திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், பெரணமல்லூர் ஒன்றியத்தில் உள்ளது எறும்பூர். சோழர் காலத்தில் இவ்வூர் வீரசோழநல்லூர் என்று அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது . இவ்வூர் வந்தவாசி -ஆரணி நெடுஞ்சாலையில் பத்தாவது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது .எறும்பூர் கூட்ரோட்டில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் சென்றால் கோயிலை அடையலாம். பிரசித்தி பெற்ற கிராம தேவதையான முத்தாலம்மன் பலருக்கும் இஷ்ட தேவதையாக அருள் பாலிக்கிறார்.
ஆடியில் அருட்செல்வியாகவும், தையில் தையல் நாயகியாகவும் ,நாளும் நலம் தரும் நாராயணியாகவும், வேண்டியவர்க்கு விரும்பியதை வணங்கி நலம் பல தந்து சாந்த சொருபீயாக காட்சியளிக்கின்றாள்.
முனுகப்பட்டு அருளானந்த சுவாமிகள் 1935 ஆம் வருடம் முத்தியாலம்மன் வழிபாட்டு பாடல்களை எழுதி வெளியிட்டு இருப்பது அம்மனின் மகிமையை எடுத்துக் கூறுகிறது.
முத்தியாலம்மன் கோயில் நுழைவு வாயில் கிழக்கு திசை நோக்கி உள்ளது. மூலநாயகியாக முத்தியாலம்மன் எழுந்தருளியுள்ளார். வலக்கையில் திரிசூலமும், இடக்கையில் உடுக்கையும் ஏந்தியவளாக ,மஞ்சள் வண்ண பட்டாடை உடுத்தி, எலுமிச்சம் பழ மாலைய அணிந்து அலங்கார ரூபினியாக திகழ்கிறாள். இவர் முன் அழகிய நாக வாகனத்தின் கூடிய அம்மன் கற்சிலை திருவுருவம் ,அதன் அருகில் இரு சிரசுகள், உற்சவர்கள் என ஒருங்கே அருள் பாலித்து கொண்டிருக்கின்றனர். அற்புதமான அந்த அழகிய அம்மன் வடிவ காட்சிகள் பார்க்க பரவசமாகவே உள்ளது.
அம்மன் கோயில்களில் பொதுவாக வேப்பமரம் தல விருட்சமாக இருப்பது வழக்கம் .ஆனால் இக்கோயிலில் வில்வமரம் தலவிருட்சமாக உள்ளது. சிறிய வேப்ப மரமும் உண்டு. அதன் அருகிலேயே நாகக்கன்னி கற்சிலைகள் உள்ளன. நாக தோஷம் உள்ளவர்கள் தேவதையை நிவர்த்திக்காக வேண்டிக்கொள்கிறார்கள்.
இவ்வூர் மக்கள் வழிபட்டு வரும் கிராம தேவதையான விளாவிஅம்மன் கோயிலும் இக்கோயில் அருகாமையிலே உள்ளது .சித்திரை மாதத்தில் பக்தர்கள் முத்தியாலம்மன் கோயிலுக்கு பக்கத்தில் உள்ள விளாவிஅம்மன் கோயிலில் ஊரணி பொங்கல் வைத்து படைத்து வழிபட்டு செல்கிறார்கள். அம்மனை கிரகமாக ஜோடித்து ஏரிக்கரையிலிருந்து பக்தியுடன் பம்பை உடுக்கையுடன் அழைத்து வந்து ஊரின் சேம நலம் குறித்தும், மழை குறித்தும் பூ போட்டு பார்த்து அறிந்து கொள்வது வழக்கம் . கிராம காவல் தெய்வமாக விளாவி அம்மன் கோயிலுக்கு வெளியே அய்யனாரப்பன் சிலையும் உள்ளது.
முத்தியாலம்மன் கோயிலில் பிரதி செவ்வாய், வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம் .ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. விரதமிருந்து வேண்டுவோர்க்கு பிள்ளைப்பேரு கிடைப்பதாகவும், நீண்ட நாட்களாக திருமணம் நடைபெறாமல் உள்ளவர்களுக்கு தடைகள் நீங்கி திருமணம் நடைபெறுவதாகவும், அம்மனை வழிபட்டு பலன் கண்டோர் தெரிவிக்கின்றனர்.
இந்த கிராமத்திற்கு மட்டுமின்றி, இவ் ஊரிலிருந்து வெளியூருக்கு இடம் பெயர்ந்தவர்கள், வெளி மாநிலத்தில் குடியேறியவர்கள் உள்ளிட்டவர்க்கும் குலதெய்வமாக இக்கோயில் உள்ளது. மேலும் அண்டை கிராமங்களுக்கும், குலதெய்வமாக முத்தியாலம்மன் விளங்கிவருவது சிறப்பு அம்சமாகவே கருதப்படுகிறது.
பொங்கல் திருநாள், கூழ் வார்க்கும் திருவிழா போன்ற முக்கிய திருவிழாக்களின் போது அம்மன் உற்சவ மூர்த்தியாக திருவீதி உலா நிகழ்வு நடைபெறுவது வழக்கம். அப்பொழுது பக்தர்கள் நேர்த்திகடனாக தண்டு மாலை, இரட்டைத் தேங்காய், நூற்று ஒரு தேங்காய் என பல வடிவங்களில் செலுத்துவார்கள். மேலும் இவ் ஊரில் பலரது பெயர்கள் முத்தியால் என்று அம்மன் பெயரை வைப்பது அம்மனை வேண்டியதற்கான நேர்த்திக்கடன் மட்டுமின்றி அம்மனின் அனுகிரகமாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். முந்தி வந்து அருளும் அருள்மிகு முத்தியாலம்மனை சென்று வணங்கிடுவோம், அவரின் அருள்சூழ மகிழ்ச்சியை என்றும் பெற்றிடுவோம்.
-எறும்பூர் கை. செல்வகுமார்,
செய்யாறு.