மும்பை:
மகாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ள சமூக மாற்றத்தால், 7,000 கிராமங்களில் விதவைகளுக்கு எதிரான பாகுபாடான தீய வழக்கங்கள் நீக்கப்பட்டுள்ளன.
மகாராஷ்டிராவில் 27,000 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன. கோல்காபூர் மாவட்டத்தில் உள்ள ஹெர்வத் கிராம பஞ்சாயத்தில் கடந்த 2022-ம் ஆண்டு ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கணவன் இறந்தால் பெண்களின் தாலி, மெட்டி போன்றவற்றை அகற்றுவது, குங்குமத்தை நீக்குவது, வளையல்களை உடைப்பது போன்ற சடங்குகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த சமூக சீர்திருத்தத்தை பல கிராமங்கள் பின்பற்றத் தொடங்கின. விதவைகளுக்கு எதிரான தீய வழக்கங்களை ஒழிக்கும் நடவடிக்கையை பிரமோத் ஜின்ஜாடே என்பவர் பிரச்சாரமாக மேற்கொண்டார். இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.
தற்போது மகாராஷ்டிராவில் 7,683 கிராமங்களில், விதவைகளுக்கு எதிரான தீய வழக்கங்கள் ஒழிக்கப்பட்டுள்ளன என பிரமோத் ஜின்ஜாடே தெரிவித்துள்ளார். தற்போது மங்கள நிகழ்ச்சிகளில் பங்கேற்க விதவைகளுக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது.
விதவைகள் சந்திக்கும் சவால்களை அறிந்த தேசிய மனித உரிமை ஆணையம், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், விதவைகள் கவுரவத்துடன் வாழும் வகையில் அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.
இது குறித்து ஹெர்வத் கிராமத்தின் முன்னாள் தலைவர் சர்கொண்ட படேல் கூறுகையில், ‘‘ கணவனை இழந்த பெண்ணுக்கு தாலி, மெட்டி, பொட்டு அகற்றம் போன்ற தீய வழக்கங்கள் 7,683 கிராமங்களில் நிறுத்தப்பட்டுவிட்டன. இறந்தவர்களின் வீடுகளில் தீய வழக்கங்கள் பின்பற்றப்படுகிறதா என்பதை முன்பு ஆய்வு செய்து வந்தோம்.
ஆனால், தற்போது செல்வதில்லை. மக்கள் விழிப்புடன் உள்ளனர். எங்கள் கிராமங்களில் சில விதவை பெண்கள் மறுமணம் செய்துள்ளனர். அவர்கள் சமூக, மத நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர்’’ என்றார்.
12 ஆண்டுகளுக்கு முன் கணவனை இழந்த வைஷாலி பாட்டீல் கூறுகையில், ‘‘ விதவைகள் தற்போது மரியாதையுடனும், கண்ணியத்துடனும் நடத்தப்படுகின்றனர். நாம் மனிதர்கள் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். மக்களின் மன நிலை மாறியுள்ளது. ஆண்டாண்டு காலமாக பின்பற்றிய பழக்க வழக்கங்கைளை ஒரே இரவில் மாற்றிவிட முடியாது.
சில சடங்குகளில் பெரியவர்களை சமரசம் செய்ய வைப்பது கடினமாக உள்ளது. ஆனால் சமூக சீர்திருத்தத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. நாசிக் மாவட்டத்தில் முசல்கான் கிராமத் தலைவர் அனில் ஷிர்சத் கூறுகையில், ‘‘ எங்கள் கிராமத்தில் 90 சதவீதம் பேர் படித்தவர்கள். அதனால், விதவைகளுக்கு எதிரான நடைமுறைகளை நாங்கள் பின்பற்றுவதில்லை.
கடந்த 3 ஆண்டுகளாக, கிராம பஞ்சாயத்து நிதியில் 15 சதவீதம் விதவைகளுக்கு உதவுவதற்காக பயன்படுத்தப்படுகிறது. அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த, அவர்களை சுய உதவிக் குழுவில் சேர்க்கும்படி கேட்டுக் கொண்டுள்ளோம்’’ என்றார்.