திருமலை வையாவூர்.
“பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம் கொண்டங் குறைவார்க்குக் கோயில்போல் - வண்டு வளங்கிளரும் நீள்சோலை வண்பூங் கடிகை இளங்குமரன் தன்விண் நகர்" - என்பது பேயாழ்வாரின் பாசுரம்
திருப்பதிக்கு நிகரான திருத்தலம் என்று பல தலங்களைச் சொல்லுவோம். இந்த வையாவூர் தலமும் திருப்பதிக்கு நிகரான தலமாகப் போற்றப்படுகிறது.
திருப்பதி போலவே, இங்கேயும் முதலில் வராஹ தரிசனம். அதையடுத்து வேங்கடவன் தரிசனம். இங்கே பெருமாளின் திருநாமம், 'ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாள்'.
சஞ்ஜீவி மலையையே தூக்கிக்கொண்டு வந்தார் அனுமன். அப்படி மலையை உள்ளங்கையில் வைத்துக் கொண்டு பறந்து வந்தபோது, தட்சிண கருடகிரி எனும் மலையைத் தாண்டினார். அப்போது மலையை தன் வலது கரத்திலிருந்து இடது கரத்துக்கு மாற்றிக்கொண்டார். அந்த மலையை, தட்சிண கருடகிரி எனும் மலையில் வைக்காமல் வந்தார் என்பதால், பின்னாளில் அந்த மலை திருமலைக்கு நிகரான மலையாகவே போற்றப்பட்டது. அந்த ஊர் ‘வையாவூர்’ என்றாயிற்று.
இரண்யாட்சனை அழித்து பூமியை நிலைக்கொண்டு வந்து, பூவுலகில் நிம்மதியைத் தந்தருளிய வராஹப் பெருமான், ’பூலோகத்தில் நான் எழுந்தருள இருக்கிறேன். அதற்கொரு மலை வேண்டும்’ என கருடாழ்வாரிடம் கேட்க, வைகுண்டத்தில் இருந்து பர்வதத்தை எடுத்து வந்தார் கருடாழ்வார். பர்வதம் என்றால் மலை என்று அர்த்தம்.
திருமலை வையாவூர் மலை
மலைகளுக்கெல்லாம் மலை. அப்பேர்ப்பட்ட பிரம்மாண்ட மலையை எடுத்துவரும் போது அதிலிருந்து சிறு பகுதி பாலாற்றுக்கு அருகே விழுந்தது. ’இந்த இடமே நான் வசிக்க ஏதுவான இடம். எனக்கு விருப்பமான இடம் இதுவே!’ என அருளிய வராஹ மூர்த்தி, அங்கேயே எழுந்தருளினார். அதுவே திருமலை வையாவூர் மலை.
ஆதிசேஷ விமானத்தில் எழுந்தருளியுள்ளார் பெருமாள். ஆகவே, இது தட்சிண சேஷகிரி. வேங்கடே பெருமாள், தொண்டைமான் முதலான எண்ணற்றவர்களுக்கு தரிசனம் தந்த திருத்தலம் என்பதால், பிரசன்ன வேங்கடேச பெருமாள் என அழைக்கப்படுகிறார். இங்கேயுள்ள பாறையில், தேர்ச்சக்கரம் மற்றும் குதிரையின் குளம்பும் அச்சுகளாக இன்றைக்கும் தரிசிக்கக் கிடைக்கிறது.
இந்தத் தலத்தின் தாயாருடைய திருநாமம், 'ஸ்ரீஅலமேலு மங்கைத்தாயார்'. அழகும் கருணையும் ததும்பக் காட்சி தருகிறாள்.
மலையேறுவதற்கு 540 படிகள் இருக்கின்றன. அதேசமயம், மலையின் மீது கோயில் வாசல் வரை, வாகனங்களிலேயே வந்து செல்லலாம் என்பது சிறப்பு.
அழகிய மலை. அற்புதக் கோயில். இங்கே உள்ள தீர்த்தம் வராஹ தீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் புதன் கிழமைகளிலும் சனிக்கிழமைகளிலும் இங்கு பெருமாளுக்கு சிறப்புப் பூஜைகள் விமரிசையாக நடைபெறுகின்றன. மாதந்தோறும் வருகிற திருவோண நட்சத்திர நன்னாளில், பெருமாளுக்கு விசேஷ பூஜைகளும் திருவோண தீபமும் ஏற்றி வழிபாடுகள் அமர்க்களப்படுகின்றன.
மனதில் என்ன குறைகள் இருந்தாலும், இந்தத் தலத்துக்கு வந்து, ஸ்ரீஅலமேலு மங்கைத் தாயாரிடமும் ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமாளிடம் பிரார்த்தனையாக வைத்துவிட்டால் போதும்... விரைவில் நிறைவேற்றித் தந்தருளுவார்கள் பெருமாளும் தாயாரும்.
திருமண பாக்கியம், குழந்தை வரம், நல்ல உத்தியோகம், கடன் பிரச்சினைகளில் இருந்து விடுதலை முதலானவற்றுக்காக பிரசன்ன வேங்கடேச பெருமாளிடம் வேண்டிக்கொண்டு தொடர்ந்து தரிசனம் செய்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியதும் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்திச் செல்கிறார்கள்.
திருப்பதிக்கு வேண்டிக்கொண்டு அங்கு சென்று பிரார்த்தனையை நிறைவேற்ற இயலாதவர்கள், திருமலை வையாவூருக்கு வந்து வராஹரையும் அலமேலுமங்கை தாயாரையும் பிரசன்ன வேங்கடேச பெருமாளையும் தரிசித்து நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
செங்கல்பட்டில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் இருக்கிறது திருமலை வையாவூர். இந்த சின்னஞ்சிறிய கிராமத்தில் அழகிய மலையும் இயற்கை சூழ்ந்த எழிலுமாக கோயில் அமைந்திருக்கிறது.
திருமலை வையாவூர் ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாள் தரிசனம் காண, கோடி புண்ணியம் கிடைக்கும்!
-வி.சி. கிருஷ்ணரத்னம்,
F1, மங்கள் ஃபிளாட்ஸ்,
(எஸ்.எஸ்.வி. ஹாஸ்டல் அருகில்)
ஆர்.எம்.ஆர். அவென்யூ,
28, ஞானாம்பிகை தெரு,
காட்டாங்குளத்தூர் & போஸ்ட்
செங்கல்பட்டு மாவட்டம்,
பின் - 603 203.