் கோபுரங்கள்), மூன்று பிரகாரங்கள் மற்றும் அறுபது படிகள் உள்ளன, ஒவ்வொரு படியும் அறுபது தமிழ் ஆண்டுகளின் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த கோவில் காலை 5:30 மணி முதல் 1 மணி வரையிலும் பின்னர் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும்.

இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசி விசாகத் திருவிழாவில் வெளியூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வது வழக்கம். ராஜ கோபுரத்தில் நுழைந்தவுடன் வரும் பெரிய பிரகாரத்தில்தான் தங்கத் தேர் உலா வரும்.

 

கிருத்திகை தோறும் இம்மலையைச் சுற்றி கிரிவலம் நடக்கிறது.