"முருகா என்றழைக்கவா...?முத்துக்குமரா என்றழைக்கவா...?கந்தா
என்றழைக்கவா...?கதிர்வேலா என்றழைக்கவா...? -டி.எம்.சௌந்தரராஜன்
அவர்களின் கணீர் குரலில் ஒலிக்கும் பக்தி பாடலைக் கேட்டு இருக்கிறோம்.
ஒவ்வொரு ஊரிலும் வெவ்வேறு பெயர்களில் முருகன் எழுந்தருளி இருப்பான்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகாவில் உள்ளது ஊதியூர். இங்குள்ள
பொன்னூதி மலையில் 'உத்தண்ட வேலாயுத சுவாமி' என்ற பெயரில் முருகன்
எழுந்தருளி இருக்கிறான். 'கொங்கு மண்டல சதகம்' என்ற
சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்த நூலில் (17 ஆம் நூற்றாண்டு) இந்த கோயில்
பற்றிய தகவல் உள்ளது. இந்த ஊர் தாராபுரம் கோவை சாலையில் குண்டடம்
என்ற ஊரில் இருந்து சுமார் இரண்டு கி.மீ. தொலைவிலும் கரூர்
கோவை வழித்தடத்தில் காங்கேயத்தில் இருந்து சுமார் ஐந்து கி மீ தொலைவிலும்
உள்ளது. கரூரில் இருந்து கோவை செல்லும் பேருந்தில் பயணம் செய்து இந்த
கோவிலுக்கு செல்லலாம்.
சித்தர்களில் முதன்மையானவர் அகத்தியர். போகர், தேரையர், கொங்கணர்
ஆகியோர் அவருடைய சீடர்கள். இவர்கள் மக்களின் குறைகளை தங்கள் தவ ஆற்றலால்
போக்கினார்கள். அனுமன் சஞ்சீவி மலையை எடுத்து வந்த போது அதன் ஒரு
பகுதி கொங்கு மண்டலத்தில் விழுந்தது. அதுதான் ஊதிமலை என்று அழைக்கப்படுகிறது.
இங்குதான் கொங்கணர் சித்தர் நீண்ட காலம் தவமிருந்தார். அவர்தான் இந்த கோவிலில்
உள்ள முருகன் சிலையை பிரதிஷ்டை செய்தார். அவர் தவம் செய்த இடம் இந்த கோயிலுக்கு
அருகில் உள்ள மலை மேல் உள்ளது . அவர் பிரதிஷ்டை செய்த சிலை தற்போது மகா மண்டபத்தில்
வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலைக்கும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.
இம்மலையின் புராணப் பெயர் பொன்னூதி மலை. "ஊதி கிரிக்குள் கருத்து உகந்து அருள் பெருமாளே."
-(ஊதி மலையில் உள்ளம் மகிழ்ந்து வீற்றிருப்பவனும் ஆகிய பெருமாளே) என்று திருப்புகழில் அருணகிரிநாதர்
இத்தல முருகனைப் போற்றிப் பாடியுள்ளார். அவர் தரிசனம் செய்த 120 வது தலம் இது.
காங்கேய நாட்டில் ஒரு முறை மக்கள் வறுமை காரணமாக இன்னலுற்றனர். மக்களின்
துயர் துடைக்க எண்ணிய கொங்கணர் மக்களை ஒன்று திரட்டி மலையில் கிடைக்கும் மூலிகைகள்
கொண்டு, அவற்றை நெருப்பிலிட்டு புகை மூட்டி மண் குழல் கொண்டு ஊதி உள்ளார் . அவைகள் பொன்னாக
மாறின. அதன் பின் முருகப்பெருமான் அங்கு எழுந்தருளி மக்களின் வறுமையை
போக்கி உள்ளார். ரசவாத கலையில் கொங்கணர் வல்லவர். அதற்காக அவர் பயன்படுத்திய களிமண் குழாய்கள்
சில இன்றும் கோவிலில் காணப்படுகிறது . அதனால் இந்த மலைக்கு ஊதி மலை என்ற பெயர் வந்தது. நெருப்பு
ஊதி பொன் தயாரித்த காரணத்தால் பொன்னூதி மலை என்ற பெயரும் ஏற்பட்டது.
இன்றும் சித்தர்கள் ஒளி வடிவில் முருகப் பெருமானை தரிசிக்க இந்த கோயிலுக்கு
வருவதாக பக்தர்கள் நம்புகிறார்கள். இத்தல வரலாறு இது தான்.
அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்ல சுமார் 150க்கும் மேற்பட்ட படிக்கட்டுகள்
உள்ளன. மேலே செல்லும் வழியில் மயில் மண்டபமும் அதன் அருகில் பாத விநாயகர்
சந்நிதியும் உள்ளது. மலையில் மயிலுக்கு ஒரு மண்டபம் உள்ளது. மயில் மண்டபத் தூணில்
கல்வெட்டு காணப்படுகிறது. அதில் 1897 ஆம் ஆண்டு நாகரச நல்லூர் திரு.ராமசாமிக் கவுண்டர்
மயில்வாகன மண்டபம் கட்டினார் என்ற குறிப்பு உள்ளது. (தகவல் 'காங்கயம் - தாராபுரம்
பகுதியில் தொல்லியல் தடயங்கள்' ஆய்வுக் கட்டுரை). மேலும் கோயிலின் திருமதில் மற்றும்
குறட்டு மண்டபம், வாத்திய மண்டபம் ஆகியவற்றை கொங்கு வேளாளரில் ஒரு பிரிவைச் சேர்ந்த
செம்பூத்த குலத்தை சேர்ந்தவர்கள் கட்டினார்கள் என்று ஈரோடு மாவட்ட கல்வெட்டு தொகுப்புகளில்
கூறப்பட்டுள்ளது.
கரடு முரடான மலைப் பாதை ஒன்று உள்ளது. அது வனத்துறை சொந்தமான இடம். மலைப்பாதை
அமைக்க வனத்துறை இன்னும் அனுமதி தரவில்லை என்று கோயில் அர்ச்சகர் நான் இந்த கோயிலுக்கு சென்ற போது
தெரிவித்தார்.
கருவறையில் முருகப்பெருமான் கிழக்கு நோக்கி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். தண்டம் ஏந்தி
இடது கையை இடுப்பில் வைத்து வெற்றி வேலுடன் முருகன் தரிசனம் தருவது இத்தலத்தின் சிறப்பு.
அருகில் விநாயகர் மற்றும் பைரவர் சன்னதிகள் உள்ளது.
பலருக்கு உத்தண்ட வேலாயுத சுவாமி குல தெய்வமாக இருக்கிறார். உத்தரவு கேட்கும் வழக்கம்
இங்கு உள்ளது. இங்குள்ள மக்கள் தங்கள் வீட்டில் எந்த நிகழ்ச்சியை நடத்தினாலும் அதற்கு
முன்பு முருகனிடம் உத்தரவு கேட்பது வழக்கம். நினைத்த காரியம் நல்லவிதமாக நடக்க இந்த
பிரார்த்தனையை மேற்கொள்கிறார்கள். திருமணம் ஆகாதவர்கள் குழந்தை பாக்கியம்
இல்லாதவர்கள் இதர பல பிரச்சனைகள் உள்ளவர்கள் ஒன்பது செவ்வாய் கிழமைகள் அபிஷேகம்
ஆராதனை செய்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நல்லது உடனே நடக்கும் என்பது நம்பிக்கை.
கார்த்திகை, சஷ்டி, அமாவாசை, பெளர்ணமி ஆகிய மாத விழாக்கள் சிறப்பாக நடைபெறுகிறது.
பங்குனி உத்திர தினத்தில் பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். கந்த சஷ்டி
உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி ஆறு நாட்கள் நடைபெறும். ஆடி விசாகத்தில் படி பூஜை
நடைபெறும்.
கடந்த 05-01-2025 ஞாயிற்றுக்கிழமை ஊதியூர் நிறை மனிதர்கள் மெய்ஞான திருச்சபை சார்பாக பத்தாம்
மண்டல கந்த சஷ்டி பாராயணம் நிகழ்வு இந்த கோவிலில் நடந்தது. காலையில் வேள்வி
வழிபாடு, படி பூஜை, கந்த சஷ்டி பாராயணம் நிகழ்வு மெய்ஞான பாடல்கள் அரங்கேற்றம் உள்ளிட்ட
நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. மயிலாடுதுறை அகத்தியர் மெய் ஞான பீடத்தில் இருந்து
கொண்டு வரப்பட்ட நவபாஷாண முருகன் சிலைக்கு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு
தீர்த்தம் வழங்கப்பட்டது.
கோயில் நடை திறந்திருக்கும் நேரம் காலை 9.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையிலும்
மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரையிலும்..
திருமாளம் எஸ். பழனிவேல்
9442129176