திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அடுத்து உள்ளது அரசங்குப்பம். செய்யாறிலிருந்து வெம்பாக்கம் வழியாக கோயிலுக்கு செல்லலாம். மேலும் காஞ்சிபுரத்திலிருந்தும் செல்லலாம். முக்தி தரும் புண்ணிய பூமியான காசியில் இருந்து சிவலிங்க திருமேனிகளை கொண்டு வந்து தென்னகத்தில் குறிப்பாக தமிழ்நாட்டில் பல தளங்களை நிறுவி வழிபட்டு வந்துள்ளனர் நம் முன்னோர்கள். அந்த வகையில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இத் தலத்தில் கோவில் கொண்டவர்தான் அருள்மிகு விசாலாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதர்.
பழமையான இக்கோயிலில் 1940 வரை கோயில் குருக்களால் பூஜை செய்யப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சுமார் 68 ஆண்டுகள் கவனிப்பாரற்று இருந்த நிலையில் உள்ளூர் மக்கள் மற்றும் ஆன்மீக அன்பர்கள் எழுச்சியால் கோயில் புனரமைக்கப்பட்டு கடந்த 2010 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரு ஏக்க நிலப்பரப்பில் கோவிலுக்கான திருக்குளம் மற்றும் அத்துடன் கோயிலும்சேர்த்து மீண்டுமாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பெரிய அரச மரம் ,விநாயகப் பெருமான் ,நால்வர் பெருமக்கள், வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான், பைரவர், நவகிரகம் என கோவில் சுற்றிலும் பரிவார மூர்த்திகள் நிறுவப்பட்டுள்ளது.
இக் கோயிலில் புரட்டாசி மாதம் மஹாலய அமாவாசை அன்று காலை 6 மணி முதல் ஏழு மணி வரை சூரியன் தன் ஒளி வீச்சால் வாயில் வழியாக ஊடுருவி காசி விசுவநாதரை வழிபடும் அற்புதக்காட்சி ஆண்டுதோறும் குறிப்பிட்ட அந்த நாளில் காண முடிகிறது. இத்தலத்தின் சிறப்பாக அமைகிறது.
பித்ருகாரரான சூரியன் சிவபெருமானை வழிபடுவதால் இங்கு அனுஷ்டிக்கப்படும் பித்துருக்கான பூஜைகள்பித்ரு தோஷ நிவர்த்தி ஆகியவற்றிற்கு காசியில் செய்த பலன் இங்கு கிடைப்பதாக பலன் கண்டமக்கள் கூறுவதாக தமது அனுபவத்தை தெரிவிக்கின்றார் .
கங்கை தீர்த்தம் என்று அழைக்கப்படும் பெரிய குளம் குறித்து 1940 ஆம் ஆண்டு வரை கோயிலில் பூஜை செய்து வந்த குருக்கள் கோயில் குறித்த வியப்பூட்டும் நிகழ்வுகளை தமது உயிலில் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கோயிலில் ஆண்டு தோறும் ஆடிப்பூரம் அன்று அம்பாளுக்கு வளையல் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கவும், மழலைச் செல்வம் வேண்டுவோர்பிள்ளை வரம் பெற்றிடவும் ,இவ் வளையல்கள் பிரசாதமாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்க அம்சமாக உள்ளதாக கோயில் குருக்கள் சிவஸ்ரீ எம். கார்த்திகேயன் தமது அனுபவமாக தெரிவிக்கின்றார்.
காசிக்கு நிகரான சிறப்புகளையும், பெருமைகளையும் கொண்டுள்ள இந்த தளத்தை ,பெருமானை நாமும் தரிசித்து அவரின் திருவருளை பரிபூரணமாக பெறுவோம்.
மேலும் கடந்த 2023 ஆம் ஆண்டு கங்கை தீர்த்த குளமும் ,அருள்மிகு விசாலாட்சி அம்பாள் உடனுறை காசி விசுவநாதர்பெருமான் கோயிலும் கும்பாபிஷேகம் முடிந்து புதுப்பொலிவுடன் இருக்கிறது. வில்வ மரத்தடியில் 108 சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.கோயில் எழில்மிகு தோற்றத்தை கழுகு பார்வையில் கண்கொள்ளாக் காட்சியாக காண முடிகிறது. நேரில் சென்று வழிபட்டால் வேண்டிய பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
எறும்பூர் கை. செல்வகுமார்,
செய்யாறு.