Breaking News:
tamilnadu epaper

எங்கள் குலதெய்வம் 'வடமட்டம் காத்தாயி அம்மன்' சிறப்பு

எங்கள் குலதெய்வம் 'வடமட்டம் காத்தாயி அம்மன்' சிறப்பு

'காத்தாயி' அம்மன் கிராமப்புறங்களில் அதிகமாக காணப்படும் தெய்வம்.

காக்கும் தொழிலை செய்வதால் காத்தாயி என்று மக்கள் அழைக்கின்றனர்.

தமிழ் கடவுள் முருகன் மனைவியான வள்ளி தேவியின் இன்னொரு 

ரூபம் தான் காத்தாயி அம்மன். 

 

 

சோழர்கள் ஆட்சி செய்த காலம் தொட்டே காத்தாயி அம்மன் வழிபாடு 

வழக்கத்தில் இருந்திருக்கிறது. சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு என்று 

சொல்லலாம். சோழ மன்னர்களில் ஒருவரான விக்கிரம சோழன் 

(கி.பி. 1118-1135) காத்தாயி அம்மனை குலதெய்வமாக வழிபட்டு வந்ததாக தகவல்கள் உள்ளன.  

விக்கிரம சோழன் ஆட்சி காலத்தில் கங்கை கொண்ட சோழபுரம் தலைநகரமாக 

இருந்தது. அதற்கு அருகில் உள்ள ஊர் காட்டுமன்னார்கோயில். அங்கே பழமையான 

ஒரு காத்தாயி அம்மன் கோயில் உள்ளது. சோழர்களின் காவல் தெய்வமாக இருந்ததால் 

பல ஊர்களில் காத்தாயி அம்மனுக்கு கோயில் அமைந்திருக்கலாம்.

 

 

முருகனை மணந்து கொள்வதற்காக வள்ளி தேவி மானிட உருவெடுத்து காட்டில் வள்ளி குழியில் 

வேடன் நம்பிராஜனால் கண்டெடுத்து வள்ளி என்ற பெயரில் வளர்ந்து வந்தாள்.

பருவம் அடைந்ததும் வேடர் குல வழக்கப்படி தினைப்புனம் காக்க சென்றாள். 

நாளடைவில் காத்த ஆயியாக இருந்தவள் 'காத்தாயி' யாக மாறினாள். பின்னர் 

முருகன் அவரை சந்திக்கிறார். அவர்கள் திருமணம் எப்படி நடந்தது என்பதை 

'காயாத கானகத்தே நின்று உலாவும் நற்காரிகையே...மேயாத மான்..." அந்த 

கால காதல் பாடலை திரு.டி.ஆர்.மகாலிங்கம் அவர்கள் 1950 களில் ஸ்ரீவள்ளி 

படத்தின் மூலமாகவும் அவரின் நாடகங்கள் மூலமாகவும் மக்களிடம் சேர்த்தார். தாத்தா, பாட்டிகள் மூலமாகவும் சிலர் கேட்டுருக்கலாம்.

 

 

முருகன் வள்ளி திருமணம் முடிந்த பிறகு சிவபெருமான் காத்தாயியாகிய வள்ளிக்கு 

தனி ஆலயம் அமைக்கும்படி அட்டமா சித்திகளை கற்ற கஞ்சமலை சித்தர் என்பவரிடம்

 கேட்டுக் கொள்ள அதன்படி உருவானதுதான் கும்பகோணம் அருகில் உள்ள சித்தாடி என்ற ஊரில் உள்ள காத்தாயி 

கோயில். (நன்றி சாந்திப்ரியா பக்கங்கள் இணையம்).

அதன்பிறகு பல ஊர்களில் காத்தாயி கோயில்கள் அமைந்தன. 

 

 

திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்காவில் உள்ளது வடமட்டம் கிராமம் -

கும்பகோணம் காரைக்கால் சாலையில் செ.புதூர் என்ற ஊரில் இறங்கி செல்ல வேண்டும். இங்கிருந்து 

பரவாக்கரை கிராமத்துக்கு செல்லும் சாலையில் உள்ளது காத்தாயி அம்மன் கோயில். அருகில் 

உள்ளது திருநல்லம் உமாமகேஸ்வரர் கோயில். இக்கோயில் கண்டராதித்த சோழன் மனைவி 

செம்பியன் மாதேவியால் திருப்பணி செய்யப்பட்டது. சோழர் காலத்திய கல்வெட்டுகள் 

பல இக்கோயிலில் உள்ளன. கிராம தெய்வங்களாக போற்றப்படும் காவல் தெய்வங்களுக்கு 

பெரும்பாலும் கல்வெட்டு ஆதாரங்கள் கிடைப்பதில்லை. செவி வழி செய்திகள்

மட்டுமே சிலர் சொல்கின்றனர். இங்குள்ள பகுதி சோழர்கள் ஆட்சிக்குட்பட்டதாக 

இருந்ததால் இங்கிருக்கும் கோயில்களை பழமையானதாக எடுத்துக்கொள்ளலாம். இந்த 

கோயில் நுழை வாயிலில் பிரம்மாண்டமான வேப்பமரம் ஒன்றுள்ளது. சுமார் 500 ஆண்டுகளுக்கு 

மேல் உள்ளதாக இருக்கலாம். அதைப் போல ஒன்றை சில இடங்களில் மட்டுமே பார்க்கலாம்.

அதை ஆதாரமாக வைத்து இந்த காத்தாயி கோயில் பழமையானது என்று உறுதியாக நம்பலாம்.

 

 

அந்த காலங்களில் கிராமப்புற மக்கள் தங்களை இயற்கை அழிவு மற்றும் தீயசக்திகளிடம் 

இருந்து காப்பாற்ற காத்தாயி அம்மனை வழிபட்டார்கள். ஆதலால் காவிரி டெல்டா 

மாவட்டங்களில் பல ஊர்களில் காத்தாயி அம்மன் கோயில்களை பார்க்கலாம். காத்தாயி அம்மன் வரலாறு இதுதான்.

 

 

நூற்றுக்கும் மேற்பட்ட பிராமணர் குடும்பங்களுக்கு வடமட்டம் காத்தாயி அம்மன் குலதெய்வமாக 

இருக்கிறாள். அவர்கள் பல மாவட்டங்களில் பல மாநிலங்களில் தற்போது உள்ளனர். தன்னை 

நாடி வரும் பக்தர்களை காத்து அவர்கள் பிரச்சனைகளை தீர்த்து வைத்து நல்வாழ்க்கை 

வாழ அருளுவாள்.

 

 

ஆடிப்பூரம் இந்த கோயிலில் விஷேசமாக கொண்டாடப்படுகிறது. அன்று பால்க்குடம் 

எடுக்கப்படும். முருகன் திருக்கல்யாணம் நடைபெறும். பெரிய கார்த்திகை, தைப்பொங்கல் மற்றும் தைப்பூசம் ஆகியவை

இங்கு சிறப்பாக கொண்டாடப்படும்.

 

                               

-திருமா

ளம் எஸ்.பழனிவேல்

 

 

 

திருமாளம் எஸ். பழனிவேல்