திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம் கூழமந்தல், காஞ்சிபுரம்- வந்தவாசி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து 99 கிலோ மீட்டர், காஞ்சிபுரத்திலிருந்து 19 கிலோமீட்டர், வந்தவாசியிலிருந்து 22 கிலோமீட்டர், செய்யாறிலிருந்து 19 கிலோமீட்டர் தொலைவுகளில் உள்ளது. கூழம(ப)ந்தல் தற்பொழுது ஒரு ஊராட்சி பகுதியாக காட்சியளித்தாலும் சோழர் காலத்தில் தொண்டை மண்டலத்தில் அமைந்த கோயில்களில் கலைச்சிறப்பும், சமய சிறப்பு மிகுந்த கோயிலாக அருள்மிகு விசாலாட்சி சமேத ஶ்ரீ உத்திர கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயில் திகழ்ந்துள்ளது.
முதலாம் ராஜேந்திர சோழனின் கங்கை வெற்றியின் நினைவாக தமிழகத்தில் இரு பெரும் ஊர்கள் தோற்றுவிக்கப்பட்டன. முதலாவது மாவீரன் ராஜேந்திர சோழன் தன் தலைநகரான கங்கைகொண்ட சோழபுரம் ஆகும். இது கங்கை வெற்றியின் நினைவாக கிபி 11ஆம் நூற்றாண்டு அளவில் தோற்றுவிக்கப்பட்ட மாபெரும் நகரமாகும்.அந்நகரில் மன்னரால் எழுப்பப்பட்ட ஆலயம் கங்கை கொண்ட சோழீஸ்வரன் என்று எசாலம் செப்பேடுகள் மூலம் அறிகின்றோம்.
முதலாம் ராஜேந்திரனின் காலத்தை எடுக்கப்பட்ட மற்றொரு பெருநகரம் காஞ்சிக்கு அருகில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் ஆகும். சோழர் காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட நகரம் அண்மை காலத்தில் கூழமந்தல் என்று அழைக்கப்பட்டு வருகிறது. இவ்வூர் ஜெயங்கொண்ட சோழமண்டலத்து காழியூர் கோட்டத்தில் பாகூர் நாட்டில் அமைந்திருந்தது என்பது கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
இக் கோவில் சுற்றிலும் உள்ள நிலத்தினை விட தாழ்நிலை தரைமட்டம் கொண்டதாக எந்தவித அடிப்படை ஆதாரம் இல்லாமல் தரையில் அமைந்துள்ளது. கருவறை, விமானம், அர்த்தமண்டபம், இடைநாடி மகா மண்டபம் என நான்கு பிரிவுகளாக கோயில் அமைந்துள்ளது. தெற்கு, கிழக்கு ,வடக்கு என்ற மூன்று திசைகளிலும் மகா மண்டபத்திற்குள் செல்ல வாயில்கள் அமைந்துள்ளது.
கோயில் கருவறை சதுர வடிவம் உடையது. கீழ் திசை நோக்கி உள்ளது. கருவறையின் நடுவே வட்ட வடிவமான ஆவுடையாரின் மீது நெடிய வடிவுடைய ருத்திர பாகம் சிவலிங்கமாக எழுந்துள்ளது. உருளை வடிவம் உடைய லிங்கத்தின் முகத்தில் பிரம்ம சூத்திர கோடுகள் வெட்டப்பட்டுள்ளன. ராஜேந்திரன் காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட லிங்க வடிவம் ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளாக வழிபாட்டில் நிலைத்து நிற்பது பெருமைக்குரியதாக கருதப்படுகிறது.
கருவறையில் உறையும் இறைவன் கங்கைகொண்ட சோழீஸ்வரர் ஈஸ்வரமுடைய மகாதேவர் என பல பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளார். இன்றும் அதே பெயரில் வழங்கப்படுவது வரலாற்று சிறப்புடையதாக கருதப்படுகிறது.
மேலும் நந்தியின் அமைப்பு தலை சாய்ந்த நிலையில் இருப்பதும், இது பக்தர்களின் கோரிக்கையை செவிமடுத்து கேட்பதற்காக உள்ளதாகவும் கூறப்படுகிறது. கோவில் விமானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கல்வெட்டு எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் குடமுழக்கு நடைபெற்றதாக தகவல் ஏதும் கிடைக்காத நிலையில் கிராம பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று தொல்லியல் துறை அனுமதி வழங்கி கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் தேதி திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது.
அர்ச்சகர் சிவஸ்ரீ கோபிகிருஷ்ணன்,சிவத்தொண்டர் ரா. சீ. வெங்கட்ராமன் ஆகியோர் கூறியதாவது, "பிரதோஷம், மாசி சிவராத்திரி, சித்திரை வருடப்பிறப்பு ,ஐப்பசி அன்னாபிஷேகம் ,கார்த்திகை தீபம், தைப்பூசம் ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடு, சுவாமி திருவீதி உலா நிகழ்வு நடைபெறும். மேலும் சனி பிரதோஷத்தன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர் தினமும் காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும் மற்ற நேரங்களிலும் கோயில் தரிசிக்கலாம் ஆனால் கோயிலில் உள்ள மூலவர் அம்பாள் சன்னதிகள் பூட்டப்பட்டிருக்கும். இக்கோவில் கிராமத்தின் ஈசானை மூலையில் உள்ளது. மேலும் இக்கோயிலுக்கு பக்தி சிரத்தையுடன் வேண்டுபவருக்கு வேண்டியது கிடைக்கிறது. மேலும் அரசு பணி ,அரசியல் பதவி, எண்ணிய காரியங்கள் நிறைவேறும் வகையில் சக்தி வாய்ந்த ஈசனாக விளங்கி வருகின்றார். அனுபவத்தில் கண்ட பலனாக இருக்கிறது" என்றும் தெரிவித்தார்கள். கங்கைகொண்ட சோழீஸ்வரரை நாமும் சென்று தரிசிப்போம். நலமும், வளமும் பெற்று வாழ்வோம்.
-எறும்பூர் கை. செல்வகுமார்,
செய்யாறு.