tamilnadu epaper

எங்கள் குல தெய்வம்  மரத்துறை காத்யாயனி அம்மன்

எங்கள் குல தெய்வம்   மரத்துறை காத்யாயனி அம்மன்

 

கும்பகோணத்தில் இருந்து திருப்பனந்தாள் வழியாக மணல்மேடு செல்லும் சாலையில் மரத்துறை கிராமம் உள்ளது.

 

கத்யாயனி அம்மன் வலது கையில் கிளி இடது கையில் தாமரையுடன் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். காத்தாயி என்றும் அழைப்பார்கள். காத்தாயி என்றால் காக்கும் தாய் என்று பொருள்.

 

காத்யாயனி அம்மன் கோவில்கள் நிறைய இருந்தாலும் மரத்துறை அம்மன் எல்லாவற்றிற்கும் முதன்மையானது. 

 

இந்த கோவிலில் ஏழு பிரம்மாண்டமான முனிகளின் சிலைகள் உள்ளன. அவை வாழ்முனி, செம்முனி, முத்துமுனி, ஜடாமுனி, பாலக்காட்டு முனி, வேதமுனி மற்றும் இலாடமுனி.

 

காத்யாயனியின் கட்டளைப்படி கிராமத்தையும் பக்தர்களையும் காக்க ஏழு முனிகள் காத்திருப்பதாக ஐதீகம். வாழ்முனி பெரிய மீசை கையில் அரிவாளுடன் மிகப் பிரம்மாண்டமாக இருக்கிறார்.

 

இந்த கோவிலில் பச்சையம்மன், சங்கிலி கருப்பன், வீரன், மாடன், பூக்குரத்தி மற்றும் மடியில் குழந்தையுடன் வள்ளியம்மை சிலையும் உள்ளது. 

 

மதுரை வீரன் மற்றும் பொம்மியின் சிலைகளும் உள்ளன. இவை பிற்காலத்தில் வைக்கப்பட்டிருக்கலாம்.

 

காத்யாயனி துர்க்கையின் அவதாரமாகவும் சக்தி தெய்வமாகவும் போற்றப்படுகிறது.

 

காத்யாயனி அம்மனுக்கு அபிஷேகம் செய்து புதுப்புடவை சாற்றி வழிபட்டால் பயம், பிணி, துயரம், கவலை, துன்பம் அனைத்தும் நீங்கிவிடும் என்பதால் பக்தர்கள் கூட்டம் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகமாக இருக்கும். கோவிலும் மிக நேர்த்தியாக பராமரிக்கப்படுகிறது.

 

மரத்துறை கிராமம் காத்யாயினியின் காவலில் இருப்பதால் வற்றாத தண்ணீர் வசதியுடன் கிராமத்தை சுற்றியுள்ள வயல்கள் கோடைக்காலத்திலும் பச்சை பசேலேன ரம்மியமாக காட்சியளிக்கிறது.

 

இங்கே இணைத்துள்ள வயல்வெளி போட்டோ நான் மே மாதம் குலதெய்வ வழிபாட்டிற்கு சென்றபோது எடுத்தது. 

 

இந்த கோவிலுக்கு செல்லும் வழியில் பாலசாஸ்தா என்று அழைக்கப்படும் ஐயனார் கோவிலும் இருக்கிறது.

 

நன்றாகப் பராமரிக்கப்படும் சாலைகள் உள்ளதால் வாகனங்களில் மரத்துறை காத்யாயனியை தரிசனம் செய்வது எளிது.

************************

வி வைத்தியநாதன்